தினமணி கொண்டாட்டம்

சாதனைகளைத் தகர்த்த நட்சத்திர வீரர்கள்

சுஜித்குமார்


பிரேசிலைச் சேர்ந்த உலக கால்பந்து ஜாம்பவான் பீலேயின் கோல் சாதனைகளை நிகழ்கால பிரபல நட்சத்திர வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ஆகியோர் தகர்த்துள்ளனர்.

உலகளவில் அனைத்து விளையாட்டுகளையும் காட்டிலும், கால்பந்துக்கு தனி ஈர்ப்பு உள்ளது. அதிகளவில் ரசிகர்களை கொண்டதாகவும், விளையாடப்படும் ஆட்டமாகவும் கால்பந்து திகழ்கிறது.

மிகவும் பழமையான பெருமை கொண்ட கால்பந்து விளையாட்டு 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. பல்வேறு காலகட்டங்களில் முன்னேற்றத்தைக் கண்ட இந்த விளையாட்டு கடந்த 1904-ஆம் ஆண்டு முதல் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் (பிஃபா) நிர்வகிக்கப்படுகிறது. 

200 நாடுகளில் 25 கோடி வீரர்கள் கால்பந்தை ஆடி வருகின்றனர். அதிகளவு தொலைக்காட்சி ரசிகர்களையும் கொண்டதாக இந்த விளையாட்டு உள்ளது. 5 கண்டங்களிலும் கால்பந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

16-வயதில் தேசிய அணியில் பீலே: 

இத்தகைய பிரசித்தி பெற்ற விளையாட்டில் 20-ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த வீரராக பிரேசிலின் பீலே திகழ்கிறார். 1940-இல் பிறந்த அவர், 16 வயதில் பிரேசில் தேசிய கால்பந்து அணியில் இடம் பெற்றார். 1958, 1962, 1970 என மூன்று முறை உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டங்களை வென்ற ஓரே வீரர் ஆவார்.  பிரேசில் தேசிய அணிக்காக 92 ஆட்டங்களில் 77 கோல்களை அடித்துள்ளார்.

ஓரே கிளப்புக்காக 643 கோல்கள்:

தொழில்முறை கால்பந்து வீரராக சான்டோஸ் கிளப் அணிக்காக ஆடிய பீலே, 656 ஆட்டங்கள் மூலம் 643 கோல்களை அடித்தார். ஓரே கிளப் அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையாக இது திகழ்ந்தது. நூற்றாண்டின் பிஃபா சிறந்த வீரர் விருது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நூற்றாண்டின் வீரர் போன்ற விருதுகள் பீலேவுக்கு உரியதாகும்.

கின்னஸ் சாதனை கோல்கள்:

மேலும் சர்வதேச, கிளப் மற்றும் நட்பு ஆட்டங்கள் என அனைத்து வகையான 1363 ஆட்டங்கள் மூலம் 1279 கோல்களை அடித்து கின்னஸ் சாதனையும் புரிந்துள்ளார் பீலே.

நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி, ரொனால்டோ:

பீலே மற்றும் மாரடோனாவுக்கு இணையாக புகழ் பெற்று விளங்கும் நட்சத்திர வீரர்களாக லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டீனா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) ஆகியோர் உள்ளனர்.

இருவரும் கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு தரப்படும் தங்க காலணி விருதை தலா 5 முறை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதே இவர்களது ஆட்டத்திறனுக்கு சான்றாகும். 

மெஸ்ஸின் சாதனை 644 கோல்கள்:

ஸ்பெயினின் பிரபல கிளப் அணியான பார்சிலோனா கிளப்புக்காக ஆடி வரும் 33 வயதான மெஸ்ஸி, லாலிகா போட்டியில் ஹியுஸ்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 644-ஆவது கோலை அடித்தார். 

இதன் மூலம் பீலேயின் ஓரே அணிக்காக அதிக கோல்கள் அடித்த உலக சாதனையை தகர்த்தார் மெஸ்ஸி. மேலும் பார்சிலோனா அணிக்காக 750-ஆவது முறையாகவும் களமிறங்கி, 500-ஆவது லாலிகா ஆட்டத்திலும் பங்கேற்ற சிறப்பை பெற்றார்.

ரொனால்டோவின் 758 கோல்கள் சாதனை:

மற்றொரு நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (36)  கிளப் மற்றும் நாட்டு அணிக்காக அதிக கோல்கள் அடித்த பீலேயின் சாதனையை தகர்த்துள்ளார். 

இத்தாலி கால்பந்து லீக் போட்டியான சீரி ஏவில், உடனைஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ரொனால்டோ இச்சாதனையை நிகழ்த்தி உள்ளார். ஜாம்பவான் பீலே நிகழ்த்திய 757 கோல்கள் சாதனையை முறியடித்தார். ரொனால்டோ 758 கோல்களை அடித்துள்ளார்.  ஆஸ்திரிய-செக் நாட்டு வீரர் ஜோஸப் பைகான் மொத்தம் 759 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸி, ரொனால்டோ உள்ளிட்ட இருவரும் மேலும் பல சாதனைகளை நிகழ்த்துவர் என்பது திண்ணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT