தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல், மன உபாதைகளில் விடுபட..?

17th Jul 2022 06:00 AM

ADVERTISEMENT

 


வறுமையைச் சமாளிக்க என் கணவர் நைஜீரியாவில் வேலை செய்கிறார். ஒரே மகள் பெங்களூருவில்  வேறு மதம் சார்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டாள். வேறு வழியின்றி அவளுடன் தற்சமயம் வாழ்ந்து வருகிறேன். உறக்கமின்மை, மனக் கவலை, அடிக்கடி அழுகை போன்ற உடல், மனம் சார்ந்த உபாதைகளில் துன்புறுகிறேன். இவை அனைத்தும் குணமடைய வழி உள்ளதா?

-சாந்தி,
பெங்களூரு.

மனமும், உடலும் தனித்து இயங்குபவையல்ல. ஒன்றில் ஏற்படும் தாக்கம், மற்றதையும் பாதிக்கும் என்பதால், மனம் சார்ந்த இரு தோஷங்களாகிய ரஜஸ்- தமஸ், உடல் சார்ந்த வாத, பித்த, கப தோஷங்கள் ஆகியவற்றில் ஏற்படும் கலவைகளின் வெளிப்பாடே நீங்கள் குறிப்பிடும் உபாதைகளுக்குக் காரணமாகின்றன.

ADVERTISEMENT

குடும்பத்தில் ஏற்படும் மன வேதனையான சம்பவங்கள்,  உண்ணும் உணவின் சாரமான அம்சத்தை மனவேதனையால் ஏற்காமல் போவதால்,  அவை கழிவுகளாக வெளியேற்றப்படுவதால் ஏற்படும் உடல் வாட்டம், மனதிற்குத் தேவையான போஷகாம்சங்களின் வரவைக் குறைப்பதால் ஏற்படும் மனதின் பலக் குறைவு ஆகியவற்றால் உறக்கமின்மையும் அடிக்கடி அழுகையையும் 
ஏற்படுத்தும்.

மனதின் மிக உயர்ந்த குணமாகிய ஸ்த்வத்தை தமஸ்- வாதம்- கபம் எனும் திரிஷேங்களின் ஆதிக்யத்தால் சூழப்படும் நிலையில், மன அமைதியானது தொலைந்து விடுகிறது. உறக்கமின்மையும், மனக் கவலையும் ஒருசேர சேர்வதால்  ஏற்படும் மனக் களைப்பை அகற்றவும், நிம்மதியான தூக்கத்துக்கு உதவவும், வாத கபம் மற்றும் தமஸ்ஸின் சூழலை வெளியேற்றவும் மிகச் சிறந்த மருந்தாக ஜாதிக்காய் பயன்படும்.

சுவையில் கசப்பும், காரமும் கொண்ட ஜாதிக்காய் எளிதில் செரிக்கும் தன்மையுடையது. ஊடுருவிப்பாயும் தன்மையும், சீரண இறுதியில் காரமான சுவையாகவும், வீர்யத்தில் சூடானதும் வாத- கப தோஷங்களின் சீற்றத்தை அடக்குவதுமாகிய அதனை, சுமார் 15-20 முறை ரோஜா பன்னீரில் சுழற்றினால் வரக் கூடிய கலவையை இரவு படுக்கும் முன் நக்கிச் சாப்பிடுவதால் ஏற்படும் ஆழ்ந்த உறக்கம், மறுநாள் காலை மனம் சார்ந்த வேதனைகளை வெகுவாக அகற்றும்.

சொரசொரப்பான ஒரு கல்லில், ஜாதிக்காயை ரோஜாப் பன்னீருடன் இழைப்பதே, சுழற்றுவது என்று அர்த்தமாகும். சுமார் 7 முதல் 10 நாள்கள் வரை சிறிய அளவில் இதனைச் சாப்பிட்டால் போதுமானது. 

நரம்பு மண்டலத்தில் இது செயல்புரிவதால், தொடர்ந்து சாப்பிடுவதைவிட சில நாள்கள் சாப்பிட்ட பிறகு, ஓரிரு வாரங்கள் சாப்பிடாமல் விட்டுவிட்டு, மறுபடியும் சில நாள்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.

நல்ல உறக்கத்தின் வாயிலாக ஏற்படும் மனத் தெளிவானது, குடும்பச் சூழ்நிலையைச் சமாளிக்கும் வழியையும், எதிர்காலத்தில் வளமையான ஆற்றலைப் பெறும் சக்தியையும் ஏற்படுத்தித் தரும்.

மனவலுவைக் கூட்டும் மிகச்சிறந்த ஜாதிக்காயை நீங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கின்றீர்கள். அஸ்வகந்தா எனும் சூரண மருந்தை, தூளாக்கிய கல்கண்டுடன் கலந்து, இரவில் வெதுவெதுப்பான பாலுடன், உணவிற்கு சுமார் ஒருமணி நேரம் முன்பாகச் சாப்பிட, அதுவும் நல் உறக்கத்திற்கும், மன வலிமைக்கும் ஜாதிக்காயை போல, உதவிடக் கூடும்.

கணவர் எப்போது    நைஜீரியாவிலிருந்து திரும்புவார், மகளைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறதே போன்ற கவலைகளை மறக்கஆழ்நிலைத் தியானப் பயிற்சிக் கூடங்கள் பெங்களூருவில் செயல்படுகின்றன. அதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இனிய நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் அடிக்கடி பேசலாம். அதனால் மனம் லேசாகிறது.  மனக்களிப்பானது கூடுகிறது. மருந்தும்- தியானப் பயிற்சியும், நல்ல நண்பர்களின் சேர்க்கையும் நிச்சயம் உங்களின் வாழ்க்கையை வளமாக்கும்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT