தினமணி கதிர்

வலி!

சிவகங்கை வே.கருப்பையா

ராஜவேலு சார் வீட்டில் இதுபோன்ற குதூகலம், மகிழ்ச்சி இதற்கு முன்பு இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நரேஷ், சுரேஷ் என்று மணிமணியானஇரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்த தருணத்தைவிட அன்று ஆரவாரம், அமர்க்களம் என்றால் அதற்கு ஒரே காரணம் இன்னொரு புதியவர் வீட்டுக்குள் வந்து சேர்ந்துகொண்டதுதான்.
டாக்டர் ராஜவேலு டெவலப்மென்ட் செக்டார் என்று சொல்லக் கூடிய வளர்ச்சித் துறையில் மிகவும் பிரபலமான ஒரு முன்னோடியான வழிகாட்டி என்று சொல்லலாம்.
உலக வரைபடங்களில் இல்லாத நாடுகளுக்குகூட சென்றுவந்தவர் என்றுதான் அவரை எல்லோரும் அறிமுகப்படுத்துவர். சுனாமி, வெள்ளம், புயல், கல்வி, முன்னேற்றம், பெண்கள் தொழில் முனைதல் என்று பல துறைகளில் நிபுணராக அறியப்படுபவர்ராஜவேலு. ஆனால் வீட்டில் "விசிட்டிங் ஹஸ்பண்ட்' என்று பெயர் வாங்கியவர். வீடு தங்காது சுற்றிக் கொண்டு இருக்கும் இளைஞர்.
இடத்துக்கு ஏற்ப உடை அணிந்து கொள்ளுவார் ராஜவேலு. சில இடங்களுக்குச் செல்லும்பொழுது கைக்கடிகாரம், மோதிரம், ஏன் பாண்ட்கூடஅணியாது லுங்கிஅல்லது வேட்டி, காலர் இல்லாத அரைக்கை குர்தா அணிவது உண்டு. நாற்காலியில் உட்காராமல் மக்களோடு மக்களாக அவர்களுக்கு சரிசமமாகத் தரையில் திண்ணையில் பாயில் உட்காருவார். அப்போதுதான் உண்மைகளை வாங்க முடியும் என்பது அவர் தெரிந்துகொண்ட அனுபவப் பாடம்.
ஒரு முறை விருதுநகர்அருகில் உள்ள வேம்பக்கோட்டை என்ற ஊரில் உள்ள சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ப்ராஜெக்ட் சாங்க்ஷன் செய்து நிதி வழங்கச் சென்றிருந்தார். அவருக்கு எங்கு சென்றாலும் சிறந்த மரியாதை உண்டு. காரணம், அவரது நேர்மை, வெளிப்படைத் தன்மை, எளிமை.
ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராஜாவின் வீட்டில் ராஜவேலுக்கு காலை உணவு ஏற்பாடாகியிருந்தது. இவருக்கு கேப்பங்கூழு, பச்சை மிளகாய், நாட்டு முட்டையில் செய்த ஆம்லெட், கருப்பட்டி வெல்லம் சேர்த்த சுக்கு காபி தந்தார்கள். ராஜவேலு எந்த உணவாக இருந்தாலும் ருசித்து சாப்பிடுவார்.
காலை உணவு முடிந்ததும் அழகுராஜாவின் தோட்டத்தில் உட்கார்ந்து பேச்சைத் தொடங்கினார். இன்னும் சிலர் வரவேண்டும். தாமதம் ஆயிற்று. அந்தச் சமயம்தான் அது நடைபெற்றது. வெள்ளை நிறத்தில் ஒரு பூனை சாம்பல் நிறத்தில் ஒரு பூனை என்று பாரதி சொல்வது போல அங்கே அவர் முன்பு முதுகில் இருந்து சுமார் ஒன்றரை அடி உயரத்தில் மான் நிறத்தில் ஒன்று, வெள்ளி சாம்பல் நிறத்தில் ஒன்று, வெளிர் பிரவுன் நிறத்தில் ஒன்று எனஅலைந்து கொண்டிருந்தன மூன்று நாய்க் குட்டிகள்.
ராஜவேலு சார் இதுவரை வீட்டில் நாய் வளர்த்ததில்லை. ஆனால் நல்லதொரு நாய் வாங்கிதான் கட்டிய கொளத்தூர் வீட்டின் மாடத்து தூணில் கட்டி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசை உண்டு. எப்போதுமே எதற்கும் தயக்கம் காட்டாத ராஜவேலு "ராஜா சார் இந்தக் குழந்தைகளில் ஒன்றை நான் எடுத்துச் செல்லலாமா?'' என்று படேலெனகேட்டார். ராஜாவும் தனது பெயருக்கு ஏற்றவாறு எதற்கும் சளைத்தவர்அல்ல.
"டாக்டர் உங்கள் வீட்டில் வளர இதுகொடுத்து வைத்திருக்க வேண்டும். எந்த நிறம் உங்களுக்கு வேண்டும்'' என்று கேட்டார்.
அந்த வெளிர் பிரவுன் நிறக்குட்டி. ஹும் குட்டி என்று சொல்லிவிடமுடியாது. ராஜவேலு சார் காரில்அமர்க்களமாக சென்னை புறப்பட்டது.
வீட்டுக்குள் அன்று கார் நுழையும் பொழுது காரில் இருந்து புதிய குரல் ஒன்றை ராஜவேலு சாரின் மனைவி அபிராமியோ, நரேஷ், சுரேஷோ எதிர்பார்க்கவில்லை. ஆவலுடன் வந்து எட்டிப் பார்த்தவர்களுக்கு பெரிய ஆச்சரியம். சற்று பயம். கொஞ்சம் மகிழ்ச்சி. நிறைய தயக்கம். புதியவர்வீட்டில்நுழைந்தார்.
இப்போது அவரைப் பற்றி அறிய எல்லோரும் வீட்டில் வட்ட மேசை மாநாடு போட்டார்கள்.
அங்கே ராஜா சொன்ன சிலவற்றை இங்கே ஒன்றுவிடாமல் மனப்பாடமாக சொன்னார் ராஜவேலுசார்.
"இது சிப்பிப்பாறை எனும் வகையைச் சார்ந்த ஒன்று. நாட்டு நாய், வேட்டை நாய் என்று சொல்லலாம். மோப்பச் சக்தி அதிகம் உண்டு. இது சுதந்திரமான, விசுவாசமான, வலுவான நாய். இன்னும் வளர வளர உயரம் கூடும். பார்க்க நரம்பன் எலும்பன் போல இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்தவன். இது கோம்பை, கன்னி, ராஜபாளையம் நாய் போலத்தான். இந்த வகை நாய் மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி, திருநெல்வேலி, தென்காசி போன்ற ஊர்களில்மட்டும்தான்கிடைக்கும்.''
சுரேஷ் சொன்னான். "டாடி இது ஒன்றும் உங்கள் பயிலரங்கம் இல்லை. ஆனாலும் நீங்கள் சொல்லச் சொல்ல இதுபற்றி இன்னும் தெரிந்துகொள்ளஆசைதான்.''
அதற்குள் சற்றுநேரம் தனது அறைக்குள் சென்று திரும்பிய நரேஷ் - எட்டாம் வகுப்பு மாணவன் - தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.
"இது உலகத்தில் மிகவும் வேகமாக ஓடக் கூடிய ஒன்று. சில சமயம் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் ஓடும். சரியான பயிற்சி கொடுத்தால் 68 கி.மீ. வேகத்தில் கூடஓடும். இது வளர்ந்தால் இரண்டரை அடி உயரம் வளரும். பதினான்கு முதல் முப்பத்தாறு கிலோ எடை வரை இது வளரலாம். இந்த வகை நாய்கள் பனிரெண்டு முதல் பதினைந்து ஆண்டுகள் வரை வாழும். இவர் வீட்டைக் காக்க நாட்டைக் காக்க நல்லவொருவேட்டைநாய்.''
"டாடி இந்த கூகுளை கொஞ்சம் மியூட் போடுங்க, நீங்க சொல்லுங்க, இவனுக்கு என்ன பெயர் வைக்கலாம்'' என்றான்சுரேஷ்.
"சார்லி, ரூடி, ரெக்ஸ், ராமு, மைலோ, பிளேஸ்' என்று பல பெயர்கள்அடிபட்டன. கடைசியில் விவாதத்தில் இல்லாத "ப்ரூனோ' என்று அபிராமி சொன்ன பெயரே முடிவானது.
ராஜவேலு சார் வீட்டில் அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறி வெகுநாள்கள்ஆகிவிட்டன. வேண்டும் என்றால் பிள்ளைகள் மட்டும் வெளியே இருந்து வாங்கிசாப்பிடுவார்கள். வீட்டில் சமைப்பது கிடையாது. இப்போது திருவாளர் "வால்டர்' என்ன சாப்பிடுவார் என்பது கேள்வியாயிற்று. பின்னாளில் அவர் தயிர் சாதம், பிரெட் , ரசம் சாதம், பால் என்று மாறிப் போனார் என்பது வேறு விஷயம்.
"இவர் இனி நமது குடும்பத்தில் ஒருவர். நம்மைக் காக்க வந்த கால பைரவர். நான் ஊரில் இல்லாதபோது அம்மா பிசி என்றால் இவரை குளிப்பாட்டுவது, வாக்கிங் கூட்டிப் போவது எல்லாமே நரேஷ், சுரேஷ் உங்க வேலைதான். இவனை ஊர் நாய்களிடம் இருந்து காப்பாற்றுவதும் உங்க வேலைதான்'' என்றார் ராஜவேலு.
வீட்டில் அனைவருக்குமே இது புது அனுபவம். தமது மகிழ்ச்சியைக் காட்ட உடனே செல்பி ஸ்டிக் வைத்து க்ரூப் போட்டோ எடுத்து, அடுத்த நிமிடமே பேஸ்புக், இன்ஸ்டா என்று ஏற்றினான் நரேஷ். அவன் ஒரு டெக்சாவி.
"இங்க பாருங்கப்பா. இவர் சிலநேரம் ரொம்ப ஹைபர் ஆக்டிவ், சில நேரம் பயந்து கிடப்பார். சில நேரம் ரொம்ப கோபமாக ஆகிடுவாரு, நிச்சயமாக வளர வளர ஒருமணி நேரமாவது அவரை நடக்க வைக்க வேண்டும். முதலில் டைல்ஸ் தரையில் அவர் நடந்தால் கால் வழுக்கி விழுந்துவிடுவார். அவருக்கு கொஞ்சுதல் ரொம்பப் பிடிக்கும், அவரும் நம்மை கொஞ்சுவார். ஒரு படுக்கை, அவருக்கான பெல்ட், செயின் எல்லாம் இன்னைக்கே வாங்கிடறேன்..ஓ.கே.'" என்றார் ராஜவேலு.
"இன்னொரு விஷயம் இவர் வீட்டுப் பெரியவங்க மாதிரி மாசத்தில் ஒருநாள் முழு விரதம் இருப்பாராம். அது எந்த நாள்னு கண்டுபிடிச்சு அதை குறிச்சி வைக்கணும், இது காஸ் சிலிண்டர் விவரம்போல அம்மா பாத்துப்பாங்க. ப்ரூனோ வந்திருக்காருனு வீட்டுக்கு கூட்டம் சேர்க்காதீங்க! முதல்ல நாமஅவரை புரிஞ்சிப்போம். அவர் நம்மளை புரிஞ்சிக்கட்டும். இந்தச் சாக்குல படிப்பை கோட்டை விட்டுடாதீங்க'' என்று பிரசங்கம் முடிச்சுகளைப் போட்டு ராஜவேலு அலுவலக வேலையில் இறங்கினார்.
திடீர்னு நினைவுக்கு வந்தவராக, "ப்ரூனோவுக்கு தனி பட்ஜெட் உண்டு. அவருக்கு தீனி, மெத்தை, செயின், பெல்ட், குச்சி, டாக்டர் செலவு, அவருக்கு சாப்பாடு தட்டு, தண்ணிகுடிக்க பாத்திரம் எல்லாம் இருக்கு. அதனால உங்க பட்ஜெட்டுல இருந்து கொஞ்சம் கட்'' என்று சொல்லி கண்ணடித்தார் ராஜவேலு. ராஜவேலுவின் இயல்பான நகைச்சுவை தாண்டி நரேஷ், சுரேஷ் இருவரும் அரைகுறையாக மண்டையை ஆட்டினர்.
எதிர்வீட்டு சுட்டிப் பையன் மணீஷ் எப்போதும் இவர்கள் வீட்டிலேயே கிடப்பான். அடுத்து இப்போது ப்ரூனோ. மணீஷும் ப்ரூனோவும் கூட ரொம்ப நண்பர்களாகிப் போனார்கள். அபிராமி மணீஷுக்கு பிடித்த மாதிரிதான் எப்போதும் உணவு வகைகளைச் செய்வார். இப்போது ப்ரூனோவையும் மனதில் வைக்க வேண்டிவந்தது.
போகப் போக ப்ரூனோவுக்கு நிறைய முக்கியத்துவம் கிடைத்தது. உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர்என்று ப்ரூனோவை பார்க்க நிறைய விசிட்டர்கள். அவர்களுக்கு உபச்சாரம் செய்வது அபிராமி வேலை. ப்ரூனோ பற்றி விளக்கம் தருவது, அதனை மேனேஜ் செய்வது நரேஷ், சுரேஷ் வேலை என்றானது.
ப்ரூனோ வேகமாக வளரஆரம்பித்தார். நரேஷ், சுரேஷ் இருவரும்கூட பள்ளிக்கூடம் முடித்து கல்லூரி சேர்ந்தனர். ராஜவேலு சார் மட்டும் தனது டூரை குறைத்துக் கொள்ளவில்லை. அவர் எப்போது வீடு திரும்பினாலும், ப்ரூனோ எடுத்துக் கொள்ளும் நேரம் குறைந்தது அரை மணி நேரம். அவர் மீது ஏறி மடியில் உட்காருவது, அவரை நக்கிகொஞ்சுவது என்று மூன்றாவது பிள்ளையாக மாறும். ஒருநாள்கூட அவரைக் கொஞ்சாமல் அது தூங்கப் போகாது. அவரும் ப்ரூனோ மீது அளவு கடந்த பாசம் வைத்தார். சில நாள்கள்அவர்அலுவலக வேலை பார்த்தால்அவர் அருகில் சோபாவில் படுத்துக் கிடக்கும்.
ஒரு சிப்பிப்பாறை நாய் டாக்டர் சார் வீட்டில் இருப்பது நிறைய பேருக்கு தெரியவந்தது. கால்நடை கல்லூரியில் இருந்து பேராசிரியர்கள், மாணவர்கள், போட்டோகிராபர் என்று புதிய புதிய விசிட்டர்கள் வர ஆரம்பித்தனர். அவர்களை ப்ரூனோவிடம் இருந்து சமாளிப்பது, எடுத்துச் சொல்லுவது என்று அபிராமி மேடம் குட்டி பேராசிரியரே ஆனார்.சில நேரம் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இருந்து ஸ்பெஷல் வண்டி வந்து வால்டரையும் அபிராமியையும் சிறப்பு விருந்தினராக அழைத்துப் போவார்கள். அங்கே அவர்களுக்கு ராஜ உபசாரம்தான்.
கொஞ்சம் வயதாகிவிட்ட ப்ரூனோவுக்கு வரன் பார்ப்பது போல ஜோடி கிடைக்குமா? எப்படி அவரை இன்னும் குஷிப்படுத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர் டாக்டர் ராஜவேலும் அபிராமியும்.
வீட்டுத் திருமணம், குலதெய்வக் கோயிலுக்குப் போக வேண்டும் என்றால்கூட ப்ரூனோவை எப்படி பார்த்துக் கொள்வது என்பது பெரிய பிரச்னைஆயிற்று. ஏனெனில் அவர் வேறு யார் உணவு கொடுத்தாலும் சாப்பிடாமல் அடம் பிடித்தார். இவர்கள் வீடு திரும்பும்வரைஅழுது கொண்டிருப்பார். தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பார். அடம்பிடிப்பார். உறவினர்கள்கூடஇவரை பார்த்துக் கொள்ள மறுத்தனர். அதனால் ராஜவேலுவும் அபிராமியும் யாரோ ஒருவர்தான் குடும்பத்தின் நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளுவார்கள். நரேஷ், சுரேஷ் படிப்புக்கே நேரமில்லாமல்தவித்தனர்.
கல்லூரிப் படிப்பு முடிந்து மேற்படிப்பும் முடிந்து இருவருக்குமே வெளியூரில் வேலை கிடைக்க நரேஷ், சுரேஷ் ஊரில் இல்லை. டாக்டர் ராஜவேலுவும் வயதானாலும் தனது டூரை குறைக்க முடியாது திண்டாடினார். அபிராமி ப்ரூனோவை அழைத்துக்கொண்டு வாக்கிங் போவதில் மிகவும் சிரமப்பட்டார். அவர் இழுக்கும் இழுப்புக்கு அபிராமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. அபிராமிக்கு முட்டிவலி, முதுகு வலி என்று வேறு கஷ்டப்பட்டார்.
திடீரென ப்ரூனோ சரியாக சாப்பிடவில்லை. வாக்கிங் வரவில்லை. உடம்பும் சற்று இளைக்கஆரம்பித்தது. மருத்துவரிடமும் அழைத்துப் போனார்கள். அது புற்றுநோயாக இருக்கலாம். சில டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுத்தார் டாக்டர். மகன்களுக்கு உடம்புக்கு நோய்வந்தால் கூடஅபிராமி இவ்வளவு கவலைப்பட்டதில்லை. ராஜவேலுவும் கொஞ்சம் மனம் உடைந்துதான் போனார். விஷயம் கேட்ட
நரேஷ், சுரேஷ் இருவரும் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பினர். வீடே சோகமாக மாறியது.
பல சமயங்களில் நாம் இணையத்தில் ஏதாவது ஒரு பொருள் அல்லது சேவை பற்றித் தேடினால், பின்னர் நமக்கே புரியாமல் அந்தப் பொருள்கள் மொபைலில் வந்து கொண்டே இருக்கும். அப்படித்தான் "பெல்கர்' எனும் நாயின் கதை ராஜவேலு சாரின் வாட்ஸ் ஆப்பில் வந்தது.
அதனை ராஜவேலு சார் தனது பேமிலி வாட்ஸ் ஆப் குரூப்பில் ஷேர் செய்து "உடனேபடியுங்க' என்று பதிவிட்டார்.
இதுதான்அந்தபதிவு :
"அன்று காலை அவர்கள் என்னை பெல்கர் என்ற பத்து வயது "ஐரிஷ் வுல்ஃப் ஹவுண்ட்' வகை நாயை பரிசோதிக்க அவர்கள் வீட்டுக்கு அழைத்திருந்தார்கள். நான் அவர்கள் வீட்டுக்குப் போய் பரிசோதித்து முடிக்கும் வரை நாயின்உரிமையாளர்களான ரான், அவரது மனைவி லிசா, அவர்களது சிறுவன் ஷேன்ஆகிய மூவருமே பெல்கரைவிட்டு ஒரு கணம் கூட நகரவில்லை. ஏற்கெனவே வியாதியால் மிகவும் நலிவுற்றிருந்த அந்த நாயைக் குறித்து ஒரு நல்ல வார்த்தை சொல்லி விடமாட்டேனா என்ற ஏக்கம் மூவர் முகத்திலுமே தெரிந்தது.
ஆனால், நான் பெல்கரைபரிசோதித்தபோதுஅது ஏற்கெனவே புற்றுநோயால் இறந்துகொண்டிருந்தது. பெல்கர் தனது இறுதி நாள்களில் இருக்கிறது. அதைக் காப்பாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது' என்பதை குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது, அவர்கள் கண் கலங்க ஆரம்பித்திருந்தது. ஆனால், அந்த நாயின் துன்பத்தைப் போக்க ஒரு வழி இருப்பதையும்... அதை நாமாக அனுப்பி வைக்கலாம்; அது அதனுடைய துன்பத்தைக் குறைக்கும் என்பதையும் அவர்களுக்குச் சொல்லி, வயதான நாய்களைஅப்படிஅனுப்பி வைக்க சட்டத்தில் அனுமதி இருப்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.
நாயின் துன்பத்தைக் காணச் சகித்துக் கொள்ள முடியாமல் அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டாலும், அதற்கு தங்களது ஆறு வயது மகன் ஷேன் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், நாயைக் கருணைக் கொலை செய்யும் அந்த நிகழ்வை அதைப் பார்க்காவிட்டாலும், அன்று அவன் வீட்டிலாவது இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். ஷேன் இந்தஅனுபவத்திலிருந்து ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்பது அவர்கள் எண்ணமாயிருந்தது.
அடுத்த நாள், நான்அந்தக் காரியத்தைச் செய்யும்போது மூவருமே அங்கே இருந்தனர். என்னதான்அதற்குப் பெயர் கருணைக் கொலை என்றாலும், அதைச் செய்வது ஒரு மருத்துவராய் எப்போதுமே எனக்கு அது கடினமான காரியம்தான். என்னவோ தொண்டையைக் கவ்வுவது போலிருந்தது. எனக்கு
அதைச் செய்யும் போது. முகம் தெரியாத எனக்கே அப்படி இருந்தால் பத்து ஆண்டு பாசமாய் அந்த நாயை வளர்த்தவர்களுக்கு எப்படிஇருந்திருக்கும்? ஆனால், பெரியவர்கள் இருவரும் அந்தக் காரியத்தைக் கண் கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தாலும், ஷேன் மிக அமைதியாகத்தான் இருந்தான். சில நிமிடங்களில், பெல்கர்அமைதியாகத் தனது மூச்சை நிறுத்தியிருந்த அந்தக் கடைசி விநாடி வரை, அந்த நாயை செல்லமாகத் தடவிக் கொடுத்துக் கொண்டேதான்இருந்தான்அவன். என்ன நடக்கிறது என்று அவனுக்குப் புரிகிறதா என்பதுகூட அப்போது ஆச்சரியமாயிருந்தது எனக்கு.
சிறுவன் எந்தச் சிரமமும் குழப்பமும் இல்லாமல் பெல்கரின் மரணத்தை ஏற்றுக் கொண்டான். பெல்கரின் மரணத்துக்குப் பிறகு நாங்கள் சிறிது நேரம் ஒன்றாக அமர்ந்திருந்தோம், மனித உயிர்களைவிட நாய்களின் வாழ்க்கை குறுகியதாய் இருப்பது ஏன் என்பது தெரியவில்லை என்ற சோகமான உண்மையைப் பற்றி நாங்கள் வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தோம். அதுவரை அமைதியாக நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஷேன் சட்டென்று, " "அது ஏன் என்று எனக்குத் தெரியும்'' என்றான்.
திடுக்கிட்டு, நாங்கள் எல்லோரும் அவன் பக்கம் திரும்பினோம். அடுத்துஅவன்வாயிலிருந்து வந்த வார்த்தைகள் என்னை திகைக்க வைத்தது. இதைவிடஆறுதலான விளக்கத்தை நான் என் ஆயுளில் கேட்டதில்லை. அது வாழ்க்கையைப் பற்றிய எனது புரிதலையே மாற்றிவிட்டது எனலாம்.
அவன்கூறினான், "ஒருமுறை எனது வகுப்பு ஆசிரியர் சொன்னார். அது "எல்லோரையும் எப்போதும் நேசிப்பது மற்றும் அடுத்தவர் மீது நிபந்தனையற்ற அன்போடு இருக்கக் கற்றுக் கொண்டு வாழ்வது என்ற ஒரு நல்ல வாழ்க்கையை வாழத் தான் மனிதர்கள் பிறக்கிறார்கள்' என்பது. அது எப்படி என்பதை அவர்களில் சிலர் சில ஆண்டுகளிலேயே தெரிந்து கொள்கிறார்கள். சிலருக்கு பல ஆண்டுகள் பிடிக்கிறது. சிலருக்கு கடைசி வரை முடியாமலே போகிறது. இல்லையா?' என்ற அந்தஆறுவயதுசிறுவன்தொடர்ந்தான்.
"ஆனால், நாய்களுக்கு அதை எப்படி செய்வது என்பது அவை பிறக்கும்போதே தெரிந்திருக்கிறது. அதனால் அவற்றுக்கு நம்மைப் போல நீண்ட காலம் இருக்க வேண்டி இருப்பதில்லை" என்றான்.'' என்று பதிவு நிறைவு பெற்றிருந்தது.
இந்தக் கதையை படித்தவுடன்அபிராமி, நரேஷ், சுரேஷ்மூவரும் " இங்க பாருங்க, ப்ரூனோ இறப்பதை அல்லது அது முடியாமல் துடிப்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. கேட்ஸ் அண்ட் டாக்ஸ் நிறுவனம் பெங்களூரில் இருந்து இங்கே ஒரு கிளை ஆரம்பித்து இருக்கிறார்கள். அங்கே கொண்டு சேர்த்துவிடலாமே' என்றனர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலில் வருகிற பிசிறில்லாத கோரஸ்போல ஒரே குரலில்.
ப்ரூனோவுக்கு சிபிஎஸ்இ மாணவர் போல தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என மும்மொழி புரியும். இவர்கள் பேசியது அதற்கு ஏதோபுரிந்ததுபோலும்.
"என்னை எங்கும் கொண்டு போய் சேர்த்து விடாதீர்கள்' என்பது போல மெதுவாக எழுந்து வந்து ராஜவேலு சார் மடியில் படுத்துக் கொண்டது. அதன் கண்களில் கண்ணீர். ராஜவேலு சாரின் அப்பா கந்தவேலு கடைசி நேரத்தில் இப்படித் தான் அவர் மடியில் தலை வைத்துப் படுத்தார். ஏனோஅது இப்போது அவருக்கு நினைவில் வந்து மனதை அழுத்தியது.
கொஞ்சமும் எடையே இல்லை. சின்ன பஞ்சு தலையணை போல இருந்தது வால்டர். ராஜவேலு சாரின் மனம் மிகவும் கனத்தது.
" ப்ரூனோ இல்லாத வீட்டை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நம்மோடு அது வந்து பதினோரு ஆண்டுகள்ஆகிவிட்டன" என்றார்அபிராமி. எல்லோரின்கண்களிலும் கண்ணீர் குளம் போல தேங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT