தினமணி கொண்டாட்டம்

வாசிப்பில்லாத சமூகம் பின் தங்கும்!

பொ. ஜெயசந்திரன்

மாற்று சிந்தனைகளை விதைக்க வேண்டும் அறிவியல் பார்வையுடன் பகுத்தறிவுப் பூர்வமான படைப்புகள் எண்ணிக்கையில் பெருக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் உதயசங்கர். இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர் ரயில்வேயில் பணி செய்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர்.  தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்களின் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர், சிறந்த எழுத்தாளர் என்று பல விருதுகளை தட்டிச் சென்றவர். அண்மையில் மணப்பாறையில் நடைபெற்ற ஒரு விழாவில் இளங்கோவடிகள் விருது பெற்றவரை சந்தித்து பேசினோம்:

""1980-களிலிருந்து எழுதி வருகிறேன் முதலில் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த நான் பின்னர் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். 1998-இல்- "யாவர் வீட்டிலும்' என்ற முதல் சிறுகதைப் தொகுப்பு வெளியானது. அந்தத் தொகுப்பினைப் பற்றி தமிழிலக்கியத்தின் முக்கியமான விமர்சகர் க.நா.சுப்பிரமணியம் தினமணி "தமிழ்ச் சிறுகதை வளம்' என்ற கட்டுரையில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளரென்று பாராட்டி எழுதியிருந்தார். 12 சிறுகதை நூல்களும் 5 கவிதை நூல்களும் 1குறுநாவல் தொகுதியும் 19 சிறார் இலக்கிய நூல்களையும் 66 மொழி பெயர்ப்பு நூல்களையும் 7கட்டுரை நூல்களுமாக 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன்.  

மலையாள இலக்கியத்தின் மீது இருந்த ஈர்ப்பினால் ரயில்வேயில் உதவி நிலைய அதிகாரியாகப் பணியில் சேர்ந்த போது உடன் வேலை பார்த்த கேரளாவைச் சேர்ந்த நண்பர்களின் உதவியோடு மலையாள மொழியைக் கற்றுக் கொண்டு முதலில் 1997-ஆம் ஆண்டு வைக்கம் முகமது பஷீரின் சப்தங்கள் என்ற குறுநாவலையும் "கண்ணாடி பார்க்கும் வரையிலும்' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலையும், கிரேஸி என்ற எழுத்தாளரின்" நட்சத்திரம் வீழும் நேரத்தில்' என்ற சிறுகதை நூலையும், மாதவிக் குட்டியின் கதைகளையும், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டைப் பற்றிய 1 நூலையும் மொழி பெயர்த்திருந்தேன். பின்னர் இலக்கியத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் சுமார் 60சிறார் இலக்கிய நூல்களை மலையாளத்திலிருந்து மொழி பெயர்த்திருக்கிறேன். ஆங்கிலத்திலிருந்து சாதத் ஹசன் மாண்டோவின் சிறுகதை நூலையும் சிவஸ்வேதா செல்வியின் ஆங்கிலச்சிறார் இலக்கிய நூலையும் நேஷனல் புக் டிரஸ்டுக்காக இரண்டு நூல்களையும் மொழி பெயர்த்திருக்கிறேன். 

சிறார்களுக்கு அதிகமாக புத்தகங்கள் எழுதவேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது ?

பள்ளிப்பருவத்தில் நூலகம் சென்று சிறார் நூல்களையும் சிறார் பத்திரிகைகளையும் நண்பர்கள் கொண்டுவரும் காமிக்ஸ் புத்தகங்களையும் வாசித்த அனுபவமிருந்ததால் எப்போதும் சிறார் இலக்கியம் பற்றிய கவனமும் அக்கறையும் இருந்தது. 

அழ.வள்ளியப்பாவின் மறைவுக்குப் பிறகு சிறார் இலக்கியத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டது. தொண்ணூறுகளில் ஒன்றிரண்டாய் சிறார் கதைகளை எழுதிக் கொண்டிருந்த நான் 2000-க்குப் பிறகு தீவிரமாக சிறார்களுக்கான கதைகளையும் மொழி பெயர்ப்பையும் செய்யத் தொடங்கினேன். சிறார் இலக்கியம் தான் சிறார்களுக்கான வாசிப்பு வாசல் என்று நான் நினைக்கிறேன். சிறார்களுக்கான மகிழ்ச்சியையும், அன்புணர்வையும், இறையாண்மையையும், அறிவியல் பார்வையையும், சிறார் இலக்கியம் நிலாவைக் காட்டிச் சோறூட்டும் அம்மாவைப் போல கொடுத்து விடுமென்று நம்புகிறேன். 

நவீன காலத்துக்கேற்ப சிறார் இலக்கியமும் புதிய விழுமியங்களை, புதிய அனுபவங்களை, புதிய கருப்பொருள்களோடு எழுதப்பட வேண்டுமென்ற ஆவல் தான் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுப்படக்காரணம்.வாசிப்புக்கு எப்போதும் ஒரு இடத்தை நாம் கொடுக்க வேண்டும். இதை நம்முடைய அரசாங்கம்  அக்கறையுடன் கவனிக்க வேண்டும். புத்தகம் வாசிப்பில்லாத சமூகம் வரலாற்றில் பின்தங்கிவிடும். 

இன்னும் எழுத நினைக்கும் புத்தகம் பற்றி...? 

நிறைய இருக்கிறது என்னுடைய ஆசான் கி.ராஜநாரயணன் தன்னுடைய 98வயதிலும் "அண்டரண்டா பட்சி' என்ற குறுநாவலை எழுதி வெளியிட்டார். அவரைப் போலவே எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். என்னுடைய ரயில்வே பணி அனுபவங்களைக் குறித்த நாவல் எழுதுவதை என் லட்சியப் புத்தகமாக நான் நினைத்திருக்கிறேன். ரஸ்கின் பாண்டைப் போல சிறார்களுக்கு ஏராளமான புத்தகங்களை எழுதவேண்டும் இப்படி நிறைய இருக்கிறது.'' என்றார் உதயசங்கர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT