தினமணி கதிர்

விதியின் கை!

தினமணி


""அப்பாதான் தினமும் ஆபிசுக்குப் போறாரே? ஏன் தாத்தாவுக்கு கோபம் வருது ?'' என்று அந்த வயதுக்கே உரிய கொச்சையில் மாலினி பாட்டியை விசாரித்தாள்.
இந்திரா நகரில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு. முன்னிருந்தது போல் பங்களா அல்ல. மூன்று வாகனங்களும் இரண்டு ஓட்டுநர்களும் இப்போது இல்லை. ஆனாலும், குழந்தைக்குப் பள்ளிக்கூடம் போக வர ஒரு வேனும், டியூசனுக்குச் செல்ல ஆட்டோவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
""தாத்தா சுபாவமே அது மாதிரிதான். தான் நெனச்சதைத்தான் சரியென்று சாதிப்பார். எத்தனை வருஷம் குடித்தனம் பண்ணியிருக்கேன்'' என்று பதில் சொல்லுகிறார் போலவும் முணு முணுத்தார் போலவும் என்னவோ சொன்னாள் பாகீரதி.
""அப்படியா பாட்டி?'' என்றாள் மாலினி. ஒரு நிமிடம் யோசித்து, "" பிசினஸ் பண்ணறது தப்பான விஷயமா? ஸ்கூல்லே கூட என்னைப் பார்த்து டீச்சர் ரகசியமா பேசிகிட்டாங்க.''
"" சரி... சரி வாயாடாதே... டிரெஸ் மாத்தி டியூசனுக்கு கிளம்பு'' என்று அதட்டினார் சங்கரன்.
ஹாலில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து சின்னத்திரையில் நோட்டம் விட்டுக் கொண்டே, மல்லிகையைத் தொடுத்துக் கொண்டிருந்த கங்கா வேகமாய் எழுந்தாள். குழந்தையின் முதுகில் ஓர் அறை வைத்தாள். "" உன் வேலை ஸ்கூலுக்குப் போவது, பாடம் படிக்கிறது. தெரிஞ்சுதா?'' என்றாள் கோபமாக. விழி நுனியில் இலேசாகக் கண்ணீர்.
பாகீரதி கணவரை உற்று நோக்கினாள்.
""இப்ப திருப்திதானே ? உங்க எரிச்சலுக்கு மாலினி மாட்டினாள்! இங்கே வா மாலுக் கண்ணா'' என்று பேத்தியைக் கொஞ்சலாக அழைத்தாள்.
சங்கரன் மடமடவெனத் தன் அறைக்குள் நுழைந்தார். ஏதும் தெரியாத ஓர் அறியாத குழந்தை "" பிசினஸ் பண்ணறது தப்பா'' என்று கேட்டது, அவரை உருக்கிக் கொண்டேயிருந்தது. வியாபாரம் செய்வது பாவமா இல்லை சுயதொழிலில் இறங்குவது தவறான செயலா? இரண்டுமில்லை. ஆனால் ஒரே பிள்ளை அரவிந்தன் பூனாவில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவன். பொன்னான வேலையிலிருந்து நீங்கி பிசினஸில் பல குளறுபடிகள் செய்து சட்டச் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ளலாமா?
" தானும் கெட்டு, திருக்குளத்தையும் கெடுத்த மாதிரி' என்ற பழமொழிதான் அவருக்கு தோன்றியது. தலையைக் கெட்டி யாகப் பிடித்துக்
கொண்டார்.
"தினசரி தியான' நூலில் இரண்டு வரி படித்தார். ஒரு மாறுதலுக்காக அலமாரியிலிருந்து ஜெயகாந்தன் கதைத் தொகுப்பை எடுத்தார். பார்த்தவுடனேயே தென்பட்ட தலைப்பு துணுக்குறச் செய்தது.
"தவறுகள் குற்றங்கள் அல்ல' புத்தகத்தை மூடிவிட்டு கண்களை இறுக பொத்திக் கொண்டார். ஞாபகத்துக்கு வந்த கந்த குரு சவசத்திலிருந்து சில வரிகள் முணுமுணுத்தார். தன்னையுமறியாமல் அவர் கண்கள் எதிரே இருந்த அரவிந்தன் - கங்கா திருமண புகைப்படத்தில் தாவியது.
கங்கா வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவளே இல்லை. படித்த நடுத்தர வர்க்கம். நிறைய உடன் பிறந்தவர்கள். என்றாலும் தங்கள் குடும்பத்துக்குப் பொருத்தமாக இருப்பாள் என்று நம்பியதால் மனைவியைச் சம்மதிக்க வைத்தார். அந்தஸ்து ஏற்றதாழ்வை மீறி அரவிந்தன் கங்காவின் வனப்பில் மயங்கிப் போயிருந்தான்.
அரவிந்தனின் மண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. நாலு வருடமாகியும் வாரிசு உருவாகவில்லையே என்ற குறையைத் தவிர.
யாரோ ஓர் உறவு மனிதர் ஒருவர் சொல்லி
பூர்வீக ஊரான திருநெல்வேலி பக்கம் இருக்கும் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடச் சொன்னார். குல தெய்வ சாஸ்தாவின் அருளோ, கால் வலிக்க வலிக்கச் சிவன் கோயிலை பாகீரதி வலம் வந்ததாலோ, பொறுமையிழக்காமல் மாற்றி மாற்றி தம்பதிகள் கேட்ட மருத்துவரின் ஆலோசனையிலோ ஏதோ ஒன்று நல்ல படியாக ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள் கங்கா.
சங்கரனுக்கு ரொம்பவே சந்தோஷம். விசாலமான இடம், தோட்டம் என்றிருந்த பெரிய பங்களாவைச் சுற்றி வளைய வர ஒரு பேத்தி பிறந்தாளே!
ஆனால் ஆகாயம் எப்போதுமே நீலமாய் பிரகாசமாய் இருப்பதில்லையே? கரு மேகங்கள் சூழ்ந்து கொள்ளும்தானே? சங்கரன் இல்லத்திலும் மேகம் சூழ்ந்தது. ஒரு சாதாரண கையெழுத்து ரூபத்தில்.
அந்த நாளைச் சங்கரனால் மறக்கவே முடியாது. ஒன்றரை வயசு மாலினியைத் தூங்கப் பண்ணி ஏதோ ஒரு நூலைப் புரட்டிக் கொண்டிருந்தாள் கங்கா.
""அப்பா ! இங்கே வாருங்களேன்'' என்று அழைத்தாள். அவள் கைகளில் ஒரு பக்கம் விரிந்த வாக்கில் புத்தகம். தாய் என்ற பதவி வந்ததும்தானே மாமனாரிடம் சகஜமாய் பேசும் தைரியம் வந்தது.
""கவிமணி இந்த மாதிரி பாடல் கூட எழுதியிருக்கிறாரோ ? நான் அவரை குழந்தைக் கவிஞர் என்ற நினைப்பிலிருந்தேனே ?''
தன்னைப் போல் இவளும் ஒரு புத்தக ரசிகை என்ற உற்சாகம் சங்கரனுக்கு.
""அது மட்டுமா ? சினிமாவில் கூட அவர் பாட்டு ஒலித்திருக்கிறது. ஆ... எம்.எல்.வி. பாடினது. "கோயில் முழுதும் கண்டேன்...'' என்று பாடவே ஆரம்பித்தார்.
""போதுமே... கூத்தடிக்காதேங்கோ ? உங்க கொடூரமான குரலைக் கேட்டு குழந்தை எழுந்துடப் போறது'' என்று செல்லமாகக் கணவரைச் கடிந்து கொண்டாள்.
"எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி' வரியின் பக்கத்தில் அடையாளம் வைத்து மெளனமானாள் கங்கா.
வாசல் கதவு திறக்கப்படும் ஓசை, கார் ஹாரனின் ஓலி. அரவிந்தனின் சரக் சரக்கென்ற செருப்பின் சப்தம்.
கதவைத் திறந்த கங்கா "" என்ன பெர்மிஷனா'' என்று கணவரைக் கேட்டாள்.
ஒரு நிமிடம் முறைத்துப் பார்த்த அவன், "" நான் கம்பெனியில் பெரிய அதிகாரி. எனக்கு பெர்மிஷனே தேவையில்லை !'' என்று சொல்லிவிட்டு மாடிப் படிகளில் தாவிச் சென்றான்.
பாகீரதிக்கு அதிர்ச்சி. "நீங்கள் ஏதும் கேட்காதீர்கள். கணவன், மனைவி பாடு' என்கிற மாதிரியான பாவனையில் சங்கரனைப் பார்த்தாள்.
மறு நாள் அரவிந்தன் ஆபீஸ் போகவில்லை. அடுத்த தினமும் .
"" என்னடா அரவிந்த் உடம்பு சரியில்லையா ? தொடர்ந்து லீவு.''
தந்தை முடிக்கும் முன் மகன் குறுக்கிட்டான்.
"" இனி எப்போதுமே இந்த வேலை வேண்டாம் !
நான் ராஜிநாமா செய்ய முடிவு செய்தாயிற்று.''
நீண்ட முடிவே இல்லாத கனத்த மவுனம். அரைத் தூக்கத்திலிருந்து மிரண்டு போய் எழுந்த மாலினியின் முதுகில் தடவிக் கொடுத்தாள் கங்கா.
கொஞ்ச நிமிடமான பிறகு, "" பின்னே என்னப்பா ! நான் பல தடவை லேட்டாகப் போகிறேனாம்! ஒரு பிரகஸ்பதி என் கையெழுத்துக்கு நேரே, நேரத்தைக் குறிச்சு வைச்சிருக்கான். தற்செயலாக விசிட் செய்த எம்.டி. என்னைக் கோபித்தார்'' என்று சொல்லிக் கொண்டே போன அரவிந்தன் நிறுத்தினான். வறட்சியான சிரிப்புடன்.
"" வருடம் 12 லட்சம் வாங்கற அதிகாரிக்கும், டெய்லி வேஜருக்கும் வித்தியாசமே தெரியாத ஒரு எம்.டி.''
சங்கரனுக்கு ஆத்திரம்தான்.
வேலையிலிருந்து விலக இது ஒரு காரணமா !
தான் வருமான வரி இலாகாவில் அதிகாரியாக பணிபுரிந்த சமயம் கேட்காத வார்த்தைகளா?
பார்க்காத மேலதிகாரிகளா? என்றாலும் சூடாகக் கூறி, சூழ்நிலையை மேலும் மோசமாக்க வேண்டாம் என்றெண்ணினார்.
மெதுவாக, "" படிச்சவன், நல்ல கம்பெனியில் வேலை, இப்பத்தான் குழந்தை பிறந்திருக்கு, பொறுப்பாக...''
"" அப்பா! நீங்கள் பேசாமலிருங்கள். நிறைய உபதேசங்கள் என் சட்டைப்பை முழுக்க இருக்கு !'' என்று கூறினான் அரவிந்தன்.
எதற்கும் சமாதானமாகவில்லை அவன். மாலினியின் கொஞ்சல், மனைவியின் மை விழிக்காதல் பார்வை, பாகீரதியின் இதமான ஆலோசனை, தகப்பனாரின் அறிவுரை, ஊஹூம் எதுவும் அரவிந்தனை மாற்ற முடியவில்லை.
""நான் சில நாள் தாமதமாப் போனதற்கு அதென்ன எம்.டி. அப்படிக் கேட்பது ?'' என்ற வீராப்பான எண்ணமே மனத்தில் மேலோங்கியிருந்தது.
ஒரு வேகமான நொடிப்பொழுதில் ஆவேசத்தில் உத்தியோகத்தை உதறி விட்டானே தவிர, அடுத்தது என்ன என்பதைப் பற்றி யோசிக்கவேயில்லை. எம்.பி.ஏ. பட்டமும் ஏழாண்டு அனுபவமும் கொஞ்சம் கை கொடுத்தன.
நிர்வாகம் பற்றின சொற்பொழிவு , நிதி ஆலோசகர் பதவி - போன்றவை ஓரளவு காலத்தைக் கடக்க உதவின.
சங்கரனுக்கு மருமகளிடம் துருவிக் கேட்கப் பயமாயிருந்தது. இல்லத்தில் நிலவுகிற வேதனையான சூழலுக்கு யாராவது ஓர் அப்பாவிதான் வடிகாலாக அமைவார்கள். எதற்கு அநாவசிய குழப்பம் ?
ஒரு விடுமுறை தின பிற்பகல். சற்று மகிழ்ச்சியாக இருந்தான் அரவிந்தன்.
""அப்பா நான் இந்த நீலாங்கரை வீட்டை அடமானம் வைக்கறதாயிருக்கிறேன்'' என்றான்.
""வாட்!'' என்று மிகவும் அதிர்ந்து போய் கேட்டார் சங்கரன். அந்த திடுக்கிடலின், விரல் நடுக்கத்தில் தயிர்க் கிண்ணம் சிந்தி பாகீரதியின் புடவையெல்லாம் கறையாகியது.
சிரித்தான் அரவிந்தன்.
""குட் ! தயிர் சிந்தினால் நல்ல சகுணம் என்பார்கள். திருஷ்டி கழியுமாம். ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் பார்ட்னராகப் போகிறேன். அவனை எனக்குத் தெரியும். முதலிலே கொஞ்சம் பணம் போடணும். 30 லட்சம்தான்''
கங்கா பரிமாறிய வண்ணம், ""வீட்டை அடமானம் வைச்சு வீடு கட்ட பிசினஸ் பண்ணப் போகிறீர்களா ?'' என்று இயல்பாகக் கேட்டாள்.
""என்ன கிண்டலா? நீங்கள் பழைய நகையை அழிச்சு புது மோஸ்தரில் பண்ணிப் போட்டுக் கொள்வதில்லை ? அது போலத்தான். ரியல் எஸ்டேட் இப்ப நல்ல நிலையிலிருக்கு'' என்று சொன்னான். அதோடு நிற்காமல் மாடிக்கு போய் சில ஆங்கில, தமிழ் ஏடுகளை, வார பத்திரிகைகளைக் கொண்டு வந்து வீசினான்.
சங்கரன் மேலோட்டமாக அவற்றைக் கவனித்தார். அந்தச் சூழல் லாபகரமாக இருப்பது போல் எல்லாக் கட்டுரைகளும் சொல்கிறது போல் இருந்தது. மேலே கேட்டுக் கேட்டு என்ன பயன் ? வார்த்தை தடிக்கும் சண்டை மூளும். கங்காவின் நிம்மதி கெடும். பிள்ளையின் சுபாவம் அவருக்குத் தெரியாததா ? எதிலுமே வேகம்தான். காட்டாற்று வெள்ளம்தான்.
" அமைதியான நதியினிலே ஓடம்' போன்ற வரிகள் அவனுக்கு தெரியவே தெரியாது.
உதட்டை அடக்கிக் கொண்டார். மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். " ஒரு காலமுந் துன்ப மெய்தார். படு கதி யுற்றிடுவார்' என்ற முருகனை மனதார எண்ணி பிரார்த்தித்துக் கொண்டார்.
அப்புறம் வேக வேகமான நிகழ்வுகள். அரவிந்தனின் மாடி ஆபீஸ் அறையாகியது. தனி வழியை அமைத்துக் கொண்டான்.
"அர்ஜூன் பில்டர்ஸ்' என்ற பலகை தொங்கியது. ( மற்ற பங்குதாரரின் பெயர் ஜனார்த்தனன்).
மறைமலை நகரில் இருபது தனிக்குடியிருப்புகள் கட்டத் திட்டம். இரவு, பகல் பாராமல் அங்குமிங்கும் அலைச்சல். நாளேடுகளில் விளம்பரங்கள். அவ்வப்போது இணையதளத்திலும் கூட.
ஒரு தரம் மரியாதைக்காக ஜனார்த்தனன் வீட்டுக்கு வந்தார்.
"" என் பையனுக்கு இந்த தொழிலில் அனுபவம் கம்மி'' என்று உபசாரமாகச் சொன்னார் சங்கரன்.
"" வாட் இஸ் இட் ! குளத்தில் இறங்கித்தான் நீச்சல் கற்றுக் கொள்ளணும். அரவிந்துக்கு படிப்பு இருக்கு. புரிந்து கொள்ளும் சக்தி இருக்கு. பாருங்க ஆறே மாசத்தில் எங்கள் கம்பெனியின் செலவைக் குறைக்க யோசனை சொன்னானே ?''
"" அங்கெல்லாம் வீடு வாங்குவார்களோ '' என்று கேட்டாள் பாகீரதி.
"" திருவள்ளூர் வரை இப்போது மனை விற்கிறது. மறைமலை நகருக்கு ட்ரெயின் ஒரு ப்ளஸ் பாயின்ட்.'' என்று பலவற்றை விளக்கி சொன்னார் ஜனார்த்தனன்.
உள்ளபடியாக மிக விஸ்தாரமான இடம் ஆயிரம் ச.அடி உள்ள குடியிருப்பு.
ஊஞ்சல் போன்ற பிற வசதிகள் - நல்ல விலைக்குப் போயிற்று.
ஞாயிற்றுக்கிழமை இரவு தாயாரிடம் பிரமாதமாகப் பெருமையடித்துக் கொண்டிருந்தான்.
""நேரத்துக்குப் போய் கையெழுத்து போட்டால் இவ்வளவு லாபம் கிடைச்சிருக்குமா ?''
சங்கரனுக்குத் திடீரென்று ஏதோஉறைத்தது.
"" அரவிந்த் டாக்ஸ் சரியா கட்டறியா !''
"" போச்சுடா! அப்பா தான் வேலை செய்த டிபார்ட்மென்ட் புத்தியைக் காட்டறார்'' என்றான் அரவிந்த் புன்னகையுடன்.
அடுத்ததாக எடுத்துக் கொண்ட, கேந்திரமான இடத்திலுள்ள அபிராமபுரம் புராஜக்ட் நினைத்த மாதிரி போகவில்லை. அவர்கள் கோரின தொகைக்கும் வாங்குபவர்களின் விலைக்கும் ஏக வித்தியாசம். இருந்தாலும் ஜனார்த்தனனைக் கேட்டு குறைக்கலாமென்று நினைத்தான்.
"" நான் நார்த் இண்டியா டூர் போறேன். என் ஒய்ப்பும் பார்ட்னர். அவளிடம் கேள்'' என்று மழுப்பலாக பதில் வந்தது.
அரவிந்தன் திகைத்தான். மனைக்கான
"விரிவாக்க ஒப்பந்தம் போட்டு' நட்ட ஈடாக ஒரு தவணை இருபது லட்சம் கொடுத்தாயிற்று. மறைமலை நகர் லாபத்தில் பெரும் பகுதி, பங்குச் சந்தையில் முடக்கியாயிற்று.
பங்குச் சந்தையிலோ வீழ்ச்சி! அரவிந்தன் ஆபீஸ் அறையில், தளத்தை வாங்கினவர்கள் படையெடுத்தார்கள்.
"" ஒரு வருஷம் ஆகிறது. என்ன சார் கட்டடம் இடிச்சதோடு சரி. வாட் இஸ் திஸ்'' என்று ஒருவர் சீறினார்.
மனையை அளித்தவர் பாக்கி உள்ள நஷ்ட ஈட்டுக்கு வற்புறுத்தினார். ஜனார்த்தனன் மனைவியைப் பார்க்க நேரில் போன போது அவள் அமைதியாகக் குளிர்பானம் அருந்தியபடி ""நான் ஒரு டார்மென்ட் பார்ட்னர். அவரைப் போனில் கேளுங்கள்! '' என்றாள் அமைதியாக.
ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது தெளிவாகப் புரிந்தது. பலமுறை முயற்சிக்குப் பிறகு லைனில் வந்த ஜனார்த்தனன், ""பிசினஸ் என்றால் முன்ன பின்னதானிருக்கும்! எம்.பி.ஏ. படிச்ச உன்னால் சமாளிக்க முடியாதா ?'' என்று பதில் வந்தது.
சமாளிக்கவே முடியவில்லை. பிசினஸ் " முன்ன பின்ன' இல்லை. எல்லாமே பின்னோக்கி தானிருந்தது. பாதையில் செல்லும் போது தொடர்ந்து சிவப்பு அறிகுறிகள் தெரிகிற மாதிரி மேலும் பல நிகழ்வுகள்.
உயர் மதிப்பு நோட்டு வாபஸ், மணல் பற்றாக்குறை, வீடு மனை விற்பனையில் வீழ்ச்சி !
அரவிந்தனின் தினசரி வாழ்க்கையே மாறிப் போனது. வழக்கறிஞர்கள், கோர்ட், வங்கி மேலாளர் இவர்களைப் பார்த்துப் பேசவே நேரம் கிடைக்கவில்லை.
திடீரென்று ஒரு நாள் கங்காவிடம் "" கங்கா? அந்த ஆறு பவுன் செயின் எங்கே ? லாக்கர்லேதானே ? அழகு பார்க்காமல் புருஷனுக்கு கொடு. கடன் வாங்க'' என்று முடிக்கும் முன்னரே பாகீரதி மயங்கி விழுந்தாள்.
அவளை டாக்டரிடம் அழைத்துப் போய் சிகிச்சை அளித்து வந்ததுமே, சங்கரன் முடிவெடுத்து விட்டார்.
பூர்வீக சொத்தான திருநெல்வேலி வீட்டை விற்பதென்று.
ஒரு வழியாக மகராஜ நகர் இல்லத்தை விற்றாகி விட்டது. விற்கும் முன் எல்லா அறைகளையுமே கை பேசியில் பதித்துக் கொண்டார்.
"" உங்க தாத்தா கட்டின வீடு'' என்று எப்போதாவது பேத்தி மாலினியிடம் காண்பிக்கலாமே ?
உம்... பார்த்துப் பார்த்து மாலினியின் தாத்தா கட்டின வீடு. குருவி போல சேகரித்து வைத்த பணத்தில் சிறியதாகத்தான் கட்டினார். அப்புறம்தான் தன் திருமணத்துக்காக பெரிது பண்ணார்.
குக்கிராமத்திலிருந்து வந்த பாகீரதி, திருநெல்வேலியில் ஜனசந்தடி இல்லாத அந்த நாளில் இந்தப் பெரிய வீட்டைப் பார்த்து எத்தனை சந்தோஷப்பட்டாள்.
இப்போது வருத்தமா? இல்லை? அப்படியானால் சந்தோஷம்தானா? அதுவுமில்லை. வேறு வழியில்லாமல் எடுத்த முடிவு என்பதை அவள் உணர்ந்தே இருந்தாள். பெற்ற மகன் சிக்கலில் தடுமாறித் தவிக்கிறபோது உற்ற தோழன் போல் - தந்தை ஆற்றும் உதவிதானே ?
ஓரிரண்டு பழைய உறவினர்களைப் பார்க்க நேர்ந்தது.
"" உமக்கு என்ன பிராப்ளம் ? பிள்ளை பிசினஸில் ஜமாய்க்கிறானே !'' என்று உவப்பாகச் சிலர் சொன்ன போது கூட மனம் குறுகுறுத்தது.
இவர்களுக்கு தெரிந்திருக்குமோ ? ஆழம் பார்க்கிறார்களோ ? தன் வாயால் ஏதாவது சொல்வாரோ என்று எதிர்பார்க்கிறார்களோ ?
அலைபாயும் மனத்தைக் கட்டுப்படுத்தி பிற்பகல் ஆர்யாவில் உணவு அருந்தினார். வாகனத்தில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானப் பயணம். திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபசாமி கோயிலுக்குச் சென்று வந்தார்.
நிம்மதியாக இருந்தது.
சென்னை திரும்பிய மறுநாளே கணக்கில் தொகை செலுத்தப்பட்டு விட்டதாகத் தகவல் கிடைத்தது. முதல் காரியமாக வங்கிக்குச் சென்று நீலாங்கரை வீட்டை ஏலம் விட வேண்டாம் என வேண்டிக் கொண்டார். பாக்கியிருந்த வட்டியில் ஓரளவு செலுத்தினார். மனையை விற்ற பெரியவரிடம் கணிசமான தொகையைக் கொடுத்து விட்டு, நடவடிக்கை எடுக்காதிருக்குமாறு இறைஞ்சினார். தளத்தைக் கட்டிக் கொடுக்க தனக்குத் தெரிந்த ஓர் இஞ்சினியரைப் போய் பார்த்து வர முடிவு செய்தார்.
ஆனாலும் சங்கரனுக்கு உள்ளூர வருத்தம். தள்ளாத வயதில் இவ்வளவு பாடுபட்டதற்கு நன்றி கூற வேண்டாம். ஜம்பமாகப் பேசுவானேன் ?
"" நான் வேறு வங்கியில் கடன் கேட்டிருக்கிறேன். அப்பா அவசரப்பட்டுவிட்டார் ! ''பாகீரதி, "" இனிமேல் வக்கீல் நோட்டீஸ் தொந்தரவு இருக்காதே ? பணம் போனால் போகிறது'' என்று சொன்னாள்.
""ஏன்டா சொல்லேன் !'' என்று மறுபடியும் பிள்ளையிடம் சற்று அதட்டலாகக் கேட்டாள்.
"" ம்... ம்...'' மென்று விழுங்கினான் அரவிந்தன்.
தலையைக் குனிந்து கொண்டான். கங்காவை நோக்கினான்.
ஏதோ புரிந்து கொண்டு, "" இருக்காதம்மா ... ஆனா வேறு ஒருத்தர் படுத்துகிறார். அது ஒண்ணும் பிராப்ளமில்லை'' என்றான் மையமாக.
" பிராப்ளம்' இல்லையா ! இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் பாகீரதி யாரோ சினேகிதி வீட்டில் விசேஷமென்று கிளம்பினாள். கங்கா அரவிந்தனிடம் ஏதோ பேசிய வண்ணமிருந்தாள்.
காலை மணி சரியாக 9.45. பைக்கில், ஆபீஸ் போய் வருகிறேன் என்று கிளம்பினான் அவன். அன்று மட்டுமல்ல. வாரத்தில் ஆறு நாளும். கச்சிதமாக அதே நேரத்தில்.
தற்செயலாக ஒரு நாள் இதைக் கவனித்த மாலினி, "" அப்பா ஆபீசுக்கு கரெக்டாகத்தானே போகிறார்! ஆனால், ஏன் தாத்தா கோபமா இருக்கார்'' என்று கேட்டு, "" கொஞ்சம் சிரியுங்கோ'' என்று செல்லமாகச் சொல்லி விட்டு டியூசனுக்கு சென்றாள்.
சங்கரன் மாலினி சென்ற திசையையே நோக்கினார். அறியாக் குழந்தையின் ஒவ்வோர் அன்பான வார்த்தையும் அவர் இதயத்தில் அம்புக் கணைகளாகக் குத்தியது.
"" உன் அப்பா போவது ஆபீஸ் இல்லை. காவல் நிலையத்துக்கு. வேலைக்கு அல்ல. வெறுமனே கையெழுத்துப் போட'' என்று சொல்ல முடியுமா ?
ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்தில் வயதான வாடிக்கையாளரை அடிக்க முயற்சித்ததற்காக வேறு ஒரு கிரிமினல் வழக்கு இருக்கிறது என்று விளக்க முடியுமா ? சொன்னால் அந்தப் பிஞ்சு மனசு தாங்குமா?
"இது என்ன சோதனை !' என்று ஆறு கண்
களும் பன்னிரு தோள்களும் கொண்ட மயூர வாகனரிடம் கை கூப்பிப் பிரலாபித்தார்.
""ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா'' என்று எங்கிருந்தோ கந்த குரு கவசப் பாடல் அப்போது ஒலித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

மகளுக்கு பாலியல் தொந்தரவு: தந்தைக்கு ஆயுள் சிறை

சாலை மறியலில் ஈடுபட்ட 35 போ் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT