தினமணி கொண்டாட்டம்

ஓ‌ய்வு பெற்றாலும் யாத சேவை!

17th Jan 2021 06:00 AM | -சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT


காஞ்சிபுரம் காந்தி நகரில் வசித்து வருபவர் பணி ஓய்வு பெற்ற தலைமைக்காவலர் ஜி.ஆர்.சீனிவாசன்(72) இவர் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்திருக்கிறாராம். அது மட்டுமின்றி அடக்கம் செய்யப்பட்டவர்கள் மோட்சத்திற்குச் செல்வதற்காகக் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயிலுக்குச் சென்று மோட்ச தீபம் ஏற்றுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

சாலையோரங்களில் சுற்றித்திரியும் மன நோயாளிகள், கைவிடப்பட்ட முதியோர்கள்,பிச்சை எடுப்பவர்கள் என பலரையும் நேரில் பார்த்து அவர்களுக்கு உணவும் கொடுத்து வருகிறார்.

இவரது சேவையைப் பாராட்டி பல்வேறு அமைப்புகளும் விருதுகளை வழங்கி கெளரவித்திருக்கின்றன. காஞ்சி சங்கராச் சாரியார், முன்னாள் ஆளுநர் ரோசய்யா,முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா எனப் பலரும் இவருக்கு விருதுகளை வழங்கி கெளரவித்திருக்கின்றனர். காஞ்சிபுரம் எஸ்.பி.தெ.சண்முகப்பிரியா இவரது சேவையைக் கேட்டு வியந்து போய் அண்மையில் இவருக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.

ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் ஜி.ஆர்.சீனிவாசனை அவரது இல்லத்துக்கே நேரில் சென்று சந்தித்தோம்.கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் ததும்பிய நிலையில் அவரது சோகக் கதையையும்,சமூகச் சேவைகளையும் சொன்னார்:

ADVERTISEMENT

""திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டுக் கிராமம் தான் எனது சொந்த ஊர்.ராதாகிருஷ்ணய்யா,ஜெயம்மா தம்பதியினரின் 2 வது மகனாகப் பிறந்தவன்.என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர், என் தந்தை தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராகப் பணிபுரிந்து அடிக்கடி உடல்நலமில்லாமல் பாதியிலேயே வேலையை விட்டு நின்று விட்டார். ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் குடும்பம் வறுமைக் குழிக்குள் விழுந்து விட்டது. பசியும்,பட்டினியுமாகவே வாழ்க்கை நகர்ந்தது.சாப்பிட வழியில்லாத நிலையில் எனது தாயார் உடல்நலம் குன்றி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். தாயாரை நல்லடக்கம் செய்ய எங்களிடம் காசில்லை.

அடக்கம் செய்ய வழியில்லாமல் 36 மணி நேரம் வீட்டிலேயே உடலை வைத்திருந்தோம். என் தாயார் இறந்த செய்தி கேட்டு,என் தந்தையின் நண்பர் ஒருவர் அப்போது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்."இவ்வளவு நேரமாகியும் ஏன் அடக்கம் செய்யவில்லை' என்று கேட்டார். அவரிடம் என் தந்தை, "அடக்கம் செய்ய ஒரு பைசாக்கூட இல்லை என்றும் பிள்ளைகளும், நானும் பசியாகவும் இருக்கிறோம்' என்றார். இந்த நிகழ்வு இப்போதும் என் மனக்கண் முன்பாக திரைப்படம் போல (கண்கள் குளமான நிலையில்,பேசமுடியாமல்) தெரிகிறது. என் தந்தையும் அவரது நண்பரும் இணைந்து பேருந்து நிலையத்திலிருந்த டீக்கடை

களில் பணம் வசூலித்து அவரது பேருதவியால் நல்லடக்கம் செய்தோம். பின்னர் சுடுகாட்டிலேயே நாங்கள் அனைவரும் அவரது காலில் விழுந்து அவருக்கு நன்றி சொல்லி அழுதோம்.அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து எனது தந்தையும் நோயாலும்,பசி தாங்காமலும் இறந்து விட்டார்.அப்போது தான் எனக்கு ஒரு எண்ணம் உதித்தது.

நான் என்றாவது ஒரு நாள் நல்ல நிலைமைக்கு வந்து,அநாதையாக யார் இறந்து போனாலும்,யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல்,அவர்களை நல்லடக்கம் செய்து,அவர்களுக்குக் காரியமும் செய்ய வேண்டும்,அந்த அளவுக்கு என்னை இறைவன் உருவாக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.காவல்துறையில் எனக்கு வேலையும் கிடைத்தது.பணியில் இருந்த போது ஒன்றிரண்டு ஆதரவற்ற சடலங்களை மட்டும் நல்லடக்கம் செய்ய முடிந்தது.பணி ஓய்வுக்குப் பிறகு இதுவரை 1323 சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளேன். அத்துடன் நின்று விடாமல் நல்லடக்கம் முடிந்தவுடனேயே காஞ்சிபுரம் சர்வதீர்த்தக் குளத்தில் அவர்களுக்குரிய காரியங்களைச் செய்கிறேன்.பின்னர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலுக்கும் சென்று அவர்களுக்கு மோட்ச தீபமும் ஏற்றி வருகிறேன். ஆண்டுக்கு ஒருமுறை காசிக்கு சென்று ஒவ்வொரு வருடமும் நான் அடக்கம் செய்யும் சுமார் 50 முதல் 60நபர்களுக்கு கயாவில் உள்ள விஷ்ணு பாதத்தில் பிண்டம் பிடித்து வைத்து அவர்களை மோட்சத்துக்கு அனுப்பும் செயலையும் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செய்து வருகிறேன்.

ஆதரவற்ற நிலையில் இறந்து விட்ட விபரம் காவல் நிலையங்கள் மூலமாக எனக்குத் தெரிய வரும்.அச்செய்தி கேட்டவுடன் நானே அந்த இடங்களுக்குச் சென்று,தேவையான இறுதிச்சடங்குகளைச் செய்து,நல்லடக்கமும் செய்வேன். என்னைப் பொருத்தவரை பிள்ளைகளுக்குச் சொல்ல விரும்புவது,  பெற்றோர்களைக் கடைசிக்காலத்தில் நல்லமுறையில் பார்த்துக் கொள்ளுங்கள்.'' என்று ஜி.ஆர்.சீனிவாசன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT