தினமணி கதிர்

நினைவுகளைத் தேடி!

ரா. கதிரேசன்

இரவு எனது சொந்தக் கிராமத்தில் இருந்து போனில் வந்த செய்தி கேட்டு காலையில் காரை எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து பட்டுக்கோட்டை அருகில் உள்ள சிறு கிராமத்துக்குக் கிளம்பினேன். பள்ளிப் பருவத்தில் எனக்குள் நடந்த ரகசியம் என்பதால் என் மனைவியிடம் இதை பகிர முடியாததால், ஏதோ பொய் சொல்லி சமாளித்து ஊருக்கு கிளம்பினேன். காரை அதிவேகத்தில் விரட்டினேன்.

அன்று ஒருநாளில் அவள் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருந்திருந்தால், அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால், என் நினைவுகள் பின்னோக்கி சென்றதால்.. காரை கொஞ்சம் மெதுவாக இயக்கினேன்.

நான்கு வழிச் சாலையில் இருந்து விலகி, மண் சாலையில் இறங்கி, மேடு பள்ளங்களில் பயணித்து ஓடி விளையாண்ட எனது கிராமத்துப் பாதையை அடைந்தேன். ஆட்டுக் கூட்டம் என் காரை கடந்து சென்றன. என் கண்களில் கண்ணீர்த் துளிகள். அன்று பத்தாம் வகுப்பு பெயில். ஆனால் இன்றோ வெளிநாட்டு கம்பெனியில் லட்சக்கணக்கில் சம்பளம். சொந்தமான அப்பார்ட்மென்ட் வீடு- விலை உயர்ந்த கார். இதற்கெல்லாம் காரணம் அவள்தான்.

காரை விட்டு கீழே இறங்கி வயக்காட்டு ஓரம் நடக்க ஆரம்பித்தேன். நினைவுகள் இன்றும் பசு மரத்தாணியாக மனதில் பதிந்து உள்ளது. என் பள்ளிப் பருவம். 15 ஆண்டுகளுக்கு முன்பு, பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்து இருந்தது. பெயில்தான். எனக்கு அது சுதந்திரமாகவே பட்டது. இனி பள்ளிக்கூடம் போக வேண்டியதில்லை. படிக்கவே பிடிக்கலை. நண்பர்களும் அதிகம் கிடையாது. வீட்டை விட்டு வெளியே சென்று விடுவேன். கசங்கிய சட்டை, டிராயர் தான் எப்பவும். மதியம் வீட்டுக்கு வந்துவிடுவேன். எந்த வேலையும் கிடையாது. அன்றையப் பொழுதைப் போக்க வேண்டும் அவ்வளவே!

தூரத்தில் ஆட்டுக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. பாவம் விரைவில் உயிரை இழக்கப் போகும் பயமின்றி. அருகில் கொய்யா மரம். நான் எறிந்த கல் குறி தவறி எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தம். குறி தவறி எறியும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
அப்படியே நின்று விட்டேன். பட்டன் போடாத சட்டையை சரி பண்ணினேன். சிரித்துக் கொண்டே அவள், தனது ஆட்டை மேய்த்துக் கொண்டு சென்று விட்டாள். கையில் ஒரு கம்பு, தூக்குச் சட்டியில் சாப்பாடு. கடிகாரத்தில் மணி பார்த்துக் கொண்டேன்.
அடுத்த நாள் காலை நேரம் பார்த்துக் கொண்டே கொய்யாமரம் நோக்கி நடந்தேன். யார் அவள்? சிரிச்சாளே! என்னைப் பார்த்துதான சிரிச்சா? தெரியலை. அப்படித் தான் இருந்தது. மனசுக்குள் ஒரு மத்தாப்பு. அவளுக்காக காத்துக் கொண்டிருந்தேன். ஆட்டுக் கூட்டம் வேகமாக பள்ளத்தில் இருந்து மேலே ஏறிக்கொண்டிருந்தது. அவள்தான் அது, பார்த்து விட்டேன். பதினான்கு அல்லது பதினைந்து வயது இருக்கும். மரத்தடியில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். ஆச்சரியமாகப்பட்டது. மடிப்பு கலையாத உடை, வாரிப் படிந்த தலை, புத்தகத்தில் மூழ்கி இருந்ததால் என்னை கவனிக்கவில்லை.
""ஏய் உன் பெயரென்ன?'' என்று நேராகவே கேட்டுவிட்டேன்.
அவள் வெடுக்கென திரும்பி, ""எதுக்கு கேக்குற?''.
""நீ நேத்து என்னைப் பார்த்து சிரிச்ச தானே!''
""ஓ. அதைக் கேட்கத்தான் இங்க வந்தியா?''
""அதுக்கென்ன இப்பன்னு ..'' என்று சொல்லி, மீண்டும் சிரித்தாள்.
"உன் பெயர் என்ன சொல்லு''
"உன் பெயரென்ன சொல்லு. அப்புறம் நான் என் பெயரைச் சொல்றேன்.''
கொஞ்சம் யோசித்த அவள் பின்னர், "சரி சரி. நீ நல்ல பையன் மாதிரித்தான் இருக்கே! நான் கோமதி, உன் பேரென்ன!''
""நான் ஜோதி. முழு பெயர் ஜோதீஸ்வரன்.''
""ஆமாம் எதுக்கு இப்படி ஊர் சுத்திட்டு இருக்கிறே!''
"ஓ! அதுவா பத்தாம் வகுப்பு பெயில்.''
""ஏன் படிக்கப் போகல? உனக்கும் அம்மா இல்லையா?''
""இருக்காங்க. ஏன் அப்படி கேக்கிற கோமதி''
""எனது அம்மா இறந்து மூணு மாதம் ஆச்சு. எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பா பண்ணை வீட்ல மாட்டு வேலை பார்ப்பாக! வீட்டு வேலை, இந்த ஆடுகளையும் பார்க்கணும்ல! அதுதான் படிக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க?''
""ஹையா ஜாலிதான் உனக்கு.''
"இல்லை ஜோதீஸ்வரா, எனக்கு படிக்கணும். எப்பவும் கிளாஸ்ல நான்தான் பர்ஸ்ட். எங்க அம்மா மட்டும் இருந்துருச்சினா என்னை பிளஸ் டூ வரை படிக்க வச்சிருக்கும். என்ன பண்றது.'' என்று சொன்ன கோமதி, புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டாள்.
அடுத்த நாள் நன்றாக துவைத்து அயர்ன் பண்ணின உடையில் வெளியே கிளம்பிவிட்டேன். கீழே கிடந்த நாவல் பழங்களை எடுத்துக் கொண்டேன். அங்கே கோமதி.
""இந்தா நாவல் பழம். உனக்கு பிடிக்குமா?''
""ம். பிடிக்கும் கொடு.''
""அது சரி எப்ப பார்த்தாலும் படித்துக் கொண்டே இருக்கியே கோமதி!''
""ஆமாம் ஜோதீஸ்வரா ஸ்கூலுக்கு போக முடியலை. மனவருத்தம்தான். அதுதான் ஏதாவது படிச்சிக்கிட்டே இருப்பேன்!''
"சரி கோமதி, இப்ப படிப்பு நின்று போச்சே. உனக்கு கஷ்டமா இல்லையா?''
"ஓ! அதுவா ஒரு வழி இருக்குப்பா. அப்பாரு சொன்னாக என்னை நல்லா படிச்ச பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு. படிச்சவகளுக்கு நாமும், அவுகளுக்கு ஈக்குவலா இருக்குணும்ல, அதான் படிச்சுக்கிட்டு இருக்கேன்!''
""ஓ. அப்ப படிச்சவங்களைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்குவியா? பத்தாவது பெயிலானவங்களை கட்டிக்கமாட்டியா கோமதி?''
""வேண்டாம்பா ஆடு மேய்க்கிற பொண்ணுதானன்னு இப்படில்லாம் கேட்கிறே? ''என்று என்னிடம் இருந்து வார்த்தை வெளிவருவதற்குள் அவள், ""படிச்சவங்களைக் கட்டிட்டா ஸ்டேட்டஸ் உயரும்'' என்று அவள் கையை உயர்த்தி காட்டி சொன்னதை நான் மிகவும் ரசித்தேன்.
அவள் என்னிடம், ""ஆமாம் நீ யாரு? உங்க வீடு எங்க இருக்கு?'' என்றாள்.
""எங்கப்பா டிராக்டர் வச்சிருக்கார்.''
""ஓ. அந்த டிராக்டர் வீட்டுக்காரங்களா? உனக்கென்னப்பா கவலை இல்லை. படிக்கவே வேண்டாம்!''
""அது இல்ல கோமதி. படிச்சவங்களைதான் பொண்ணுகளுக்கு பிடிக்குமா?''
""எனக்கு தெரியாதுப்பா, ஆனால் எனக்குப் பிடிக்கும்.''
அன்றே நான் படிக்கணும்னு முடிவெடுத்துட்டேன். பெயிலான பத்து முடித்து விட வேண்டும். பிளஸ் டூ படிக்க வேண்டும். அப்புறம் அந்த கோமதியை...!
""கோமதி நான் பிளஸ் டூ படிச்சா போதுமா!''
"இல்லப்பா நீ டிகிரி படி. அதற்கு மேலும் படி. பூட்ஸ், டை போட்டு, கட்டி கார்ல வேலைக்கு போகணும். உன்னைப் பார்த்து குட் மார்னிங் சார்னு நான் சொல்லணும்.''
""அதுக்கு ஏழு எட்டு வருஷம் ஆகிடும் கோமதி.''
"அதுக்குள்ள உனக்கு கல்யாணம் ஆகிடும்ல!''
ஆமாம்ல என புத்தகத்தில் மூழ்கினாள்.
""ஆமாம் கோமதி இந்தப் புத்தகம் எல்லாம் உனக்கு எப்படி கிடைக்கிறது.''
"ஓ. அதுவா பழைய பேப்பர் கடை ராமுண்ணா எனக்கு ஓசியா படிக்க கொடுப்பார்.''
மனசுக்குள் ஆயிரம் எண்ணங்கள்.
""சரி வருகிறேன் கோமதி'' என்று கிளம்பினேன்.
எனக்கு ராமு அண்ணனைப் பார்க்கணும் போல தோன்றியது. கடைக்கு சென்றேன். என்னை தெரிந்து கொண்ட அவர், ""என்னப்பா ஜோதீஸ்வரா! பத்தாம் வகுப்பு பெயில் ஆகிட்டியா!, உனக்கு என்னப்பா! சொத்து சுகம் இருக்கு. கவலை இல்லைன்னு ‘' என்று சொன்னார்.
""நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா அந்த ஆட்டுக்கார பொண்ணு கோமதி, நீ நிறைய படிச்சு கம்ப்யூட்டர் உத்தியோகத்துக்கு போகணும்னு சொல்றா, அப்பத்தான் அவ....என்னைய......'' என்று வார்த்தையை முழுங்கினேன்.
""என்னப்பா சொல்றே?''
""ஒண்ணும் இல்லண்ணே'' என்று கூறி சமாளித்தேன்.
""பாவம்ப்பா அந்த கோமதி, அவுங்க சமுதாயத்துல அவ ஒருத்திதான் நல்லா படிக்கிற பொண்ணு. படிச்சு நல்லா வருவான்னு எதிர்பார்த்தேன். அவுங்க அம்மா இப்படி திடீரென போய் சேர்ந்துட்டா. குடும்ப கஷ்டம் படிக்க முடியலை. என் கடைக்கு வர்ற நல்ல புத்தகங்களை எல்லாம் வாங்கி படிச்சுட்டு, கொண்டு வந்து கொடுப்பாள்.''
""ராமுண்ணே! நானும் ரொம்ப படிக்கணும்னு ஆசைப்படுறேன்!'' என்று நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே கையில் புத்தகத்தோடு கோமதி வந்தாள்.
""அட இந்த கோமதி சொன்னதுக்குப் பிறகு படிக்கணும்னு ஆசை வந்துருச்சா!''
"ஆமா..'' என்று நான் சொன்னவுடனே கோமதி
என்னைப் பார்த்தாள்.
அவள் மனசில் சந்தோஷம். அவள் என்னை பார்த்த அந்தப் பார்வை, எனக்குள் ஏதோ பண்ணியது. ஆனால் அது என்னன்னு புரியவில்லை.
"இந்தா பாருப்பா நல்லா படிச்சு. இந்த ஊருக்கு ஆபீசரா வா. அப்படி வந்தா சந்தோஷப்படுற மொத ஆளு இந்த கோமதிப் பிள்ளைதான்'' என்றார் ராமு
அண்ணன்.
""ஆமாண்ணே'' என்று சொல்லி, நான் கிளம்பினேன்.
சிறிது தூரம் நடந்து கோமதியை திரும்பிப் பார்த்தேன். அவ சந்தோஷ மிகுதியில் தம்ஸ் அப் காட்டினாள். ரெக்கை கட்டி பறந்தது போல் நான் உணர்ந்தேன்.
ஆண்டுகள் கடந்தன. இன்று, கோமதி பொண்ணு சொன்ன மாதிரியே படித்து பெரிய பதவியில்
இருக்கிறேன்.
காரை ராமு அண்ணன் கடையை நோக்கி செலுத்தினேன். கடையை நெருங்க, நெருங்க என் மனது கலவரமாகியது. துக்கம் தொண்டையை அடைத்தது. எனது கார் ராமு அண்ணன் கடை அருகில் நின்றது. கடை பூட்டியிருந்தது.
நேற்று இரவு ராமு அண்ணன் போன் பண்ணினார்.
""ஜோதீஸ்வரா! நம்ம கோமதி இறந்துட்டா. இருபது நாள் ஆச்சிடா!'' என்றவுடன் என் கண்களில் பொல பொலவென்று கண்ணீர் ஊற்றெடுத்தது. தகவல் கேட்டவுடன் சென்னையிலிருந்து காரை எடுத்து என் சொந்த ஊருக்கு கிளம்பினேன்.
நினைத்துப் பார்க்கிறேன். ராமுஅண்ணன் அடிக்கடி சொல்வார், "ஜோதீஸ்வரன். உன்னோட இந்த அந்தஸ்துக்கு கோமதிதான் காரணம். அவளை என்றும் மறந்துவிடாதேன்னு, அடிக்கடி அவள், இங்கு வந்து உன்னைப் பற்றி விசாரிச்சிட்டு போவாள்'' என்பார்.
"அந்த கோமதி இப்ப இறந்துட்டாளா?' என்று இனி அவளை நான் பார்க்கவே முடியாதுன்னு நினைக்கும்போது இன்னும் அழுகை வந்தது.
அன்று நான் பிளஸ் டூ முடித்த கையோடு கோமதியை நோக்கி சென்றேன். சாப்பிட தயாராகிக் கொண்டிருந்தாள்.
""ஹேய் ஜோதீஸ்வரா! நீ பிளஸ் டூ பாஸ்தானே.''
"ஆமாம் அதான் உன்னைப் பார்க்க வந்தேன். கோமதி உன்னிடம் ஒன்று கேட்கப் போறேன். என் மனசுல உள்ளதை உன்னிடம் சொல்லப் போறேன்.''
"ஐயோ என்னப்பா புதிர் போடுற. இப்ப எனக்கு பசிக்குது. இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோமா?'' என்று சொல்லிக்கொண்டே தூக்குச்சட்டி மூடியில் சாப்பாடு போட்டாள். வேண்டாம்னு சொன்னேன்.
""ம். சாப்பிடுப்பா!'' என்று சொன்னாள். சாப்பாட்டில் அவளுடைய கை மணம் தெரிந்தது.
""ஜோதி உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்தான் இரண்டு நாளா காத்துக்கிட்டு இருந்தேன். இப்பவாவது வந்தியே?'' .
என் மனதில் இனம் புரியாத ஒரு ஆனந்தம்.
""சரி சொல். கோமதி '' என்றேன்.
""எனக்கு அடுத்த மாதம் கல்யாணம். மாப்பிள்ளை மில் வேலை. படிப்பு ஒன்பது பெயிலுப்பா!'' என்று முகத்தை திருப்பிக் கொண்டே சொன்னாள்.
எழுந்து கை கழுவ ஆரம்பித்தாள். என்னால் நகரக் கூட முடியவில்லை.
எல்லாமே அவ்வளவுதானா? எல்லாம் முடிஞ்சி போச்சா? மனசு வலித்தது.
""ஆமாம் ஜோதீஸ்வரா! என்னமோ சொல்லனும்னு சொன்னீயே? என்னன்னு சொல்லு. அது வந்து.. கல்யாணம். அதுதான் நீயே சொல்லிட்டீயே? உனக்கு கல்யாணம்னு'' என்று மென்று முழுங்கினேன். பொங்கி வந்த கண்ணீரை அவள் பார்க்காதவாறு அடக்கிக்கொண்டேன்.
""சரிப்பா அதவிடு. என் விதி அப்படி. நீ நல்லா படிச்சி ஒரு நாள் என் முன்னாடி கார்ல வரணும். உன் காரில நான் உட்கார்ந்து பார்க்கணும்'' என்று சொல்லிக்கொண்டே விலகிச் சென்றுவிட்டாள்.
அன்று அவள் முகத்தை எனக்கு காட்டவே இல்லை. அவள் முகத்தை நான் பார்க்கத் துடித்தேன். ஆட்டுக்கூட்டத்தோடு கரைந்து விட்டாள். உள்ளூரில் இருக்க பிடிக்கவில்லை, வெளியூரில் படிக்க சென்றுவிட்டேன்.
நான் கல்லூரி சென்ற பிறகும், வேலைக்குச் சென்ற பிறகும் அவளை நான் பார்க்க விரும்பவில்லை. எப்போதாவது அவள் கணவன், குழந்தையோடு வழியில் பார்ப்பதுண்டு. ஆனால் பேசிக்கொள்வதில்லை.
ராமு அண்ணன் கடை பூட்டியிருந்ததால் ஏமாற்றம் அடைந்தேன். நானும், கோமதியும் முதன்முதலாகச் சந்தித்த அந்த இடத்துக்குப் போக வேண்டும் என்று மனம் துடித்தது. மறுபடியும் காரில் அமர்ந்து மெதுவாக வண்டியை செலுத்தினேன். மனம் எதைஎதையோ அசைபோட்டது.
பல ஆண்டுகளாக எனக்குள் ஒரு கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை. அந்த பதினான்கு, பதினாறு வயதுகளில் அவளுடன் பழகியிருக்கிறேன். அது நட்பு மட்டும்தானா?. இனம் புரியாத வயது. எனக்குள் இருந்தது நட்பா, காதலா? என் மனதில் அது காதலாகவே எனக்குப் பட்டது. அவளிடம் நான் எதுவுமே கேட்டதில்லை. அவள் மனதில் என்ன இருந்து
இருக்கும்?.
அவள் பதினெட்டு வயதில் கல்யாணம் பண்ணிக்கொண்டாள். எங்களது அந்த மூன்று ஆண்டு தொடர்பில் எனக்குள் அது காதலாகவே இருந்தது. ஆனால் அந்த சின்ன வயதில் அவளுக்குள் என்ன தோன்றியிருக்குமோ? என்னைப் பற்றி என்னதான் நினைத்து இருந்து இருப்பாள். எதுவுமே சொல்லாமல் போயிட்டியே?
கோமதி, உன் மனதில் இருப்பதை சொல்லியிருந்தால்! முடிஞ்சி போன விஷயம். அது என்னமோ கோமதி இன்று நீ இல்லை. நான் உயிருள்ளவரை உன்னை நினைத்துக் கொள்வேன். ஆனால் உன்னுள் இருந்தது என்னவென்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் ஊருக்கு வரும்போதெல்லாம் உன்னிடம், " என்னை காதலிச்சியா?' என்று கேட்கத் துடித்தேன்.
"நான் உன்னை எப்படியெல்லாம் மனதுக்குள் காதலித்தேன்' என்று சொல்லியிருப்பேன். ஆனால் என்றுமே எனக்கு அந்தத் தைரியம் வந்ததில்லை. நமக்குள் எதுவுமே பேசிக்க முடியாமல் போச்சே கோமதி. என் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.
தூரத்தில் ஒரு ஆட்டுக் கூட்டம், ஒரு குட்டிப் பெண். வயது பத்து இருக்கும். காரை நிறுத்திவிட்டு நடந்தேன். கோமதி மகள்தான் இவள் என மனதுக்குள் பட்டது. மெதுவாக அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
அவள் கையில் புத்தகம். "ஹலோ' என்று சொன்னேன். திரும்பிப் பார்த்தாள். என்னை ஏற இறங்கப் பார்த்தாள். எழுந்து நின்று, "குட் மார்னிங் சார்'
என்றாள்.

என்னால் எதுவுமே பேச முடியவில்லை. அன்று கோமதி சொன்னதுதான் ஞாபகம் வந்தது.

""என்னம்மா படிக்கிற?''

"நாவல் சார். ராமு அங்கிள் கடையில் பழசு வாங்கினேன்.''

""ஏன் படிக்கப் போகலையா!''

""இல்லை சார். எங்க அம்மா கோமதி செத்துப் போச்சி. அப்பா மில் வேலைக்கு போயிடுவார். அம்மா ஆசையா வளர்த்த ஆடுக, இதுகளை பார்த்துக்கணும்ல. படிக்கணும்னு ஆசை. அதுதான்! எல்லாவற்றையும் வாசித்துப் பழகிக் கொள்வேன். அம்மாக்கு என்மேலே கொள்ளை ஆசை. என்னை ரொம்ப படிக்க வைக்கணும்னு சொல்லிட்டே இருக்கும். அதுக்குள்ள இப்படி பொசுக்குன்னு போயிடுச்சி'' என்று அவள் கண்கள் கலங்கின.

""அது உன் காரா சார். உட்கார்ந்து பார்க்கட்டும்மா? ''
என்று காரை நோக்கி ஓடினாள். அமர்ந்து கொண்டாள்.
கோமதி உட்கார ஆசைபட்ட கார், இன்று அவள் மகள்.
""நீங்க என்ன சார் படிச்சி இருக்கீங்க?''சொன்னேன்.

""சார் எங்கம்மாவும் என்னை அந்த படிப்புதான் படிக்க வைக்கப் போறேன்னு சொன்னாங்க!''

நெஞ்சை அடைத்தது. கோமதி, உன் மனதில் என்னென்ன கனவுகள். இந்த பதினைந்து ஆண்டு காலம் நான் உன்னை அதிகம் நினைத்திருக்கேன். ஒரு தோழியா, ஒரு காதலியா சொல்லு கோமதி!, என்னை ஒரு நாளாவது நினைத்துப் பார்த்து இருந்திருப்பியா?.

தவறு என்மேல் தான். நான் ஆம்பளை தைரியமாய் என் மனதில் இருந்ததை சொல்லியிருக்கணும். அந்த வயதில் சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வு எனக்குப் புரியாதிருந்த காலம். எதுவும் முடியும் என்று தோன்றின வயது. அந்த மூன்று ஆண்டு காலம் இன்று நினைத்தாலும் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் என்னுள்ளே வட்டமடிக்கும்.

""சார் எல்லோரும் என்னை குட்டிம்மான்னு கூப்பிடுவாங்க!'' என்று அந்த பிஞ்சு குரல் கேட்டு அவள் அருகில் வந்தேன்.

"சொல்லும்மா' என்று அவளை வாஞ்சையுடன் பார்த்தேன்.

""அப்பா இன்னும் என்னை தூக்கிட்டுத்தான் கொஞ்சுவாங்க. அம்மா எனக்கு டெய்லி பாடம் சொல்லி கொடுப்பாக. என்னை இங்கிலிஸ் பேசச் சொல்லிக் கேட்கும். அம்மாதான் எனக்கு பெயர் வைச்சதா சொல்லும். மூச்சுக்கு மூச்சு பெயர் சொல்லித்தான் அழைக்கும். முத்தமா கொடுக்கும். ஆனால் இப்ப அம்மா இல்லை சார்'' என்று கண் கலங்கினாள்.

""அம்மா இருந்திருந்தா என்னை காலேஜ் படிப்பு படிக்க வைச்சிடும்!'' என்ற வார்த்தை என் கோமதியின் வார்த்தையாக வந்து விழுந்தது. வடிந்த கண்ணீரை அவள் சட்டையால் துடைத்துக் கொண்டிருந்தாள். தேம்பி அழ ஆரம்பித்தாள். என் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

நான் இங்கு வந்திருக்கக் கூடாதோ என்று நினைக்க ஆரம்பித்தேன். அவளை அழ வைத்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு மனதில் தொற்றிக் கொண்டது.
ஆட்டுக் கூட்டம் வெயிலுக்கு மரத்தடியை நோக்கி நடந்தன.

""குட்டிம்மா அழாதே!''
என் மனம் தவித்தது. என்னால் அங்கு இருக்கப் பிடிக்கலை. ஏன்?, உன் மகளுக்கு இந்த நிலைமை கோமதி!. நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை உன் மனதில் என் மீது காதல் இருந்தால் சொல்லியிருப்பாய்தானே. இருந்திருக்க வாய்ப்பே இல்லையா. நீ அப்படி என் கூட பழகலையா? இப்பொழுது நான் அதைப் பற்றி சிந்தித்ததே தப்பு. கடவுளே என்னை மன்னித்துவிடு. நான் ஏதாவது இந்தப் பெண்ணிடம் உளறிவிடுவேன். ஒரு புனித ஆத்மாவை கொச்சைப் படுத்திவிடுவேனோ?.

நான் இந்த இடத்தைவிட்டுப் போகணும். நான் உணர்ச்சிவசப்பட்டு இருக்கேன். எங்கள் நட்பை நான் இவளிடம் சொல்லிவிட்டால், ஐயோ! கூடாது. இல்லாத ஒன்றை நானே கற்பனை செய்துகொண்டு, இந்த பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்து விடக்கூடாது. இப்பவே இந்த இடத்தைவிட்டுப் போய்விட வேண்டும்.

என்னுள் இருந்த காதல் அவளிடம் இருந்ததா என ஏன், இத்தனை ஆண்டு கழித்து என் கோமதியின் நினைவுகளைத் தேடி ஆராய வந்தேன், நான் இங்கு எதற்கு வர வேண்டும். சரி கோமதி, நான் செல்கிறேன், என மனதுக்குள் மானசீகமாக சொல்லிக்கொண்டு, புரியாத புதிராக, என் கேள்விகளுக்கு எந்தவித விடையும் தேட மனமின்றி நகர்ந்தேன்.

அழுதுகொண்டிருந்த அந்த குட்டிம்மாவின் தோளை ஆறுதலாக தட்டிக் கொடுத்து, காரை நோக்கி நடந்தேன். கார் கதவைத் திறந்தேன். அங்கே நிற்ககூட மனமில்லை. விரைவாக சென்றுவிட வேண்டும், இந்த இடத்தைவிட்டு அதுவும் இப்பவே.

கோமதி நாம் ஒருவருக்கொருவர் அன்பு வைத்து, பாசம் வைத்து, வெளியில் எதுவும் சொல்ல முடியாமல் இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் வாழ்ந்து இருந்திருக்கிறோம். இன்று நீ இல்லை. எனக்கு குடும்பம், குழந்தை என்று வந்து விட்டாலும், என் மனதில் விடை கண்டுபிடிக்கவே முடியாத இந்தக் கேள்வி என்னை கொன்று கொண்டிருக்கிறது.

ராமு அண்ணனிடம் நம் இருவரைப் பற்றி மனம்விட்டுப் பேச வந்தேன். ஆனால் உன் மகளின் அழுகையைப் பார்த்த பின்பு எனக்கு விடை தேட பிடிக்கவில்லை. நான் போகிறேன் கோமதி உன் நினைவுகளுடன் இந்த கிராமத்தை விட்டு!
என் காரை ஸ்டார்ட் செய்தேன். அவள் மகள் முகத்தைக் கூட பார்க்க தைரியமின்றி, ஒருவித குற்றவுணர்வுடன் அகன்றேன்.

""சார்! போயிட்டு வாங்க. இந்தப் பக்கம் வரும் பொழுது என்னைப் பார்க்க வாங்க! என்னை மறந்துடாதீங்க சார்! என் பெயர் ஜோதி.. முழு பெயர் ஜோதீஸ்வரி.''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT