தினமணி கொண்டாட்டம்

வாசிப்பு பசிக்கு விருந்து 

17th Jan 2021 06:00 AM | -சுதந்திரன்

ADVERTISEMENT


நூல்களை வாசிப்பது என்பது அரிதாகிவிட்ட காலகட்டத்தில், நூல்களைச் சேமித்து வைப்பது அரிதிலும் அரிது. "வீட்டுக்கு ஒரு நூலகம்'. அன்றைக்கும் சரி... இன்றைக்கும் சரி... பலருக்கும் ஒரு கனவாகவே கற்பனையாகவே இருந்துவிடுகிறது. இந்த பொது விதியை மீறி நூல்களைச் சேமித்து வைப்பவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலர் நூற்றுக்கணக்கான நூல்களை வீட்டில் சேமித்து வைப்பார்கள். சிலரிடம் ஆயிரக்கணக்கான நூல்கள் இருக்கும். ஆனால் லட்சக்கணக்கான நூல்கள் அடங்கிய "நூல் வங்கி' வைத்திருப்பவர்கள் பல்லடம் மாணிக்கம் மற்றும் புதுக்கோட்டை "ஞானாலயா' கிருஷ்ணமூர்த்தி.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களை உள்ளடக்கிய ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது. இது போன்று வெளிநாட்டிலோ அல்லது இந்தியாவின் முக்கிய நகரத்திலோ இல்லை.

அரிய நூல்களைத் தேடி அலையும் நூல் பிரியர்களின் பசிக்கு விருந்தாக அமைந்திருப்பது விருத்தாசலத்தில் இருக்கும் "தமிழ் நூல் காப்பகம்'. இளமைக் காலத்திலிருந்து நூல்களைத் தேடித்தேடி சேகரித்து வாழ்நாள் சாதனையாக நூல் கடலைத் தேக்கி வைத்திருக்கிறார் நிறுவனர் புலவர் பல்லடம் மாணிக்கம். தனது நூல் சேகரிப்பு அனுபவங்களை மாணிக்கம் பகிர்கிறார்:

""எனது கல்லூரி படிப்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. அன்று முதல் நூல்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். எனது நூல் சேகரிப்பிற்கு முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை. தமிழர்களின் தொன்மைக்கான சான்றுகளாக அமைந்திருக்கும் இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்ட பெருமை உ.வே.சாமிநாதையர் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, ஆகியோரைச் சேரும். இவர்களில், சி.வை.தாமோதரம் பிள்ளை "பதிப்புத்துறையின் முன்னோடி'. 1835- ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நூல்களை அச்சிட்டு வெளியிட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். அதுவரைநூல்களை அச்சிட்டு விநியோகிக்கும் உரிமை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு மட்டுமே இருந்தது. விதி விலக்காக 1812 -இல் திருக்குறளைஅச்சிட்டு வெளியிட அனுமதி வழங்கினார்கள்.

ADVERTISEMENT

இலங்கை யாழ்ப்பாணத்து தமிழரான தாமோதரம் பிள்ளை படிப்பிற்காகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவரானார். சட்டமும் படித்தார். ஆங்கிலேயர் நூல்களை அச்சிடும் உரிமை பொது மக்களுக்கு வழங்கியதும் தாமோதரம் பிள்ளை தமிழ்ச் சுவடிகளைத் தேடிச் சேகரிக்க ஆரம்பித்தார். அந்தக் காலகட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் பனையோலைகளிலேயே எழுதப்பட்டிருந்தன.

"தமிழ்நாடு முழுவதும் உள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும் நான் தேடிக் கண்டவரை சிதிலமடைந்து இருந்தது, இன்னும் சில ஆண்டுகளுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, பயனுடைய வகையில் அச்சிடலானேன்... ஏடு எடுக்கும் போது ஓரம் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஒன்றைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையுமின்றி நாலா புறமும் சிதிலமடைந்து உள்ளது' என்று தாமோதரம் பிள்ளை பதிவு செய்திருப்பது தமிழ் இலக்கியங்கள் எத்தகைய அழிவு நிலையில் இருந்தன என்றும், அவற்றைக் காப்பாற்ற உ.வே.சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, எத்தனை கஷ்டங்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகி இருப்பார்கள் என்பதையும் நமக்குச் சொல்கிறது. தமிழ் கூறும் நல்லுலகம் தமிழ் இருக்கிற காலம் வரை இந்த மூன்று மூர்த்திகளுக்கும் கடமைப்பட்டுள்ளது.

நீதிநெறி விளக்கம், திருத்தணிகைப் புராணம், கலித்தொகை, சூளாமணி, ஆதியாகம கீர்த்தனம் முதலிய தமிழ் இலக்கிய நூல்களை அச்சிட்டு தாமோதரம் பிள்ளை வெளியிட்டார். தொல்காப்பியம் - சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, வீரசோழியம், இறையனார் அகப்பொருள், தொல்காப்பியம் - பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, இலக்கண விளக்கம், தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியர் உரை முதலிய இலக்கண நூல்களையும், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆராய்ந்து பதிப்பித்தார்.

இன்றைய தமிழ்ப் பதிப்புத் துறை அறிவியல் முன்னேற்றம் காரணமாக நூல்களை அச்சிடுவதில் பலமடங்கு முன்னேறியுள்ளன. இந்த மூன்று மகான்கள் இல்லையென்றால் தமிழ் இலக்கியங்கள் சுவடு இல்லாமல் அழிந்து போயிருக்கும். இவர்கள் தமிழ் நூல்களைத் தேடி அலைந்ததுதான்... அவர்களின் உழைப்பின் காரணமாக வெளியான பழைய நூல்களைச் சேகரித்துக் காக்க என்னை இயங்க வைத்தது.

எனது சேகரிப்பில் 1800 -இல் ஆங்கிலேயரால் அச்சிடப்பட்ட தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் பெப்ரீஷியஸ் அகராதி உண்டு. சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை பல நூல்களின் முதல் பதிப்புகள் தமிழ் காப்பகத்தில் உள்ளது. நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக்கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம்,பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்று எதையும் விட்டுவைக்கவில்லை.மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு. நூல்களை வாசிப்பது அவரவர் விருப்பம். ஆனால் தமிழைக் காக்க வேண்டும் என்றால், தமிழ் நூல்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும். தமிழ் ஆர்வலர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் பசிக்குத் தீனி போட பழைய நூல்கள் தேவை. அதற்கு எனது சேகரிப்பு பயன்படும்.

நான் 80 வயதைக் கடந்துவிட்டேன். என்னால் நூலகத்தைப் பராமரிக்க முடியவில்லை. அதனால் தற்போது எனது நூல்களை நிர்வகிக்கும் பொறுப்பை கோவையில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம் அமைப்பிற்குக் கொடுத்துவிட்டேன். நூலகம் இந்தக் கல்லூரி வளாகத்தில் இயங்குகிறது'' என்கிறார் பல்லடம் மாணிக்கம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT