தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பேதியை நிறுத்த மருந்து உண்டா?

எஸ். சுவாமிநாதன்

எனக்கு மாம்பழம் சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆனால், அதை எப்போது சாப்பிட்டாலும் பேதி ஆகிறது. பேதி ஆவதால் வயிற்று வலி ஏற்படுகிறது. பேதியை நிறுத்தி மாம்பழம் சாப்பிட வீட்டிலே தயாரித்து சாப்பிட சுலபமான வழி மருந்து உள்ளதா?

ராஜம், தி.நகர்,
சென்னை.

மாம்பழத்தினுள்ளேயே உங்கள் உபாதையை குணப்படுத்தும் மருந்து உள்ளது என்பதை அறிந்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? ஆம் மாங்கொட்டைப் பருப்புதான் அது.  வீட்டிலேயே செய்துகொள்ளும் வகையில், சில சமையலறைச் சரக்குகளால் நீங்கள் பயன்பெறலாம்.

மாங்கொட்டைப் பருப்பு, கறிவேப்பிலை, சுண்டைக்காய் வற்றல், இலவங்கைப் பட்டை, நெல்லி வற்றல்,  மாதுளம் பழத்தோல், வெந்தயம் மற்றும் ஓமம் ஆகியவையே போதுமானது. மாங்கொட்டைப் பருப்பை சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். இந்தத் துண்டங்களையும், கறிவேப்பிலையையும் தீயாமல் வறுத்து எடுத்து  சுண்டைக்காய் வற்றலையும் லேசாக வறுத்து, மற்ற ஐந்து சரக்குகளைச் சேர்த்து சமனிடை  எடுத்து இடித்து சூரணம் செய்துவைத்துகொள்ளவும்.

இந்த சூரணத்தில் வேலைக்கு மூன்று முதல் நான்கு சிட்டிகை எடுத்து, சுமார் நூற்றி ஐம்பது  மில்லி புளிப்பு மோருடன் கலந்து மூன்று வேளை உணவுக்கு அரை மணி முன் ஏழு முதல் பத்து நாள்கள் சாப்பிட்டு வர, பல காரணங்களால் உண்டான பேதி, வயிற்று வலி முதலானவைகள் குணமாகும்.  எளிதில் செரிக்கக் கூடிய உணவு அல்லது மோர் சாதம் போன்றவை இம் மருந்து சாப்பிடும் நாள்களில் சாப்பிட நல்லது.

மாம்பழத்தின் சத்தான சுளைப் பகுதி உங்கள் வயிற்றில் வந்து சேரும்போது, அதைச் செரிப்பதற்கான சுரப்பிகள் சரிவர வேலை செய்யாதபட்சத்தில், அவை பெருங்குடல் வழியாக, பேதியாக வெளியேறுகின்றன.  சுரப்பிகளில் பொதிந்துள்ள ரஸாயனக் கலவைகளைத் தூண்டி விடக் கூடிய எலுமிச்சம் பழச்சாறு, இந்துப்பு, தேன், இஞ்சிச்சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, பசி எனும் நெருப்பானது தீவிரமடைவதுடன், எதனையும் செரிப்பதற்கான சக்தியையும் அது பெற்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை.

முஸ்தாரிஷ்டம், ஜீரகாத்யார்ஷ்டம், தாடிமாஷ்டேகம் எனும் சூரணம், வில்வாதி குளிகை போன்ற ஆயுர்வேத மருந்துகள் நல்ல பலனை அளிக்கவல்லவை.

மாம்பழத்தை விரைவில் செரிக்க வைத்து அதனுடைய நல்ல சத்துக்களைப் பெற அதைச் சாப்பிடும்போது, சிறிது மிளகுத்தூளையும் உப்பையும் தூவிச் சாப்பிடுவதும் நல்லதே. ஆப்பிள் பழம், கொய்யாப் பழம், பப்பாளிப் பழம் போன்றவை சாப்பிடும்போதும் இதுபோலச் செய்யலாம்.

மாம்பழத்திலுள்ள சூட்டினால் ஏற்படும்  உஷ்ணவாயுவினாலும்  உங்களுக்கு பேதியாகலாம். அஜீரணமும் ஏற்படலாம். அதுபோன்ற நிலையில் சீரகம், திப்பிலி, மிளகு, இந்துப்பு இவைகள் வகைக்கு 60 கிராம், பெருங்காயம் 30 கிராம், கருவேப்பிலை 30 கிராம் எடுத்து பெருங்காயத்தைப் பொரித்தும், இந்துப்பு நீங்கலாக மற்ற சரக்குகளைப் பொன்மேனியாக வறுத்தும் நன்கு இடித்து சூரணம் செய்து, சுமார் ஐந்து கிராம் சூரணத்தை மட்டும் முதல் அன்னத்துடன் போட்டுக் காய்ச்சிய பசு நெய்யைவிட்டு பிசைந்து  சாப்பிட்டு, அதனுடனேயே மாம்பழக் கதுப்புகளையும் சாப்பிட உகந்தது. இதனால் வயிற்று வலி, வயிற்று எரிச்சல், பசி மந்தம் போன்றவையும் குணமாகும்..

 (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT