தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 66: முக பாவத்தில் மன்னர் டி.எஸ்.பாலையா - குமாரி சச்சு

சலன்

பாலையா முன்னால் போய் நின்றாலும் தயக்கம் உள்ளுக்குள் இருந்தது. என்னைப் பார்த்ததும் ""உட்கார்'' என்று பாலையா அண்ணன் கூறினார். அவர் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். அவருடன் இருந்தவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர்தான் பிரபல நாவலாசிரியர் பி.வி.ஆர். அவருடன் வந்திருந்த மற்றவர்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் வணக்கம் என்று சொல்ல, அவர்களும் எனக்கு பதில் வணக்கம் தெரிவித்தார்கள். பாலையா அண்ணன் தொடர்ந்து சொன்னார். ""இவர் எழுதிய "நீரோட்டம்' என்ற நாவலை நாடகமாக மேடையில் போடப் போகிறோம். அதில் அருமையான கதாநாயகி வேடம் இருக்கு. நீ பண்ணினால் நான்றாக இருக்கும். நடிக்கிறாயா?'' என்று கூறி நிறுத்தினர்.

அந்த இடைவெளியை பயன் படித்துக் கொண்டு, ""ஐயோ, நாடகம் என்றால் எனக்கு பயம். சுமார் இரண்டு மணி நேரம் நடக்கும் ஒரு நாடகத்தில் உள்ள வசனங்களை மறக்காமல் மேடையில் பேசவேண்டும். அந்த அளவிற்கு எனக்கு முடியுமா என்று தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் எனக்கு நாட்டியத்தின் மீது ஆர்வம் அதிகம். நாங்களே இதற்காக ஒரு நாட்டியக் குழு வைத்து நடத்தி வருகிறோம். அந்தக் குழுவில் நான் இணைந்து மேடையில் தொடர்ந்து நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கிறேன். நாடகம், நாட்டியம் ஒரே தேதியில் வந்தால் பிரச்னை ஏற்படுமே'' என்று பேசி விட்டு நிறுத்தினேன்.

அதற்கு பாலையா அண்ணன், ""பரவாயில்லை. நீ எதற்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்றால், நாடகத்தில் நடித்தால் நடிப்பில் அனுபவம் கூடும். எவ்வளவு பக்க வசனமாக இருந்தாலும் சினிமாவில் ஒரே "டேக்'கில் பேசி விட முடியும். அந்தத் திறமையை நாடகத்தின் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்ல... ஒரே கதாபாத்திரத்தை வெவ்வேறு கோணத்தில் நீ ஒவ்வொரு நாளும் மேடையில் நடித்து பார்க்க முடியும். இதை நாடகத்தில் மட்டும் தான் பண்ண முடியும். இதையெல்லாம் விட சிறப்பானது, சினிமாவில் கிடைக்காதது நாடகத்தில் மட்டும்தான் கிடைக்கும். அது மக்களின் பாராட்டு. நீ சிறப்பாக நடித்தால் உடனடியாக கைதட்டல் மூலம் மக்களின் ஏகோபித்த பாராட்டு கிடைத்து விடும். இப்படி நாடகத்தின் மூலம் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும்'' என்று சொன்னார் பாலையா அண்ணன்.

""நான் யோசித்து பார்க்க எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் வீட்டில் நீங்கள் சொன்னதை எல்லாம் சொல்லி என் சம்மத்ததைப் பிறகு சொல்கிறேன்'' என்றேன்.

""இல்லை, இல்லை... நீ இந்த நாடகத்தில் நிச்சயமாக நடிக்க வேண்டும்'' என்று கண்டிப்பாக சொன்னார்.

அன்று நான் நாடக மேடை ஏற, பிள்ளையார் சூழி போட்டார் டி.எஸ்.பாலையா. அதன் பிறகு எனக்கு மேடை நாடகத்தில் நடிக்க விருப்பம் ஏற்பட்டது.
"நீரோட்டம்' வெற்றிகரமான நாடகம். அதிலும் எனது கதாபாத்திரமான "சாரு' மக்களின் பாராட்டைப் பெற்ற பாத்திரமாக ஆகிவிட்டது. அந்த கதாபாத்திரத்தை பார்க்கும் எவருக்கும் அனுதாபம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, பாலையா அண்ணனின் நடிப்பை நான் அருகில் இருந்து பார்க்கும் பேறு பெற்றேன். நகைச்சுவையில் எவ்வளவு முக பாவங்கள் இருக்கோ, அவ்வளவையும் அந்த "நீரோட்டம்' நாடகத்தில் நடித்து காண்பித்து யாவரையும் அசத்தி விடுவார்.

இந்த இடத்தில் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நகைச்சுவையில் உச்சம் தொட்ட "காதலிக்க நேரமில்லை' படத்தில் எல்லோரும் மறக்க முடியாத காட்சி என்றால் அது நாகேஷ், பாலையா அண்ணனுக்கு கதை சொல்லும் காட்சி தான். அதில் வசனம் நாகேஷுக்கு மட்டும். பாலையா அண்ணனுக்கு முக பாவங்கள் மட்டுமே. அதையும் சிறப்பாகச் செய்ததால்தான் அந்த காட்சி மக்களைக் கவர்ந்த காட்சியாக மாறிவிட்டது. வெகு சிறப்பாகவும் இருந்தது.
அதேமாதிரி "மதுரை வீரன்' படத்தில் வில்லனாக வருவார். அதையும் பிரமாதமாக செய்திருப்பார். "பாகப் பிரிவினை' படத்தில் தந்தையாக சிறப்பாக நடித்திருப்பார். இப்படி பல படங்கள், பல பாத்திரங்கள். "முகபாவத்தில் மன்னன்' அவர்.
அந்தக் காலத்தில் ஒரே இனிஷியலை கொண்டிருந்த நடிகர்கள் இருந்தனர். எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.
துரைராஜ், டி.எஸ்.பாலையா... இப்படி.
இவர்களில் டி.எஸ்.துரைராஜும், டி.எஸ்.பாலையாவும் நெருங்கிய நண்பர்கள். வெளியே போனால் கூட இருவரும் ஒன்றாகத் தான் செல்வார்கள். பாலையா அண்ணனிடம் ஒரு கேமரா எப்பொழுதும் இருக்கும். அது அந்தக் காலத்தின் 8 எம்.எம் காமிரா.
போகும் இடத்தில் எல்லாம் அந்த கேமரா மூலம் பல விஷயங்களைப் படம் எடுத்துக் கொண்டு வந்து, அதை ஒரு கதை வடிவத்தில் கோர்ப்பார்கள். அதை போட்டுக் காண்பித்து, அதனூடே இவரது குரலால், "என்ன, எது, எப்ப?' என்று சொல்வார்கள்.
ஒருமுறை அன்றைய சிலோனில் சுற்றுப்பயணம் செய்தபோது "உங்கள் நண்பன்' என்று பெயரை வைத்துக் கொண்டு அங்கு நடந்த நிகழ்ச்சி அனைத்தையும் எங்களுக்கு போட்டுக் காண்பித்தார், அது சிறப்பாக இருந்தது.
நகைச்சுவையில் இப்படி பேசினால்தான் மக்கள் ரசிப்பாங்க என்பது கிடையாது. சரியான வார்த்தைகள் பேச வேண்டும். காமெடியில் "டைமிங்' மிக முக்கியம்.
"அப்பன் மவனே நீ அடிப்பியாடா?' என்ற ஒரு வாக்கியத்தை வைத்துக் கொண்டு டி.எஸ்.துரைராஜும், டி.எஸ்.பாலையாவும் எங்களைச் சிரிக்க வைப்பார்கள்.
இந்த ஒரு வாக்கியத்தை 8 விதமான பாணியில் சொல்வார்கள். ஒவ்வொரு முறை சொல்லும் போதும் முக பாவம், குரல் மாறிக் கொண்டே இருக்கும். அந்தக் காலத்தில் வரும் காமெடியெல்லாம் யாரையும்
துன்புறுத்தாது.
ஒரு மாற்று திறனாளியை கேலி பண்ணுவது போலவோ, அவர்களைச் சுட்டிக்காட்டி பேசுவது போலவோ நகைச்சுவை இருக்காது.
அன்றும் ஒரு சிலர் இது மாதிரி காமெடி பண்ணிக் கொண்டிருந்தார்கள். அது தவறு. அவர்கள் மனசு வருத்தப்படும் அளவிற்கு காமெடி செய்யக் கூடாது. நானும் செய்ய மாட்டேன்; என் எதிரில் யாரும் இப்படி செய்யவும் விட மாட்டேன்.
அறிஞர் அண்ணா ஒரு முறை கலைவாணர் என்.எஸ்.கே.விடம் பேசும் போது ""நாங்கள் எல்லாம் பல்வேறு கதைகள் எழுதுகிறோம். "வேலைக்காரி', "ஓர் இரவு' என்று நானும் எழுதி இருக்கிறேன். ஆனால் நாங்கள் என்னதான் எழுதினாலும், நகைச்சுவை என்று வரும் போது நீங்கள் சொல்வதைத்தான் மக்கள் உன்னிப்பாகக் கேட்கிறார்கள். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் சரியான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். சரியான முறையில் சொல்ல வேண்டும். அது முக்கியம்'' என்று சொன்னாராம். எவ்வளவு தெளிவாக, சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் அறிஞர் அண்ணா.
"நீரோட்டம்' நாடகத்தில் நடித்த பிறகு எனக்கு மேடை நாடகங்களில் நடிக்க அதிக விருப்பம் ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து பல நாடகங்களில் நான் நடிக்கத் தொடங்கினேன்.
அடுத்து நான் வாணி கலா மந்திர் நடத்திய புதிய நாடகத்தில் நடித்தேன். வாணி கலா மந்திர் நாடகக் குழு ஓர் அமெச்சூர் குழு. ஒவ்வொருத்தரும் ஓர் உத்தியோகத்தில் இருப்பார்கள்.
ஒருவர் அரசு உத்தியோகத்தில் இருப்பார். ஒருவர் தனியார் துறையில் இருப்பார். ஒருவர் சொந்தமாக தொழில் செய்து கொண்டு இருப்பார். இப்படி பலரும் பல வேலைகளில் இருப்பவர்கள். மாலை ஆனால் எல்லோரும் கூடுமிடம் இந்த நாடக மேடை தான். நீரோட்டத்திற்குப் பிறகு நான் அடுத்து நடித்த நாடகத்தின் பெயர் "அஞ்சும் பத்தும்'. அந்தக் கதை ஜோசப் ஆனந்தன் எழுதியது. இரண்டரை மணி நேரம் நடந்த அந்த நாடகத்தில் நான் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்தேன். என் நடிப்பு மக்களிடம் சரியாகச் சென்றடைந்தது. எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள்.
அடுத்து நான் எந்த நாடகத்தில் நடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் நடிகர் ஏ.ஆர்.எஸ். ஒரு யோசனை சொன்னார்.
""சச்சு சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்தவர். அவர் கதாநாயகியாக சில படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் அவர் நகைச்சுவை பக்கம் திரும்பி இன்று சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறார். ஏன், அவருக்கு ஒரு கனமான பாத்திரம் கொடுத்து அவரது சிறந்த நடிப்பை மக்களுக்கு நாடகத்தின் மூலம் காண்பிக்கக் கூடாது?'' என்று கேட்டார்.
அவர் இப்படி கேட்டவுடன் நாடகக் குழுவில் உள்ள எல்லோரும் ஆமோதித்தார்கள். அதைத் தொடர்ந்து நாங்கள் எல்லோரும் ஒரு புதிய கதையைத் தேட ஆரம்பிதோம். அதற்காக பிரபலமான கதாசிரியர்கள் பலரைத் தொடர்பு கொள்ள முடிவெடுத்தோம். இன்று பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி, படங்களை இயக்கி, தேசிய விருதும் பெற்ற ஒருவரை அன்று அறிமுகப்படுத்தினோம் என்று கூறிக் கொள்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT