தினமணி கொண்டாட்டம்

கரோனா ஏற்படுத்திய வாழ்க்கை மாற்றம்

18th Oct 2020 06:00 AM | -வனராஜன்

ADVERTISEMENT


கரோனா ஏற்படுத்திய பாதிப்பு பலரது வாழ்க்கையில் ஒவ்வொரு விதத்தில் எதிரொலிக்கிறது. உடலளவில், மனதளவில், தொழில் ரீதியாக என அவை உண்டாக்கிய பாதிப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும் அவற்றைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நல்ல விஷயத்துக்காக வெற்றிக் கண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் 24 வயதான ஓவியா கண்ணன். பி.பி.ஏ பட்டதாரியான இவர் சென்னை மையப்பகுதியான சைதாப்பேட்டையில் "அன்பு மெஸ்' என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்.

இனி  ஓவியா கண்ணன்  விவரிக்கிறார்:

""அப்பா கண்ணன் ஹோட்டல் தொழிலில் பல ஆண்டு காலம் ஈடுபட்டுள்ளார். நானும் பிளஸ் 2 முடித்தவுடன் அப்பாவுக்கு உதவியாக இருந்தேன். மேற்கொண்டு படிக்கவில்லை. இப்படியே வாழ்க்கை போய்விடக்கூடாது. நானும் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும். நாலு விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அப்பாவிடம் சொன்னேன். ஆனால், அவர் என்னை கல்லூரிக்குச் செல்ல சம்மதிக்கவில்லை. "நானே பத்து பேருக்கு வேலை கொடுக்கும் நிலையில் இருக்கிறேன். நீ எதற்கு படித்து வேலைக்குச் செல்ல வேண்டும். எனக்கு உதவியாக இரு போதும்' என்றார். ஒரு கட்டத்தில் என்னுடைய பிடிவாதத்தால் தான் படிக்க அனுப்பினார். 

பி.பி.ஏ படித்து முடித்து ஐ.டித்துறையில்,  சீனியர் எக்ஸ்கியூட்டிவாக  நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்பாவும் அவருடைய தொழிலை பார்த்துக் கொண்டு இருந்தார். மார்ச் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தேன். சில மாதங்களில் என்னுடைய சிறப்பான பணிக்காக ஊதிய உயர்வு கிடைத்தது. ஆனால் என்னுடைய தோழிகள் பலர் வேலையை இழந்து சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  இனி இதே நிலையில் நீடிப்பதை விட நாலு பேருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்பாவிடம் வேலை வேண்டாம் என்று எழுதி கொடுக்கப்போகிறேன் என்று சொன்னேன். "சரி' என்று சொல்லிவிட்டார். 

ADVERTISEMENT

அடுத்து என்ன செய்யலாம் என்று அப்பாவுடன் ஆலோசித்த போது "சிறிய அளவில் உணவகம் தொடங்கலாம் என்று என்னுடைய யோசனையை சொன்னேன். அதுவும்  குறைந்த விலையில் தரமான உணவை கொடுக்க வேண்டும் என்று ஐடியாவையும் சொன்னேன். இந்த கரோனா காலத்தில் பணம் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு உணவு மிக முக்கிய தேவையாக உள்ளது என்று நான் சொன்னதும் அப்பா வழிகாட்டினார். உணவகம் தொடர்பான சந்தேகங்களை அவரிடம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 

10 ரூபாய்க்கு சாதம்

எல்லா உணவகங்களையும் போன்று எங்கள் உணவகங்களில் அனைத்து விதமான உணவுகளும் கிடைக்காது. எங்களால் என்னென்ன உணவுகளை தயாரிக்க முடியுமோ அவற்றைத் தயார் செய்து பார்சல் செய்து விடுவோம். உதாரணமாக 4 இட்லி, 2 சப்பாத்தி, 2 இடியாப்பம், 1 தோசை என தயார் செய்யும் உணவுகளைப் பார்சல் செய்து தயாராக வைத்து இருப்போம். 10 ரூபாய்க்கு 250 கிராம் சாதம் வழங்குகிறோம். இதனுடன் 10 ரூபாய்க்கு 150 கிராம் சாம்பார் வாங்கினால் ஒருவர் நன்றாக சாப்பிட முடியும். மேலும் எந்த உணவு தயாராக உள்ளதோ அதனை அறிவிப்பு பலகை மூலம் தெரிவித்துவிடுவோம். வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட என்னுடைய தோழிகள் போன்று பலர் குறைந்த விலை உணவால் பசியாறினார்கள். பார்சல் மட்டுமே என்பதால் கடைகளில் கூட்டம் சேர்வதைத் தவிர்க்க முடிகிறது. குறிப்பாகக் கரோனா பரவலை தடுக்கும் வகையில் வெளித் தொடர்புகளை அனுமதிப்பதில்லை.

என்னையும், என்னுடன் பணியாற்றும் 12 பேரின் பாதுகாப்பை உறுதி செய்வது என்னுடைய கடமையாகும். உணவகம் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் இப்போது தான் லாபம் வர ஆரம்பித்துள்ளது. சைதாப்பேட்டை பகுதியை சுற்றி மேலும் 3 உணவகங்களைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறேன். 

உணவை நாம் தயார் செய்யும் போது மனநிலை மிகவும் முக்கியம் என்பதை அப்பா அடிக்கடி சொல்வார். ஒரு முறை சிறையில் காந்தியடிகள் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்கியவர் காலையில் எழுந்ததும், "என்னுடைய அம்மாவை நானே கொல்வது போல் கனவு கண்டேன். யார் எனக்கு நேற்று உணவு வழங்கியது என்று கேட்டார்.'  காந்திக்கு உணவளித்த நபர் அம்மாவை கோபத்தில் கொன்றதற்காக சிறைக்கு வந்தவர் என்பது பிறகு  தெரிய வந்ததாம். எனவே உணவை சமைப்பவரின் மனநிலை மிகவும் அவசியம். அதனை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்'' என்றார் ஓவியா.

""போதும் என்று நாம் சொல்லும் ஒரு பொருள் சாப்பாடு மட்டும் தான். அந்த சாப்பாட்டைச் சிறந்த முறையில் அளித்து மக்களை திருப்திபடுத்தினால் போதும், நமக்கு நல்ல பெயர் தானாக வந்துவிடும். என்னுடைய மகள் ஓவியா ஐ.டி துறைக்கு செல்லும் முன்பே என்னுடன் பணியாற்ற வா என்று தான் சொன்னேன். ஆனால் அவள் படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற அவளது ஆசைக்கு நான் தடை போடவில்லை. இந்த கரோனா காலத்தில் சோதனைக்கு ஆளாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மக்களுக்குக் குறைந்த விலையில் உணவளிக்கும் ஒரு சில தொழில் ரீதியான விஷயங்களை அவளுக்கு கற்றுக்கொடுத்தேன். அவள் படித்த படிப்பு இந்தத் தொழிலை மேலும் முன்னேற்ற உதவும் என நினைக்கிறேன். பாதை தெரியாமல் தடுமாறும், தடம் மாறும் குழந்தைகளுக்கு அப்பாவைத் தவிர வேறு யார் சிறப்பான பாதையைக் காட்ட முடியும்''  என்கிறார் ஓவியாவின் தந்தை கண்ணன். அவரது கேள்வி நியாயமானது தானே! 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT