தினமணி கொண்டாட்டம்

அரசியல் வாழ்க்கை அனுபவங்கள்!

9th Aug 2020 06:00 AM | தங்க.சங்கரபாண்டியன்

ADVERTISEMENT

 

சிறந்த பேச்சாளர்

உண்மையைச் சொல்வதென்றால் ஹிந்தித் திரைப்படங்களில் எனக்கு நாட்டம் கிடையாது. திரை உலகிலும் எனக்கு நண்பர்கள் இல்லை. ஆனால் திலீப்குமார் மட்டும் விதி விலக்கு. எண்ணற்ற அவரது ரசிகர்களைப் போலவே அந்த நடிகரை நானும் பெரிதும் போற்றினேன் என்றாலும், முதல் முறை எப்போது சந்தித்தோம் என்று நினைவில் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் பாம்பே மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பாரிஸ்டர் ரஜினி படேல் மூலமாக நெருங்கிப் பழகினோம். பரஸ்பரம் எங்கள் குடும்பத்தினரோடும் பழக்கம் ஏற்பட்டதால் அனைவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் போவோம்.

சிறந்த பேச்சாளரான திலீப்குமார் கேட்பவர்களை மணிக்கணக்கில் கட்டிப்போட்டுவிடும் திறமையாளர். என் நண்பராக பாரமதியில் நடந்த பல தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் தானே முன் வந்து பேசியிருக்கிறார். புணேயில் இருக்கும் என் பால்ய நண்பர் விட்டல் மணியாரை அழைத்து தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. "நான் எப்பொழுது வர வேண்டும் என்று சொல்லுங்கள்' என்று கேட்பார். தன்னுடைய மற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு படபிடிப்புகள் இடையே எப்படியோ நேரம் கண்டுபிடித்து, மும்பையிலிருந்து பாரமதிக்குப் பயணப்பட்டு, என்னுடைய தேர்தல் பேரணிகளில் உரையாற்றுவார். மக்களும் பெருந்திரளாகக் கூடி அவர் சொல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் ரசித்துக் கேட்பார்கள்.

ADVERTISEMENT

தன்னுடைய சுயசரிதையை வெளியிட்ட திலீப்குமார் அவருடைய தனி வாழ்க்கையில் அஷ்மா ரஹ்மான் உடனான அவரது இரண்டாவது திருமணத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க நானும், ரஜினி படேலும் சமரசம் செய்ததைத் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதியுள்ளது உண்மைதான். திலீப்குமாரும் அவர் மனைவி சாய்ராபானுவும் வேண்டிக் கொண்டதன் பேரிலேயே நாங்கள் தலையிட்டோம். எல்லாம் நல்ல படியாக முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

1993-இல் மும்பை வெடிகுண்டு வழக்கில் எனது தலைமையிலான அரசு சஞ்சய் தத்தை கைது செய்ததை அடுத்து என்ன அவர் சந்திக்க வந்த போது எங்களுக்கு இடையே சுமூகமற்ற சூழல் ஏற்பட்டது. அவருடைய நண்பர் சுனில்தத்தின் (சஞ்சய் தத்தின் அப்பா) மன உளைச்சலைக்கண்டு வருந்திய திலீப்குமார், நீக்குப் போக்குடன் நடந்து கொள்ளுமாறு என்னைக் கேட்டார்.

அந்த இளம் நடிகருக்கு எதிராக இருந்த வலுவான ஆதாரங்களைச் சுட்டிக் காட்டிய நான் அவரது வேண்டுகோளை நிராகரித்துவிட்டேன். அதற்குப் பின்னர் எங்கள் உறவு உறை நிலைக்குச் சென்றுவிட்ட போதும், சாய்ரா பானுவுக்கும் என் குடும்பத்தினருக்குமான நட்பு முன் போலவே தொடர்கிறது.

சோனியா காந்தி தலையிட்டதில்லை!

நேரு குடும்பத்தில் அரசியலில் நீண்டகாலம் நான் தொடர்பு கொண்டிருந்தவர் சோனியா காந்தி. அவர் தம் கணவர் ராஜீவைப் போலத் தாராளமாகப் பழகக் கூடியவர் அல்ல. அவர் அரசியலில் நுழைந்த முதல் சில ஆண்டுகளில் அசெளகரியமான நிலையில்தான் எங்கள் தொடர்பு இருந்தது.

10 ஆண்டுகளுக்கு சோனியா காந்தியும் நானும், மக்களவையில் ஒன்றாக அமர்ந்து இருந்தோம். அருகருகே எங்களுக்கு இருக்கைகள் இருந்ததால் அவ்வப்போது சாதாரணமாக நாங்கள் பேசி கொண்டாலும், தீவிரமான அரசியல் பேசுவதை குறிப்பாக காங்கிரஸ் பற்றியோ, தேசியவாதக் காங்கிரஸ் பற்றியோ பேசுவதைத் தவிர்த்தோம்.

அதிகார பூர்வ பேச்சு வார்தைகள். அவர் தலைமை வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி பற்றியதோடு நின்றுவிடும். இவை தவிர எங்களிடையே தனிப்பட்ட பரிமாற்றங்கள் கிடையாது.

எனினும் என்னுடைய அமைச்சுப் பணியில் என் கீழ் உள்ள துறைகளின் ஒரு குறிப்பிட்ட நியமனம் இடமாற்றம் குறித்து மறைமுகமாகக் கூட அவர் கேள்வி எழுப்பியதும் இல்லை. தலையிட்டதும் இல்லை என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும்.


எளிமை: சரத் சந்திர சின்ஹா

அசாம் முன்னாள் முதலமைச்சர் சரத் சந்திர சின்ஹா போன்ற மனிதர்கள் இனி தோன்றமாட்டார்கள். நேர்மையும் எளிமையும் ஓர் உருவமானவர் சரத் சந்திர சின்ஹா.

மும்பை ஆஸாத் மைதானத்தில் பிற்பகல் தொடங்கவிருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் அலைந்து கொண்டிருந்த காலைப் பொழுது. இன்னும் என் நினைவில் இருக்கிறது. விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்திலிருந்து கையில் ஒரு பெட்டியையும் தலையில் நன்கு கட்டப்பட்ட படுக்கைகையும் சுமந்து கொண்டு உயரமான-ஒல்லியான ஒரு மனிதர் எங்களை நோக்கி வருவதைக் கண்டேன்.

எங்கள் முன்னே வந்து நின்ற அவரைக் கண்டதும் அதிர்ந்து போனேன். அவர் அசாமின் அப்போதைய முதலமைச்சர் சரத் சந்திர சின்ஹா. குவஹாத்தியில் இருந்து மும்பை வரை ரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் இரண்டு நாளுக்கும் மேல் பயணம் செய்து வந்திருந்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் அரசாங்க நிகழ்ச்சி அல்ல என்பதால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தனது சொந்த செலவில் வர வேண்டியிருந்ததால் தன்னால் முடிந்த படி மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தை மேற்கொண்டார்.

சின்ஹா 1972 முதல் 1978-ஆம் ஆண்டு வரை அசாம் முதலமைச்சராகப் பணியாற்றியதுடன் கட்சியிலும் பொது செயலாளர், துணைத்தலைவர், தலைவர் என்று பல பொறுப்புகளில் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்வாதியாக இருந்த அவர் 1999-இல் நாங்கள் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய போது தாய்க் கட்சியிலிருந்து விலகி எங்களோடு சேர்ந்து கொண்டார். பண விஷயத்தில் அவருடைய நேர்மை அனைவருக்கும் பாடமாகும். குவஹாத்தியின் கட்சி அலுவலகப் பராமரிப்பு ஆனாலும், தேர்தல் பிரசாரம் ஆனாலும், ஒரு ரூபாய் வரை விவரமாக அனைத்துச் செலவுகளுக்கும் கணக்கு எழுதி கொடுத்துவிடுவார். மக்கள் போற்றிய தலைவராக விளங்கிய அவர் நல்ல எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.

சரத்பவார் எழுதிய "எனது அரசியல் வாழ்க்கை நூலிலிருந்து'

ADVERTISEMENT
ADVERTISEMENT