தினமணி கதிர்

திரைக்கதிர்

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

 


"சிறுத்தை' சிவா இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்துவரும் "கங்குவா' படத்தின் கதை, முதலில் அஜித்துக்குத்தான் சொல்லப்பட்டது. இந்தக் கதையைத் தவிர்த்துவிட்டுத்தான் "விஸ்வாசம்' கதையை ஓ.கே. செய்தார் அஜித். இந்த நிலையில் "கங்குவா' படத்தின் மேக்கிங் தொடங்கி பிசினஸ் வரையிலான விஷயங்கள் ஹைலைட்டாகக் கவனிக்கப்பட, அஜித்திடம் இது குறித்துச் சிலர் பொடிவைத்துப் பேசியிருக்கிறார்கள். மகிழ் திருமேனி படத்தை முடித்துவிட்டு, அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில்தான் நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம் அஜித். 

--------------------------------

ஆர்யாவின் "காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கும் நிலையில், தன் கதைத் தேர்வின் மீதே கவலைப்படத் தொடங்கியிருக்கிறார் ஆர்யா. தமிழ்த் திரையுலகில் பலரிடமும் கதை கேட்டு, நுட்பமாகக் கவனித்துத் தேர்வு செய்வதில் விஷ்ணு விஷாலும் ஆர்யாவும் முக்கியமானவர்கள். ஆர்யாவின் கதைத் தேர்வு அடுத்தடுத்து தடுமாறுவதால், தனக்கென ஒரு குழுவை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஆர்யா. இனி அந்தக் குழு ஓ.கே. செய்யும் கதைகளைத்தான் ஆர்யா கேட்பாராம்.

ADVERTISEMENT

--------------------------------

"பாய்ஸ்' வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டதால், சினிமாவில் இருபதாவது ஆண்டைக் கொண்டாடப் போகிறார் சித்தார்த். "இத்தனை வருஷத்துல நான் நிறைய கத்துக்கிட்டேன். அடுத்த 20 வருஷத்தை எப்படிக் கொண்டு போகணும்னு அதுக்கான ஆயுதங்களையும் நிறைய தயாரா வச்சிருக்கேன்'' என மகிழும் சித்தார்த், அடுத்து கமலுடன் "இந்தியன் 2', மாதவனுடன் "டெஸ்ட்' என ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

--------------------------------

ராஜூ முருகன் இயக்கத்தில், கார்த்தியின் 25வது படமாக உருவாகிவரும் "ஜப்பான்', டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் மிக நம்பிக்கையான படமாகப் பார்க்கப்படுகிறது. லலிதா ஜுவல்லரியில் நகைகளைத் திருடி மாட்டிக்கொண்ட திருவாரூர் முருகனின் உண்மைக் கதையைத்தான் "ஜப்பான்' திரைக்கதையாக எழுதியிருக்கிறாராம் ராஜூ முருகன். நகைத் திருட்டுகளில் கில்லாடியான முருகன், எய்ட்ஸ் நோயாலும் பாதிக்கப்பட்டார். கார்த்திக்காக அதை மட்டும் மாற்றிக்கொள்ள முடிவெடுத்தபோது, "நிஜத்தில் முருகன் எப்படியோ, அப்படியே என் பாத்திரமும் இருக்கட்டும்' என்றாராம் கார்த்தி.

--------------------------------

ராஜ்மெளலியின் ஆர் ஆர் ஆர் படத்தின் "நாட்டு நாட்டு..' பாடலுக்காக "பெஸ்ட் ஒரிஜினல் சாங்' ஆஸ்கர் விருதை பெற்று உலகமே கொண்டாடி வரும் இசையமைப்பாளர் கீரவாணி, "ஜென்டில் மேன்2' படத்தின் மூலம் மீண்டும் தமிழில் இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் அடுத்த கட்டமாக, இப்படத்தின் கதையை கீரவாணிக்கு சொல்லியுள்ளார் இயக்குநர் கோகுல் கிருஷ்ணா.  ஹைதராபாத்துக்குச் சென்று முழு கதையையும் கீரவாணிக்கு அண்மையில் சொல்லி முடித்தார். படத்தைத் தயாரிக்க இருப்பது கே.டி.குஞ்சுமோன்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT