தினமணி கொண்டாட்டம்

ரஃபேல் நடாலின் சாதனைப் பயணம்

25th Oct 2020 06:00 AM | -பா.சுஜித்குமார்

ADVERTISEMENT

 

முயற்சி என்ற சக்தி வாய்ந்த சொல்லுக்கு ஏற்ப தீவிரமாக முயன்று, டென்னிஸ் ஜாம்பவானான ரோஜர் பெடரரின் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் சாதனையை சமன் செய்துள்ளார் மற்றொரு டென்னிஸ்  ஜாம்பவான் ரஃபேல் நடால்.

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஜோகோவிச்சை 6-0, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி,  களிமண் தரையின் முடிசூடா மன்னன் என்பதை நிரூபித்து 13-ஆவது பட்டம், மற்றும் 20-ஆவது கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

கால்பந்து ரசிகர்:

ADVERTISEMENT

ஸ்பெயினின் மல்லோர்கா பகுதியில் கடந்த 1986-இல் பிறந்த நடாலுக்கு சிறு வயதில் கால்பந்து ஆட்டத்தின் மீதே அதிக ஈர்ப்பு இருந்தது. பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவை தனது முன்னோடியாக கொண்டார் நடால். கால்பந்து வீரரான தனது உறவினர் மிகியுல் ஏஞ்சல் நடால் மூலமாக பார்சிலோனா அணியில் ஆடிய ரொனால்டோவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது அவரது சிறுவயதில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.
எனினும் அவரிடம் இயற்கையாக இருந்த டென்னிஸ் ஆடும் திறனைக் கண்ட மற்றொரு உறவினர் டோனி நடால், டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடுத்தினார். கால்பந்து, டென்னிஸ் என இரண்டிலும் பயிற்சி பெற்ற நிலையில், பள்ளிப் படிப்பில் அவர் தேர்ச்சி பெற மாட்டார் என தந்தை செபாஸ்டியன் பயந்தார். இதனால் நடால் கால்பந்துக்கு பதிலாக டென்னிஸ் விளையாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தத் தொடங்கினார்.
8 வயதிலேயே பிராந்திய அளவிலான 12 வயதுக்குட்பட்ட போட்டியில் பட்டம் வென்றார் நடால். தொடர்ந்து 12 வயதில் ஸ்பானிஷ் மற்றும் ஐரோப்பிய பட்டங்களை வென்றார். 14 வயதான போது, தேசிய டென்னிஸ் சம்மேளனம் அவரை பார்சிலோனா நகருக்கு வந்து பயிற்சி பெறுமாறு அறிவுறுத்தியது. ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை அனுப்பவில்லை. பின்னர் 2001-இல் தொழில்முறை வீரராக மாறிய நடால், முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பேட் கேஷை காட்சிப் போட்டி ஒன்றில் வீழ்த்தினார். தொடர்ந்து ஸ்பெயின் டேவிஸ்கோப்பை அணியில் இடம் பெற்று கோப்பையை கைப்பற்ற உதவினார்.

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்:

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவித்த நடால், தனது 19-ஆவது வயதில் 2005-இல் தான் பங்கேற்ற முதல் பிரெஞ்சு ஓபன் போட்டியிலேயே சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். தொடர்ந்து 2006, 2007- ஆம் ஆண்டுகளிலும் பட்டத்தைக் கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றியையும் பதிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக 2008-இல் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

19 ஆண்டுகள் டென்னிஸ் வாழ்க்கையில், புல்தரை மைதானத்தில் மட்டும் சிறிது தடுமாறி வெற்றி பெறுவது நடாலின் வழக்கமாகும். ஆனால் களிமண் தரை மைதானத்தில் அவரை வீழ்த்துவது என்பதை அத்தனை எளிதான விஷயமல்ல.

13-ஆவது பிரெஞ்சு ஓபன் பட்டம்:

இதன் காரணமாக பிரெஞ்சு ஓபன் போட்டியில் எவராலும் தகர்க்க முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளார் நடால். அப்போட்டியில் மட்டுமே 13 சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். விம்பிள்டன் போட்டிக்கு ரோஜர் பெடரர் என்றால், பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு நடால் என்பதை பொருந்திப் போன ஒன்றாகும். மொத்தம் 84 பட்டங்கள் நடால் வசம் உள்ளது.

பெடரர் சாதனை சமன்:

டென்னிஸ் உலகில் ரோஜர் பெடரர், ரஃபேல் நடால், ஜோகோவிச் உள்ளிட்டோர் பிக் த்ரீ என அழைக்கப்படுவது வழக்கம். குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் மூவரும் இணைந்து பெரும்பாலான கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை தங்கள் வசமே வைத்திருந்தனர்.  கடந்த 2018 ஆஸி. ஓபன் போட்டியில் மரின் சிலிச்சை வீழ்த்தி 20-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார் பெடரர்.
பெடரரின் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர் என்ற சாதனையை தற்போது தகர்த்துள்ளார் ரஃபேல் நடால். இதன் மூலம் இரு நட்சத்திரங்களும் தலா 20 சாம்பியன் பட்டங்களை வென்ற சிறப்பை பெற்றுள்ளனர்.
நடாலின் சாதனைப் பயணத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 35 ஏடிபி 1000 பந்தய பட்டங்கள், 21 ஏடிபி 500 பந்தய பட்டங்கள், 2 ஒலிம்பிக் தங்கம், போன்றவை அடங்கும். உலகின் நம்பர் 1 வீரராக 209 வாரங்கள் இருந்துள்ளார்.
பெடரர் வாழ்த்து:
20-ஆவது சாம்பியன் பட்டம் வென்ற நடாலை  பாராட்டுவது எனக்கு கிடைத்த பெரிய கெளரவம். எனது நெருங்கிய நண்பரான நடால் மீது சிறந்த வீரர், மனிதன் என்ற முறையில் மரியாதை உள்ளது. பல ஆண்டுகள் மைதானத்தில் எனது பிரதான எதிராளியாக திகழ்ந்தவர். இந்த வெற்றியை பெற நடால் தகுதியானவர் என வாழ்த்தியுள்ளார் பெடரர்.
34-ஆவது வயதில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ள நடால் வரும் ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி மேலும் சாதனை படைப்பார் என்பது திண்ணம் ஆகும். 

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT