தினமணி கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 67: நடிகரால் ஏற்பட்ட காயம் - குமாரி சச்சு

தினமணி

நாங்கள் முதலில் கேட்டது இயக்குநரும் - நடிகருமான மெளலி. அவரிடம் ""எங்களுக்கு ஒரு நல்ல நாடகம் எழுதித் தர முடியுமா? என்று கேட்டோம். அன்றைய நிலையில் அவர் பிஸியாக இருந்தார். அவர் யு.ஏ.ஏ. குழுவிற்கும் நாடகம் எழுதித்தர ஒப்புக் கொண்டிருந்தார். இதனிடையே அவர் நாடகத்திலும் நடித்துக்கொண்டிருந்தார். அது மட்டுமல்ல;  அவரே சுயமாக நாடக்குழுவும் ஆரம்பித்து நடத்தி வந்தார். இப்படி உள்ள நிலையில் அவர் எங்களுக்கு நாடகம் எழுத்தித் தர முடியாததால் எங்களுக்கு ஒரு நல்ல யோசனை சொன்னார். ""நான் மிகவும் பிசியாக இருக்கிறேன். என்னுடன் இருக்கும் விசு நல்ல திறமைசாலி. நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் வேலை செய்கிறோம். நான் அவரை அழைத்துக் கொண்டு வருகிறேன். நீங்கள் அவரை வைத்து உங்கள் நாடகங்களைப் போடலாம்'' என்று சொல்லி விசுவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 

விசு அதற்கு முன்பு யு.ஏ.ஏ. நாடகக் குழுவில் சேர்ந்து நகைச்சுவை வசனங்களை மட்டும் எழுதிக்கொண்டிருந்தார். நாடகத்தில் இருக்கும் மற்ற வசனங்களை எல்லாம் மற்றொருவர் எழுதுவார். இதை மனதில் கொண்டு ஏ.ஆர்.எஸ்.  விசு திறமைசாலி என்றும், அவரது எழுத்து சிறப்பாக இருக்கும் என்றும் விசுவை பற்றி நல்லவிதமாகச் சொல்ல, நாங்கள் விசுவை ஒரு நாடகம் எழுதித் தரச் சொன்னோம். இன்று அவர் மறைந்தாலும் பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி, படங்களை இயக்கி,   ஏவி.எம்மின் "சம்சாரம் அது மின்சாரம்' படத்திற்காக தேசிய விருதும்  பெற்றார்.

அப்பொழுது ஏ.ஆர்.எஸ். விசுவிற்கு ஒரு யோசனை சொன்னார்: ""சச்சுவை நாங்கள் ஒரு சீரியஸ் பாத்திரத்தில் நாடக மேடையில் நடிக்கச் செய்தால், மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று  தெரியவில்லை. காரணம், சச்சு நகைச்சுவை வேடத்தில் சினிமாவில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் நாடகத்தில் சச்சுவுக்கு  டபுள் ரோல் உள்ளது போல் எழுதுங்கள். ஒரு பாத்திரம் நகைச்சுவை நிரம்ப உள்ளதும், இன்னுமொரு வேடம் சீரியஸ் வேடமாகவும் இருக்கட்டும்'' என்று கூறினார். 

விசு எழுதிய "கனவு கண்டேன் கண்ணா' என்ற அந்த நாடகம் சிறப்பாக இருந்தது. ஏ.ஆர்.எஸ். இந்த நாடகத்தில்  முக்கிய பாத்திரத்தில் நடித்தார். மக்கள் இரு வேடங்களையும் ரசித்து பார்த்தனர். ஒரு பாத்திரத்தில் காதல், சென்டிமெண்ட் உள்ளதும் மற்றதில் நகைச்சுவை வேடத்தில் வந்தும் கலக்கினேன். இந்த நாடகம் வெற்றி அடைந்தது. என்னுடைய இரண்டாவது நாடகத்திலேயே இரு கதாபாத்திரங்களில் நடித்தேன். 

இதன் பிறகு நான் சுமார் பத்து நாடகங்கள் நடித்து இருப்பேன். அதில் ஒரு நாடகம்தான் "மெழுகு பொம்மைகள்'. அதுதான் பின்னாளில் "பைலட் பிரேம்நாத்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. படத்தில் ஸ்ரீதேவி செய்த வேடத்தை நான் நாடகத்தில் செய்தேன். அதன் கதை வெங்கட் எழுதியது. இந்த நாடகத்தில் நான் கண் தெரியாத மாதிரி நடிக்க வேண்டும். இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது நான் ஒரு விஷயத்தைக் கண்டுகொண்டேன் அல்லது கடைப்பிடித்தேன் என்றும் கூறலாம். கண்கள் தெரியாதவர்கள் அருகில் உள்ள எவரையும் தூரத்தில் இருப்பது போல் பாவிப்பார்கள். அப்படியே நானும் பார்த்து நடித்தேன்.

முதல் வரிசையில் இருப்பவர்களைப் பார்க்காமல் தூரத்தில் இருப்பவர்களைப் பார்த்து நடிக்க வேண்டும். அது மட்டுமல்ல யாராவது கூப்பிட்டால், சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்க்க வேண்டும். இதை எல்லாம் கவனத்தில் கொண்டு நான் நடித்தேன். மேடையில் அது போலேவே தொடர்ந்து செய்ததால் எனக்கு சிறிது பிரச்னை ஏற்பட்டது. நிஜ வாழ்க்கையிலும் இப்படித் தொடர்ச்சியாக நான் ஊடுருவி பார்க்கும் நிலை ஏற்பட்டது. அதை நீக்க பல நாள் நான் ரொம்பவும் சிரமப்பட்டேன். மற்றொரு நாடகம் "தோப்பில் தனி மரம்'. இந்த நாடகம் தலைமுறை இடைவெளி  பற்றியது. இப்படி வெவ்வேறு வகையான நாடகங்களில் நான் நடித்ததால் தான் இன்று கூட எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடிகிறது.  

நாடக நடிப்பு மிகவும் தேவைதான் என்று நான் ஆணித்தரமாகச் சொல்வேன். வசன உச்சரிப்பு, அதன் ஏற்ற இறக்கங்களையெல்லாம் சொல்லி கொடுப்பது நாடகம் தான்.  நாடகத்தில் ஒரு முறை சொன்ன வசனத்தை மறுமுறை சொல்லும் போது வேறு விதமாக சொல்ல வேண்டும். இன்று ஓர் இடத்தில் நாடகம் நடக்கும். நாளை வேறொரு இடத்தில் இதே நாடகம் நடக்கும். நடிப்பவர்கள் அதே நடிகர்கள் . ஆனால் பார்க்கும் பார்வையாளர்கள் வேறு தானே. நாடகம் ஆரம்பித்து ஒரு பத்து நிமிடத்துக்கு பிறகு மக்கள் எதை எல்லாம் ரசிக்கிறார்கள் என்று ஒரு நடிகர் அல்லது நடிகையால் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு பல விஷயங்களை இந்த நாடக அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது. இதற்கு எல்லாம் நான் பாலையா அண்ணனுக்குதான்  நன்றி சொல்ல வேண்டும். அவர் விடாப்பிடியாக  நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னதால் தான் இந்த அனுபவம்  எனக்குக் கிடைத்தது. 

"அன்னை' படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த ராஜாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த தெலுங்கு படத்தில் நான் நடனமணியாக வருவேன். அவருடன் நான் இணைந்து நடனம் ஆடவேண்டும். 

நடனம் ஆடும் இருவரும் கவனத்தோடு சரியாக ஆடினால் தான் நடனமும் அழகாக இருக்கும்.

காட்சிப்படி நான் அலங்கார மேஜை ஒன்றின் மீது நின்றபடி நான் ஆடவேண்டும். அவர்  நடனம் ஆடிக்கொண்டே என்னை மெதுவாகக் கீழே இறக்க வேண்டும். முதல் காட்சியில் சரியாக என் இடுப்பைப் பிடித்து இறக்கிவிட வேண்டும். ஆனால் அது காமிராவில் சரியாக விழவில்லை என்று சொல்லிவிட்டார்கள். திரும்பவும் அதே காட்சியை எடுக்க  இயக்குநர் விரும்பினார். சரியென்று நானும் மறுபடியும் நடிக்கத் தயார் ஆனேன். நடிகர்  ராஜாவும் பாடல் காட்சிக்கு ஏற்ப என் இடுப்பைப்  பிடித்துத் தூக்கி அந்த அலங்கார மேஜை மேலிருந்து கீழே இறக்க வேண்டும். 

எப்பொழுதுமே இப்படிப்பட்ட காட்சி இருந்தால் எங்கள் எடை தெரியாமல் இருக்க நாங்களும் உதவி செய்வோம். அதன்படி ராஜா என் இடுப்பை பிடித்தவுடன் நான் அவருக்கு உதவுவதற்காகக்  குதித்தேன். முதல் "டேக்' கில் நான் அதையே தான் செய்தேன். திரும்பவும் அதையே செய்தவுடன் அவருக்கு என்ன தோன்றியதோ,  தெரிவில்லை. சரியாக இடுப்பைப் பிடித்தார், தூக்கினார், ஆனால் கீழே இறக்காமல் விட்டு விட்டார். அதன் விளைவு, நான் தரையில் விழுந்துவிட்டேன். கால் முட்டியில் நன்றாகக் காயம் ஏற்பட்டுவிட்டது. 

காட்சியை மீண்டும் எடுத்து முடித்தவுடன் நான் ஓரளவு வலியுடன் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியே வந்தேன்.  நான் நொண்டிக் கொண்டே வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தமிழ் நடிகர் "ஏன் நடக்க முடியாமல் நடந்து வருகிறாய்?'  என்று கேட்டார். " நடனக் காட்சியில் என்னைத் தூக்கியவுடன் தரையில் போட்டு விட்டார் ராஜா'  என்று சொன்னேன். ""உன்னை தரையில் போட்டுவிட்டானா? நான் சண்டைக் காட்சியில் அவனைக் கவனித்துக் கொள்கிறேன்'' என்றார். யார் அவர்?

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT