தினமணி கொண்டாட்டம்

ஓரம் போ....  'ஒமைக்ரான்'

ந.ஜீ.

சென்ற ஆண்டு கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு கரை ஏறும்கால கட்டத்தில் மீண்டும் அபாயம் வந்துவிட்டது. மனிதர்களிடையே வெகு விரைவில் பரவக்கூடிய புதிய உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய கரோனா வைரஸூக்கு "ஒமைக்ரான்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸ் சுமார் 30 மாறுதலுக்குள்ளாகியிருக்கிறதாம்..! ""உலக நாடுகள் கரோனா வராமல் தடுக்க கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பு மருந்துகள் இந்தப் புதிய வைரûஸ எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தும் என்பதை ஆய்வுகள் மூலம் தான் சொல்ல முடியும்'' என்கிறார் எய்ம்ஸ் தலைமை மருத்துவர் டாக்டர் ரன்தீப் குலேரியா.

இதுவரையில் "ஒமைக்ரான்' வைரஸ் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், பெங்களூர் விமான நிலையத்தில் நவம்பர் 27 -இல் வந்திறங்கியிருக்கும் இரண்டு தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர். சோதனைகளுக்குப் பிறகுதான் அந்த தொற்று கரோனா வைரஸால் வந்ததா அல்லது "ஒமைக்ரான்' வைரஸ் மூலம் வந்துள்ளதா' என்று தெரியவரும். இந்த செய்தி இந்தியர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இந்தியப் பங்கு சந்தைகள் உள்பட சர்வதேச பங்கு சந்தைகள் "ஒமைக்ரான்' பரவல் பீதியில் தள்ளாட ஆரம்பித்துவிட்டன.

"இந்திய மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. தடுப்பு ஊசிகள் போட்டுக் கொள்ளாதவர்கள் உடனே போட்டுக் கொள்ள வேண்டும்' என்ற எச்சரிக்கையையும் டாக்டர் ரன்தீப் விடுத்துள்ளார்.

"ஒமைக்ரான்' தென்னாப்பிரிக்காவில் தலைகாட்டியிருப்பதைத் தொடந்து போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேலிலும் தனது வலையை விரித்திருக்கிறதாம். நெதர்லாந்து, இங்கிலாந்து, டென்மார்க், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் கரோனா பாதிப்பு அதிகமாக... "அது ஒமைக்ரான் வைரஸால் வந்த வினையோ' என்று அந்த நாடுகள் கலங்கிப் போயுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடியதாக இருந்தாலும், எப்போது வெடித்துப் புறப்படும் என்று சொல்ல முடியாத நிலைமை. "ஒமைக்ரான்' எரிமலையின் விளிம்பில் இந்த உலகம் நிற்கிறது' என்பது மட்டும் உண்மை. இஸ்ரேல் உட்பட பல நாடுகள் விமானப் பயணக் கட்டுப்பாடுகளை அறிவிவித்துள்ளன. நியூயார்க் மாநிலத்தில் அவசர நிலை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன.

கரோனா வைரஸின் இதர செயல்களை விட "ஓமைக்ரான்' ஆறு மடங்கு வேகமாக பரவும் தன்மையுடன், 32 வகை செயல்களை கொண்டுள்ளதாம்..! "ஒமைக்ரான்' தொற்றிக் கொண்டுள்ளது என்பதற்கு அறிகுறிகள் காய்ச்சல், உடல்சோர்வு, தசைகளில் வலி மற்றும் புண் ஏற்படுதல், லேசான இருமல். "ஒமைக்ரான்' வைரஸால் பாதிக்கப்பட்ட சிலருக்கு மணம், சுவையை உணர்வதில் பிரச்னை எதுவும் இல்லையாம். கலவரப்படுத்தும் செய்திகளிடையே ஆறுதல் தரும் செய்தியும் உண்டு. கரோனா தடுப்பூசி இரண்டு போட்டுக் கொண்டவர்களுக்கு "ஒமைக்ரான்' தொற்று ஏற்படவில்லையாம். தென் ஆப்பிரிக்காவின் 6 வயது சிறுமிக்கு "ஒமைக்ரான்' தொற்று ஏற்பட, தந்துவரும் சிகிச்சையில் சிறுமி தேறி வருவதும் நம்பிக்கை தரும் செய்தி.

"ஒமைக்ரான்' வைரஸ்ஸின் உண்மையான குணாதிசயங்களைக் கண்டுபிடிக்க சில வாரங்கள் தேவைப்படும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தென் ஆப்பிரிக்காவில் மொத்த கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்களில் 75 சதவீதம் மாறுபட்ட "ஒமைக்ரான்' வைரஸின் பங்களிப்புதானாம்...!

கரோனா தொற்று நோயை எதிர்த்துப் போராட தடுப்பூசி ஒரு கேடயம் என்றாலும், தடுப்பூசி என்பது தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் மந்திரம் அல்ல. தீவிரமான பரிசோதனை, தொடர்புத் தடம் அறிதல், தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவையே கரோனா, "ஒமைக்ரான்' போன்ற வைரஸ்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தும்.

தளர்வுகள் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. திரை அரங்குகள் பழைய நிலை போன்று இயங்குகின்றன. பேருந்துகள் முழுமையாக போய் வருகின்றன. சமூக இடைவெளியை யாரும் கடைப்பிடிப்பதில்லை. முகக்கவசத்தை மக்கள் மறந்துவிட்டார்கள். இனி கரோனா கட்டுப்பாடுகளுக்கு மீண்டும் திரும்பிப் போவது மிகவும் சிரமம். ஆனால், எச்சரிக்கை நடவடிக்கைகளாக சமூக இடைவெளி, முகக்கவசம், அவசியம் இல்லாமல் வெளியே போகாமல் இருந்தால் கரோனா, "ஒமைக்ரான்' வைரஸ்களை தூரத்திலேயே நிறுத்திவிடலாம்...!

பயப்பட தேவையில்லை

""மூன்றாம் அலை "ஒமைக்ரான்' வடிவத்தில் வந்துள்ளது. மற்ற வைரஸ் விட இதன் மேற்புறத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றங்களை கொண்டுள்ளது. வேகமாக பரவும் தன்மை கொண்டது. அதனால் அனைத்து தரப்பும் அச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் அச்சப்பட தேவையில்லை. கரோனா வைரஸ் வகையை சார்ந்தது தான் இந்த "ஒமைக்ரான்' வைரஸ். விழிப்புணர்வுடன் இருந்தாலே போதும். வயதானவர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் சித்த மருத்துவம் மற்றும் நவீன மருத்துவரின் ஆலோசனையை பெற்று புற நோயாளி பிரிவில் இருந்தே சிகிச்சை பெறலாம். அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டு, எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நாள்தோறும் உப்பு நீரால் இரண்டு முறை வாய் கொப்பளிக்க வேண்டும. குளிர் காலம் என்பதால் வைரஸ் எளிதில் பரவும். அதனால் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காய்ச்சல் ஆரம்பிக்கும் போதே கவனித்து விட்டால் கவலைப்பட தேவையில்லை. முகக்கவசம், கை கழுவுதல், சமூக இடைவெளி போன்ற நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

தொற்று ஏற்படக் கூடாது என்பவர்கள் நிலவேம்பு குடிநீர், கபசுர நீர் குடிநீர் ஆடாதொடை குடிநீர், வாரத்திற்கு இருமுறை எடுத்தக் கொண்டாலே போதும். வைரஸ் தொற்றை முற்றிலும் தவிர்க்க முடியும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் இந்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் நோய் தொற்று ஏற்படாமல், சுலபமாக கடந்து செல்ல முடியும்'' என்கிறார் அரசு சித்த மருத்துவர் சதீஷ்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT