தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தூக்கம் நன்றாக வர என்ன வழி!

எஸ். சுவாமிநாதன்

என் வயது 90. வலது கண்ணுக்கு வரும் ரத்த நாளங்களில் ரத்தம் வரவில்லை என்று ஸ்கேன் மூலம் தெரியவந்துள்ளது. தூக்கமும் சரியாக வருவதில்லை. இந்த இரு பிரச்னைகளும் தீர வழி என்ன?

-இரா.கிருஷ்ணமூர்த்தி,
ஆனத்தூர், செஞ்சி.

இதயத்திலிருந்து வெளியேறும் ரத்த அழுத்தம் உடலின் மேற்பகுதியான தலைக்கு சரிவர இயங்காத நிலையில், பிராண வாயுவின் வரவானது மந்தமாகிப் போவதால், கண் சார்ந்த ரத்த நாளங்களில் ரத்த ஓட்டமானது தடையுறுகிறது.

வாயுவின் உந்துதல் சக்தியை நன்கு மேம்படுத்த,  "அஸ்வகந்தா' எனும் சூரண மருந்தை நீங்கள் சுமார் ஐந்து கிராம் எடுத்து, அதில் ஐந்து மில்லி தேனும் விட்டுக் குழைத்து, காலை இரவு உணவு உண்ணும் வேளையின் இடை இடையே சிறிய அளவில் நக்கிச் சாப்பிட வேண்டும்.

ரத்த நாளங்களின் உட்புறக் குழாய்களின் ரப்பர் போன்ற சுருங்கி விரியும் தன்மையை இம் மருந்து உறுதி செய்து தருகிறது. பிராண வாயுவின் வருகையையும் துரிதப்படுத்துகிறது.

கண்ணைச் சுற்றியுள்ள உட்புற, வெளிப்புற தசைக்கூட்டங்களில் அடங்கியுள்ள நரம்புகளின் செயல்களனைத்தையும்  ஊக்கப்படுத்தித் தருகிறது.

இம்மருந்து மட்டுமே போதுமா என்று நீங்கள் கேட்டால் போதும் என்று கூற மனம் விரும்பினாலும், வெளிப்புறமாகவும் கண் சார்ந்த நரம்பு மண்டலங்களையும் ரத்த நாளங்களின் சுறுசுறுப்பான செயலாற்றலையும் துரிதப்படுத்த, தலை மற்றும் கண்ணைச் சுற்றி ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய க்ஷீரபலா தைலத்தை வெதுவெதுப்பாகத் தடவி, அரை முக்கால் மணி நேரம் வரை ஊறிய பிறகு, கண் மீது இளம்சூடாக சூடாக்கப்பட்ட மிருதுவான துணியை ஒத்தடம் கொடுக்கப் பயன்படுத்தலாம்.

நரம்புகளின் ஊட்டத்தை உறுதிபடுத்தவும், ரத்த நாளங்களில் உட்புற விட்டம் சுருங்காமல் சுறுசுறுப்புடன் இயங்க, அஸ்வந்தாரிஷ்டம் சுமார் 30 மி.லி. காலை இரவு சாப்பிட வேண்டும். ஆழ்ந்த உறக்கத்துக்கும் இது நன்கு பயன் தரக் கூடும்.

வியானன் என்ற வாயு இதயத்திலிருந்து செயல்படுகிறது. ஒரு நொடியில் உடலெங்கும் சென்று திரும்பக் கூடியது. திரவப் பொருட்களை உடல் முழுவதும் எடுத்துச் சென்று, அந்த திரவப் பொருட்களில்  அடங்கியுள்ள சத்துக்களை அந்தந்த பகுதிகளில் தேவையான ஊட்டத்தை அளிக்க, தன் பங்கான உந்துதல் சக்தியை பயன்படுத்துகிறது. இந்த வியானன் எனும் வாயு தங்களுக்கு மந்த கதியில் செயல்படுவதால், ரத்த நாளங்களில் ரத்த நுழைவு மந்தமாகி போவதை உணர்த்துகிறது.

இரண்டு வாயு  குளிகைகளை அஸ்வகந்தாரிஷ்டத்துடன் காலை உணவிற்குப் பிறகு சேர்த்துச் சாப்பிடவும். அது, வியான வாயுவின் செயல்பாடுகளைச் சீராக்கித் தரும்.

நீங்கள் அதிக நேரம் நிற்பதையோ, நடப்பதையோ தவிர்த்து, படுக்கையில் தலையணை வைக்காமல் படுத்திருப்பதே மேல். 

புவி ஈர்ப்பின் சக்தியானது, ரத்த ஓட்டத்தை இதன்மூலம் சீராக்கி தங்களுக்கு ஏற்பட்டுள்ள உபாதைக்கான தீர்வாக அமைத்து தரக் கூடும்.

கல்யாணக கிருதம் எனும் நெய் மருந்தை சுமார் ஐந்து முதல் பத்து மில்லி வரை, சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதால் மூளையிலுள்ள ரத்த நாளங்களின் செயல்பாடுகள் சீராவதுடன் நல்ல உறக்தத்திற்கான மாற்றங்களையும் மூளையில் ஏற்படுத்தித் தரும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT