தினமணி கொண்டாட்டம்

உயரமான சிலை!

17th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT


திருவனந்தபுரம் கோவளம் பீச்சிலிருந்து ஏழு கி.மீ தூரத்தில் "விழிங்ஞம்' பகுதியில் இருப்பதுதான் "ஆழிமல', கடலை ஒட்டி அமைந்திருக்கும் இந்தச் சிவன் கோவிலில் 58 அடி உயரமுள்ள சிவன் சிலை பொது மக்கள் பார்வைக்கு சென்ற டிசம்பர் 31 -ஆம் தேதியன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிவன் "கங்காதரேஸ்வரா' என அழைக்கப்படுகிறார்.

அவிழ்த்து விரித்த நிலையில் இருக்கும் ஜடாமுடியில் இளம்பிறையும், கங்காவும் இருப்பதாக சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கான்கிரீட்டால் செய்யப்பட இதைச் சிலை, கடல் காற்றின் உப்பை எதிர்கொள்ளும் சிறப்பு தன்மை கொண்ட சிமெண்ட், இரும்புக் கம்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலை திறன் மிளிரும் வண்ணம், சிலை கம்பீரமாக நிற்கிறது. கழுத்தில் உத்திராட்ச மாலைகளும், நாகமும் உண்டு. குன்றின் மேல் அமர்ந்திருப்பதாக சிலையை வடிவமைத்துள்ளார்கள். சிவன் சிலையில் இருக்கும் நான்கு கரங்களில் இரண்டு கரங்கள் உடுக்கு, திருசூலத்தைப் பிடிக்க ... மூன்றாம் கை தலைமுடியிலும், நான்காம் கை தொடை மீது வைத்திருப்பதாகவும் உருவாக்கியுள்ளார் சிற்பி தேவதத்தன். இந்த சிலையை உருவாக்க ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. சிலைக்கு கீழ் தியான மணடபம் ஒன்றும் உருவாகி வருகிறது.

உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை நேபாளத்தில் உள்ள கைலாசநாத் மஹாதேவ் சிலை ஆகும். சிலையின் உயரம் 143 அடி. இந்த சிலை நிற்கும் வடிவத்தில் அமைந்துள்ளது. தரையில் அமர்ந்து தியானம் செய்யும் நிலையில் கர்நாடகத்தில் உடுப்பிக்கு அருகில் இருக்கும் முர்தேஸ்வர் சிவன் சிலையின் உயரம் 123 அடி. இந்த சிலையும் படு கம்பீரமாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

நேபாள நாட்டின் போகாரா பும்டி கோட் மலைக்குன்றில் 52 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த சிலை சிவன் அமர்ந்திருக்கும் நிலையில் உருவாகும்.

ஆதியோகி சிலை கோயம்புத்தூருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சிலை 112 அடி உயரம் கொண்டது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவால் வடிவமைக்கப்பட்டது. இது சிவனின் மார்பளவு சிலை.

பொதுவாக உலகத்தில் சிலைகளில் மிக உயரமான சிலை, நர்மதா நதிக்குப் பக்கத்தில் 597அடி உயரமுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைதான்..!

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT