தினமணி கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே... - 4

டாக்டர் எஸ். அமுதகுமார்


உலகின் மொத்த ஜனத்தொகை இன்றைய நிலவரப்படி சற்றேறக்குறைய சுமார் 784 கோடியே 51 லட்சம். இந்த ஜனத்தொகையில் பாதிப்பேருக்குக் கூட தனது உடலில் ஓடும் ரத்தம் எந்த வகையைச் சார்ந்தது எந்தப் பிரிவைச் சாராதது என்று தெரியாது.

உங்களது ரத்தவகை எது? என்று  கேட்டால் கூட "அதெல்லாம் எனக்குத் தெரியாது' என்று சொல்பவர்கள் தான் ஏராளம். மிகப் பெரிய மிக முன்னேறிய வல்லரசு நாடாகிய அமெரிக்காவிலேயே மொத்த  ஜனத்தொகை  சுமார் 33 கோடியே 24 லட்சம் பேரில் 66 சதவீதம் பேருக்கு மட்டுமே தாங்கள் எந்த ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியும். சுமார் 34 சதவீதம் பேருக்கு தங்களது ரத்தம் எந்த வகையைச் சார்ந்தது என்று தெரியாது. 2019- ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள கொலம்பியா ஒளிபரப்பு கம்பெனி சேகரித்த தகவல் இது. மெத்தப் படித்த அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால் மற்ற நாடுகளின் கதி என்னவென்று சற்று நினைத்துப் பாருங்கள்.

ரத்த குரூப் தெரிந்து நாம் என்ன பண்ணப் போகிறோம்? என்று சிலருக்கு எண்ணம். 

அவசரம் என்று ஒன்று வந்தால் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் இப்பொழுது அதற்கு என்ன அவசரம்? என்று அமைதியாக இருப்பவர்களும் ஏராளம். 

என்னுடைய தாத்தா,  பாட்டி,  நெல்லை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து அங்கேயே காலமானவர்கள். அவர்கள் தாங்கள் வாழ்ந்த நாள்களில் தங்களுடைய ரத்தம் எந்த வகை என்று பார்த்ததும் கிடையாது. பார்க்கச் சொன்னதும் கிடையாது. பார்க்க வாய்ப்பும் அதிகமாக ஏற்படவில்லை. தன்னுடைய ரத்தவகை என்னவென்று தெரியாமலேயே மறைந்தும் விட்டார்கள். என் தாத்தா பாட்டியைப் போல் அந்தக் காலத்தில் வாழ்ந்த பல தாத்தா பாட்டிகள் தங்களது ரத்த வகை என்னவென்று தெரியாமலேயே மறைந்திருக்கிறார்கள்.

படிப்பறிவில்லாதவர்கள் தான் இதிலெல்லாம் கவனம் செலுத்த மாட்டார்கள் என்று நாம் நினைப்பதுண்டு. அது தவறு நிறையப் படித்த அதிகாரிகளாக இருப்பவர்கள் கூட நிறையப் பேர் தனது ரத்தம் எந்த வகை?  என்று தெரிந்து வைத்துக் கொள்வதில்லை.

மனிதனுடைய ரத்த வகை ஒரு மர்மமான விஷயமாகும். இந்த மனித ரத்தவகை சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாக பழைய சரித்திரம் சொல்கிறது.  ஜீவ நதி போல்  கருவில் தோன்றிய நாளிலிருந்து ஆயுளின் கடைசி நாள் வரை நிற்காமல் ஒவ்வொரு மனிதனின் உடலுக்குள்ளும் ரத்தம் ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. ஒரே நிறத்தில் ஒரே மாதிரி தானே ஓடிக்கொண்டிருக்கிறது. அப்புறம் ஏ, பி, ஓ என்றெல்லாம் ரத்தப் பிரிவு எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? என்ற கேள்விகள் உங்களுக்குத் தோன்றலாம். 

1900- ஆவது ஆண்டுகளின் ஆரம்பத்தில் காரல் லேண்ட்ஸ்டெயினர் என்கிற வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒரு மனிதனுடைய ரத்தத்தையும் இன்னொரு மனிதனுடைய ரத்தத்தையும் சேர்த்து சேர்த்துப் பார்த்தார். சில ரத்த வகைகள் ஒரு பிரச்னையும் இல்லாமல் ஒத்துப்போனது. சில ரத்த வகைகள் கெட்டுப்போன பால் எப்படி திரி திரியாக திரண்டு போய்விடுமோ அதுபோல் ஒன்று சேராமல் முறிந்து விட்டது. இந்த முறையை பல தடவை பல பேருக்கு செய்து பார்த்து தான்  ரத்த வகைகளை அவர் கண்டுபிடித்தார். அதற்குப் பின்னர் அந்த ரத்த வகைகளுக்கு தனித்தனி பெயரிட்டாராம். 1909-இல் லேண்ட்ஸ்டெயினர் கண்டுபிடித்த இந்த அபூர்வ செயலைப் பாராட்டி அவருக்கு 1930-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நமது முடியின் நிறம் கருவிழியின் நிறம் உடல்வாகு உடலின் தன்மை இதுபோல நமது ரத்த வகையும் நமது பெற்றோர்களிடமிருந்து மரபணு ரீதியாக மரபணு மூலமாக நமக்கு வந்து சேருகிறது. ஆகவே நமது ரத்தவகை ஒன்று நமது தாய் அல்லது நமது தந்தையின் ரத்தவகையே இருக்கும். இதைத்தான் விளையாட்டாக பெற்றோர்களின் சீதனம் என்று சொல்வதுண்டு. 

வெவ்வேறு வகையான விலங்குகளுக்கு வெவ்வேறு வகையாக ரத்தம் இருக்கும். செல்லப் பிராணிகளான நாய்களுக்கு 4 ரத்த வகைகள் பூனைகளுக்கு 4 ரத்தவகை குதிரைகளுக்கு 8 ரத்தவகைகள் பசு மாடுகளுக்கு 800 ரத்த வகைகள் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு.

அமெரிக்காவில் "ஓ பாசிடிவ்' ரத்தவகை உள்ளவர்கள்தான் அதிகமாம். அதாவது மொத்த அமெரிக்க ஜனத்தொகையில் (சுமார் 33 கோடியே 23 லட்சம்) சுமார் 39 சதவீதம் பேர்கள் "ஓ பாசிடிவ்'  ரத்த வகையைச் சேர்ந்தவர்களாம். அதே மாதிரி ரொம்பக் குறைவான ரத்தவகை உள்ளவர்கள்  "ஏ.பி நெகட்டிவ்' தானாம். அதாவது மொத்த ஜனத்தொகையில் சுமார் (0.5) அரை சதவீதம் பேர்கள்தானாம்.

உங்கள் வீட்டிலோ உங்கள் குடும்பத்திலோ உங்களது பக்கத்துவீட்டிலோ  நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலோ உங்களைச் சுற்றியிருக்கும் நான்கு பேரிடம் உங்களது ரத்தம் என்ன வகை என்று கேட்டுப் பாருங்கள். பாதிப்பேர் தெரியும் என்று சொல்வார்கள்.  மீதி நபர்கள் தெரியாது என்றுதான் சொல்வார்கள். நமது ரத்தம் எந்த வகை எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்று குடிமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மயக்கமுற்ற ஒருவருக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்து தைரியத்தையும் கொடுத்தால் அடிபட்ட அந்த நபர் சில நொடிகளில் எழுந்து உட்கார்ந்து விடுவார்.

விபத்தில் சிக்கி லேசான காயங்களுடன் ரத்தம் வடிந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு காயம்பட்ட இடத்தில் இறுக்கமாக கட்டுப்போட்டு ரத்தம் வடிவதை நிறுத்தினால் சில நிமிடங்களில் எழுந்து உட்கார்ந்து விடுவார்.

விபத்தினால் அதிகக் காயங்களுடன் அதிக ரத்தம் வடிந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு போய் காயத்துக்குத் தையல் போட்டு ஒரு பாட்டில் ரத்தம் செலுத்தினால் சில மணி நேரங்களில் எழுந்து உட்கார்ந்து விடுவார். இதைத்தான் "உயிர் காக்கும் நேரம்' என்று சொல்வதுண்டு. விபத்தில் சிக்கிய ஒவ்வொருவருக்கும் இந்த உயிர் காக்கும் நேரம் என்பது வெவ்வேறாக இருக்கிறது. இந்த உயிர் காக்கும் நேரம் யாருக்கு எப்பொழுது எங்கு வரும் என்று சொல்ல முடியாது. அந்த நேரத்தில், உங்களுடைய ரத்த குரூப் என்ன? என்று அவசர அவசரமாக கேட்கும்போது எனக்கு தெரியாது என்று சொன்னால் நேரம் வீணடிக்கப்படும். 

முதலுதவி சிகிச்சை கொடுக்க தாமதமாகும். வாய்க்கு வந்தபடி ஏதோ ஒரு ரத்த வகை என்று சொல்லவும் முடியாது. அது இன்னும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு வரும் வாய்ப்பு கிடைக்கும்போது நேரம் கிடைக்கும்போது ஓய்வாக இருக்கும்போது ரத்தப் பரிசோதனை மையத்துக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்து உங்களது ரத்தம் எந்த வகையைச் சேர்ந்தது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

(தொடரும்)

பிரபலங்களின் ரத்த வகை

அமெரிக்காவின் 41-ஆவது ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர்,  புகழ்பெற்ற அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்றோரெல்லாம் "ஏ' ரத்தவகையைச் சேர்ந்தவர்களாம். அமெரிக்க நடிகர் ஜான் நிக்கல்ஸன், ஹாலிவுட் பாடகர் பால் மெக்கார்ட்னி  முதல்  ஜப்பான் திரைப்பட இயக்குநர் அகிரா குரோஸவா போன்றோரெல்லாம் "பி' ரத்தவகையைச் சேர்ந்தவர்களாம். அமெரிக்காவின் 35 -ஆவது ஜனாதிபதி ஜான். எப் கென்னடி,  ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோ,  நடிகர் ஜாக்கிசான் போன்றோரெல்லாம் "ஏ.பி' ரத்தவகையைச் சேர்ந்தவர்களாம். சோவியத் யூனியன் தலைவர் கார்பசேவ்,  இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்,  40-வது அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகன், மோட்டார் பந்தய வீரர் எல்விஸ் ப்ரீஸ்ட்லி போன்றோரெல்லாம் "ஓ '  ரத்தவகையைச் சேர்ந்தவர்களாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT