தினமணி கொண்டாட்டம்

கலைகளை கற்றுத் தரும் மாணவி

ஜெயப்பாண்டி

ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பதைக் கேள்விப்பட்டுள்ளோம்.

ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி தேவியாழிக்கு இது மிகப் பொருத்தமாக உள்ளதைக் காணலாம்.  தமிழ்ப் பாரம்பரிய கலைகளில் பெரும்பாலான கலைகளில் சிறந்து விளங்குகிறார் மாணவி தேவயாழி.

கரகம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பம், வாள் சுழற்றுதல், தீப்பந்தம் சுற்றுதல் எனப் பல கலைகளிலும் தேசிய அளவில் சிறந்து விளங்கி வருகிறார் என்பதுதான் அவரது சிறப்பம்சம். தேசத்தின் எட்டுத்திக்கும் சென்று பாரம்பரியக் கலைகளை அறிமுகப்படுத்தி வரும் அவரை ராமநாதபுரத்தில் சந்தித்தோம்:

""ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூர் சொந்த ஊர். அப்பகுதி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். அப்பா பாண்டி கார் மெக்கானிக். அம்மா சிவசங்கரி. வீட்டுத் தலைவி. அக்கா, அண்ணன் இருவருக்கும் கடைசி தங்கச்சி நான். வறுமையிலும் எனது தந்தை அக்கா, அண்ணனை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். பள்ளி மாணவியான நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பா, அம்மாவுடன் திருவிழாவுக்குச் சென்றபோது, ஒருவர் சிலம்பம், தீப்பந்தச் சக்கரத்தைச் சுற்றியதை பிரமிப்புடன் பார்த்தேன். அப்போது இதையே நாமும் கற்றுக் கொண்டால் என்ன என்ற எண்ணம் வந்தது. அப்பாவிடம் பயந்தபடியே கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் சிலம்பம் கற்க அனுமதித்தார். 

ஜவாஹர் சிறுவர் மன்றம் மூலம் லோக சுப்பிரமணி மாஸ்டரிடம் சேர்ந்து சிலம்பம் கற்றேன். ஏற்கெனவே சிறுவயதில் கராத்தே கற்று பசுமைப்பட்டை பெற்றதோடு நின்றுவிட்டேன்.

ஆகவே, சிலம்பத்தையும் அடிப்படையில் கற்றதுடன் நிறுத்தவே எண்ணினேன். ஆனால், சிலம்பம் கற்று மாவட்ட, மாநில அளவில் பாராட்டுச் சான்றுகளைப் பெற்ற நான், அதனுடன் சேர்த்து கரகாட்டம், வாள் சுற்றுதல், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பல தமிழ்ப் பாரம்பரியக் கலைகளையும் கற்கும் நிலை ஏற்பட்டது.

சிலம்பாட்டத்தில் கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் ராமநாதபுரம் மாவட்ட அளவில் முதலிரண்டு இடங்களைத் தக்கவைத்துள்ளேன். கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழக அளவில் நடந்த பல்வேறு கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும், பாராட்டுச் சான்றுகளையும் பெற்றுள்ளேன். தமிழின் பாரம்பரியக் கலைகளான சிலம்பம், சுருள், கரகாட்டம், கட்டைக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மல்லர் கயிறு ஏறுதல், யோகா பயிற்சி, தீப்பந்தம் சுற்றுதல் மற்றும் குத்துவரிசை எனப் பல கலைகளையும் கற்று அதில் வெற்றிகரமான திறனையும் வெளிப்படுத்தி வருகிறேன். கொடைக்கானல், திருவண்ணாமலை, தஞ்சை, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த கலை பண்பாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசையும், சான்றுகளையும் பெற்றுள்ளேன். புதுதில்லியில் கடந்த 2018- ஆம் ஆண்டு நடந்த பல்வேறு மாநில குழந்தைகளுக்கான தேசிய குழந்தைகள் கலைப் போட்டிகளில் பங்கேற்று கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட கலைகளுக்குப் பரிசும் பாராட்டும் பெற்றது மறக்கமுடியாதது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த கலைப் பண்பாட்டு நிகழ்ச்சியிலும் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் சுதந்திர, குடியரசு தின விழா நிகழ்ச்சிகளிலும், நெகிழித் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் எனது கலை நிகழ்ச்சிகள் தவறாது இடம் பெறவேண்டும் என அதிகாரிகள் கூறும் அளவுக்கு கலையில் தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறேன்.

ராமநாதபுரத்தில் தற்போது பிரபலமாகி வரும் மல்லர் கம்பம் கலையில் பயிற்சி பெற்றதுடன், கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகாசனம் செய்துள்ளேன்.  தமிழின் பாரம்பரியக் கலையை காக்கும் வகையிலே படிப்போடு கலைகளையும் கற்று அதை மக்களுக்கான நலனுக்குப் பயன்படுத்தி வருகிறேன்'' என்றார்.

கலையில் மட்டுமல்லாது... படிப்பிலும் சிறந்து விளங்கிவரும் தேவயாழி, வறுமையான நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், அதையெல்லாம் பொருள்படுத்தாது தமிழின் பாரம்பரியக் கலையை சிறுவர், சிறுமியருக்கு இலவசமாக கற்றுத்தந்தும் வருகிறார்.

படங்கள்: ஜெ.முருகேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT