தினமணி கொண்டாட்டம்

வாசிப்பை ஊக்குவிக்கும் விநோத முயற்சி

பிஸ்மி பரிணாமன்

கரூர் - சேலம் புறவழிச் சாலையில் நாகம்பள்ளி என்ற இடத்தில் இயங்கி வருகிறது "வள்ளுவர் பெட்ரோல் பங்க்', பள்ளி மாணவர்கள் பத்து திருக்குறள் பிழையில்லாமல் மனப்பாடமாக ஒப்பித்தால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவித்திருக்கிறார் பங்க் உரிமையாளரான செங்குட்டுவன்.

திருக்குறளைப் பிரபலமாக்கும் முயற்சி குறித்து விளக்குகிறார் செங்குட்டுவன்:

""இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே மாணவர்கள் இடையே வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான். பொதுவாக வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ள நிலையில், நூல்களை வாசிக்கச் செய்யவே இந்தத் திட்டம். வாசிக்கும் நூல் திருக்குறளாகத் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் உண்டு. திருக்குறளைப் பொருள் தெரிந்து படித்தால் வாழ்க்கையில் எந்தத் தவறும் செய்யமாட்டார்கள்.

என் தந்தை பள்ளிக்கூடம் செல்லாதவர். சுய முயற்சியால் ஒவ்வொரு எழுத்தாக எழுத்து கூட்டி படித்தவர். அவருக்குத் திருக்குறள்தான் எல்லாம். "வள்ளுவர் எலெக்ட்ரிக்கல்ஸ்' என்ற கடையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். எங்களுக்கும் திருக்குறள் படிப்பித்தார். திருக்குறள் வழியில் வாழ்ந்து காண்பித்தார். படிக்க வைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை... குழந்தைகளுக்குப் பண்பாட்டைக் கட்டாயம் சொல்லிக் கொடுக்கணும்.. என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார். அப்பாவைக் கவர்ந்த மாதிரியே திருக்குறள் என்னையும் கவர்ந்தது. தந்தை வழியில் "வள்ளுவர் உணவு விடுதி', "வள்ளுவர் கலை மற்றும் மேலாண்மை கல்லூரி', "வள்ளுவர் பெட்ரோல் பங்க்' கரூரில் நடத்தி வருகிறேன்.

காரில் வந்து பள்ளி மாணவர்கள் திருக்குறளை சொன்னால் பெட்ரோல் கிடையாது. இரு சக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும். அதுவும் வண்டியின் டேங்க்கில் மட்டுமே பெட்ரோல் கொடுப்போம். பாட்டிலில் தர மாட்டோம். அப்பா அல்லது அம்மாவுடன் வரும் பிள்ளைகள் ஒரு முறை 20 திருக்குறள் ஒப்பித்துவிட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாகப் பெற்றுக்கொண்டாலும், வேறு 20 திருக்குறள் சொன்னால் அதற்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாகத் தருவோம்.

திருக்குறள் ஒப்பிக்க வரும் போது, என்னென்ன குறள்களை ஒப்பிக்கப் போகிறோம் என்பதைத் தனித்தாளில் எழுதிக் கொண்டு வர வேண்டும். அதில் மாணவன் அல்லது மாணவியின் பெயர், பள்ளியின் பெயர், இருசக்கர வாகனத்தின் எண் முதலிய தகவல்களை எழுதியிருக்க வேண்டும். ஒன்றாம் இரண்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் 20 குறள்களை மனப்பாடம் செய்வது சிரமம் என்பதால், அவர்கள் 10 குறள்கள் சொன்னாலும் போதும். அரை லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும். ஒருவர் எத்தனை லிட்டர் பெட்ரோல் வேண்டுமானாலும் இலவசமாகப் பெறலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் வேறு வேறு குறள்களை ஒப்பிக்க வேண்டும்.

திருக்குறள்களை எழுதுவதால், எழுதும் பழக்கம் ஏற்படும். வரும் ஏப்ரல் 30 வரை இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும். தினமும் குறைந்தது பத்து சிறார்கள் அப்பா அல்லது அம்மா அல்லது தாத்தாவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து குறள்களை ஒப்பித்துப் பெட்ரோல் பெற்றுச் செல்கின்றனர்.'' என்கிறார் 62 வயதாகும் செங்குட்டுவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT