தினமணி கதிர்

ஃபரணட

தாரை செ. ஆசைத்தம்பி

அதிகாலை விடிந்தும் விடியாத அந்த லேசான வெளிச்சத்தில், வாசலைக் கூட்டி சுத்தம் செய்து நீரைத் தெளித்து தாமரைக் கோலம் போட்டுவிட்டு , வாசற்படி மீது ஏறி நின்று கோலம் அழகாக இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்த சுவர்ணாவின் முகம் தாமரை போலானது !

உள்ளே வந்தவள், ""நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில காபி குடித்ததும் வீட்டை ஒட்டடை அடித்துவிடுங்கள்'' என்று சொன்னதை மறந்து இழுத்துப் போர்த்து தூங்கிக் கொண்டிருந்த ஆனந்தனைப் பார்த்து "களுக்' கென சிரித்துக் கொண்டாள்.

ஞாயிறு என்றாலே கொஞ்சம் சோம்பல் சூழ்ந்துவிடும் என்பது இயற்கைதானே ? அதுவும் ஆனந்தன்அந்த சோம்பலில் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வமாக இருப்பான்! காபி பெட்டுக்கே வந்து விட வேண்டும்.
டிபனுக்கு பின்தான்குளியல்! அப்புறம் கொஞ்சம் தூக்கம். அவன்அகராதியில் கொஞ்சம் தூக்கம் என்பது காலை 10.30 இலிருந்து மதியம் 1.30 வரை. அதற்குப் பிறகு மதியம் சாப்பிட்டுக் கொண்டே டிவியை தஞ்சமடைந்து விட்டால், மாலை 6 மணி வரை ரிமோட் பட்டன் தேயும் வரை எல்லாச் சேனல்களும் நாட்டியமாடிக் கொண்டேயிருக்கும்! அதன் பின்பு புறப்பட்டு
விட்டானென்றால் ராத்திரி படுக்கும் வரை நண்பர்களோடு அரட்டை கச்சேரிதான். எது மாறினாலும் ஞாயிறு டைம்டேபிளை மட்டும் இதுவரை அவன் மாற்றியதில்லை!
காபியுடன் சுவர்ணா படுக்கையருகே வந்தவள், ""என்னங்க'' என்றாள். அவனிடம் எந்த அசைவும் இவ்லை. அடுத்து, ""என்ன'' என்று அவன் தோளைத் தொட்டு கூப்பிட்டாள். அப்பவும் அசைவில்லை. கடைசியாக போர்வையை வெடுக்கென இழுத்தபடி ""ஏ'' என்றாள்.
மிரட்சியோடு எழுந்து உட்கார்ந்தவன், சுவர்ணாவைப் பார்த்து புன்னகைத்து கொட்டாவி விட்டபடி, ""குட்மார்னிங் டியர்'' என்றான். அவன் முன்னே காபியை நீட்டினாள்.
""என்ன சுவர்ணா காபியா ?''என்றவன் மறுபடியும் ஒரு கொட்டாவியை விட்டான்.
""ஆமாங்க காபியேதான்! ஒட்டடை அடிக்கிறதுக்கு முன்னாடி இதக்குடிச்சிடுங்க.''என்றாள்.
""ஒட்டடை ??'' முகத்தில் கேள்விக்குறியையும்,ஆச்சரியக் குறியையும் மிக்ஸ் செய்தபடி வாங்கிக் கொண்டான்.
""ஆமா ஒட்டடையேதான். இன்னைக்கு உங்கள ஒட்டடை அடிக்கச் சொன்னது ஞாபகம் இல்லாத மாதிரி இழுத்து போர்த்தி தூங்கினா நான் விட்டுடுவேனா! குடிச்சிட்டு சீக்கிரம் வாங்க'' என்றவளைப்பரிதாபமாகப் பார்த்தான்.
""என்ன சுவர்ணா , இன்னைக்கு ஞாயித்துக்கிழமைதானே?எட்டுமணி வரைக்கும்தூங்க விட்டிருக்கலாம்ல ?
சாயங்காலம் வரைக்கும் எவ்வளவு நேரமிருக்கு ?''
காபியை குடித்துவிட்டு மறுபடியும் அவன் படுக்க எத்தனித்த போது, ""படுங்க ... நல்லா நிமிர்ந்து படுங்க , ஒரே ஒரு குடம் குளிர்ந்த நீரை கொண்டு வந்து அய்யாவுக்கு அபிஷேகம் பண்ணிடறேன்'' என்றவுடன் சட்டென படுக்கையைவிட்டு எழுந்தான்.
""வேண்டாம்மா உனக்கு - அந்த கஷ்டமே வேண்டாம். எனக்கு சுறுசுறுப்பு வந்திடுச்சி! ஒட்டடைக்குச்சி எங்கே? துண்டு எங்கே ? ஒட்டடை எங்கே ?'' என்றபடி பாத்ரூம் நோக்கி ஓடினான்.
சற்று நேரத்தில் துண்டு தலைப்பாகையாக மாறியிருக்க கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு ""பொன்மகள் வந்தாள்... ஒட்டடை அடிக்க சொன்னாள்'' என்று பாடியபடி வேலையைத் தொடங்க, சுவர்ணா சிரித்தபடி சமையலறைக்குள் போனாள்.
""நீங்கள்அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்... '' செல்போன் ரிங்கியது.
ஒட்டடை அடிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு செல்லை உயிர்ப்பித்து காதில் வைத்து ""ஹலோ'' என்றான்.
""ஹலோ பிரபா... ஏய் பிரபா...என்னடி போனே பண்ண மாட்டேங்கிறே?'' ஓர் இளம்பெண்ணின் கொஞ்சல் குரல் கேட்டது.
""பிரபா ! எந்த பிரபா ? '' என்றான் ஆனந்தன்.
""சார் இது என் ஃபிரண்ட் பிரபா போன் நம்பர்? நீங்க யாரு? இந்த போன் எப்படி உங்க கையில ?'' எதிர்முனை பெண்ணின்சுருதி குறைந்தது.
""என்னம்மா இது ... என் செல்லுக்கு நீ கால் பண்ணிட்டு , பிரபாவா நீங்க யாருன்னு கேள்வி எழுப்பினா, உடனே என்பேர்ஆனந்தன்னு சொல்லிடுவேனா?'' என்று புத்திசாலித்தனமாகக் கேட்டான்.
""ஓ... ஸாரி ஆனந்தன் சார்... என் ஃபிரண்ட் பிரபா நம்பருக்குப் போட்டேன்! அதுஎப்படி உங்களுக்கு மாறி வந்திச்சுன்னு புரியல ? சார் இது 9942313443 தானே?''
""இல்லியேம்மா , இது 9942323442ம்மா!''
""ப்ளீஸ்... ப்ளீஸ்... சாரி... சாரி... சார்...''
""அதென்ன சார் மட்டும் ஒருதரம்? அதையும் ரெண்டு தடவை சொல்லிடும்மா !''
""தெரியாம 3க்குப்பதிலா 2-ஐ தட்டிட்டேன்போலருக்கு சார்? அதான் இடம் மாறி உங்கபோனுக்கு வந்திடுச்சி ! மறுபடியும் ஸாரி கேட்டுக்கிறேன்சார்.'' குரலில் பணிவு தெரிந்தது .
""ஸாரியை நிறைய ஸ்டாக் வச்சிருப்பே போலருக்கு !
விடும்மா... இனியாவது பதட்டப்படாம பொறுமையா பட்டனைப் பாத்து நம்பரை சரியா தட்டி, எதிர்முனையில பேசறது யார்ன்னு தெரிஞ்சிக்கிட்டு... அது சாரா மேடமான்னு புரிஞ்சிக்கிட்டு ... பேசும்மா ! சரியா''
""கண்டிப்பா சார். உண்மையிலே நான்ஒரு லக்கி பொண்ணு சார்.''
கையிலே வைத்திருந்த ஒட்டடைக்கொம்பைசுவரில் சாய்த்து வைத்துவிட்டு புரியாமல் ""என்னம்மா சொல்றே?'' என்றான்.
""ஆமாங்க சார், ஏதாவது தப்பான நம்பருக்கு கால் பண்ணிட்டா , எதிர்முனையில இருக்கிறவங்க கோபமா பேசிடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்? ஆனா நீங்க நாகரீகமா நாசூக்கா... கண்டிக்கிற மாதிரி கண்டிச்சி , அறிவுரை சொல்ற மாதிரியும் சொல்லி நீங்க ஒரு ஜென்டில்மேன்னு நிரூபிச்சிட்டீங்க! அதனால உங்ககிட்ட நான் ஒரு விண்ணப்பம் போடலாம்னு நினைக்கிறேன்.'' இடது காதில் வைத்திருந்த போனை வலது காதுக்கு மாற்றினான்.
""விண்ணப்பமா ! என்ன விண்ணப்பம்?''
""ஏன் நீங்களும் நானும் ஃப்ரண்ட்டா இருக்க கூடாது?''
""அடப்போம்மா... நீ வேற? எனக்கு 52 வயசாகுது! ஒரு பெண்டாட்டி வேற கட்டியிருக்கேன்! ரெண்டு பொம்பள புள்ளைங்க காலேஜ் போயிட்டிருக்காங்க! இந்த வயசுல லேடி ஃப்ரண்ட்... டூ மச்சா தெரியல ?'' சிரித்துக் கொண்டான்.
எதிர்முனைப் பெண்விடுவதாக தெரியவில்லை.
""சார் பிரண்ட்ஷிப்புக்கு வயசு தேவையில்லை. நல்ல மனசு இருந்தா போதும்! உங்ககிட்ட பேசின இந்த ரெண்டு நிமிஷத்தல , என் மனசுக்குள்ளே ஒரு சின்ன நிம்மதி ! ரிலாக்ஸா இருக்கு. மை நேம்இஸ் காயத்ரி. எனக்கு 23 வயசுதான்ஆகுது. அதுக்காக ஃப்ரண்ட்டா இருக்க முடியாதுன்னு ஏன் நினைக்கிறீங்க?''
""இல்லேம்மா... நான்என்ன சொல்ல வரேன்னா..''வார்த்தையை இழுத்தான்.
""சார் உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ?''
""வாட்... என்ன சொன்னே ? ஏகப்பட்ட பத்தினிவிரதர்கள் இருக்கிற இந்த நாட்டிலே... என்மனைவி சுவர்ணாவுக்காகவே வாழற ஏகபத்தினி விரதன் நான்! எனக்கு எல்லாமே என் மனைவி சுவர்ணாதான்!''
""அக்கா பக்கத்துல இருக்காங்களா ?''
""இல்லே ...ஆனா வந்துக்கிட்டிருக்கா ? ''
அவன் பக்கத்தில் வந்து நின்ற சுவர்ணா ""யாரு போன்ல?'' என்பதுபோல பெருவிரலை தூக்கிக்காட்டி கேட்டாள்.
""ஃப்ரண்ட்''என்றான் செல்லின் வாயை மூடியபடி.
""ஃப்ரண்ட்டா?'' சுவர்ணா முகத்தில் கேள்விக்குறியோடு பார்த்தாள்.
""ஆமா சாதாரண ஃபிரண்டில்லே... கேர்ள்ஃபிரண்ட்!''
""என்ன ?''சுவர்ணாவின் பார்வையில் திடுக்கிடல் தெரிந்தது.
""நீயே பேசிப் பாரேன்'' போனை அவளிடம் கொடுத்தான். வாங்கி காதுக்கு கொடுத்தாள்.
""ஹலோ''
""ஹலோ ... அக்கா நான் காயத்ரி . தெரியாமல் ராங்கால் பண்ணிட்ட காயத்ரி''
""உனக்கு என்னம்மா வேணும்? ''
""உங்க புருஷன்''
""என்ன?'' சுவர்ணா அதிர...
""அய்யோ அக்கா முழுசா கேட்காம அதிர்ச்சியடையாதீங்க ? என் ஃபிரண்டுக்கு போட்ட கால் உங்க வீட்டு போனுக்கு தப்பா வந்திடுச்சி? உங்க
கணவர் எனக்கு சொன்ன அறிவுரை அவர் மேல ஒருமதிப்பை உண்டாக்கிடுச்சி ! அதனாலதான் அவரை எனக்கு ஃபிரண்டா இருக்க சொல்லி ஒரு அப்ளி
கேஷன் போட்டேன். அவர் என்னடான்னா என்அன்பு மனைவியைக் கேட்காம எந்த ஒரு காரியத்தையும் நான் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாரு! ப்ளீஸ் ...ப்ளீஸ்க்கா... அவரை எனக்கு ஃபிரண்டா இருக்கச் சொல்லுங்கக்கா? தப்பா ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன். குறிப்பா உங்களுக்குபோட்டியா
வந்திட மாட்டேன்! ப்ளீஸ்க்கா... உங்க கணவரை நீங்க நம்ப மாட்டீங்களா ? என்னை உங்க மகளா நினைக்க மாட்டீங்களா ?''
குழந்தைத்தனமாக அந்த பெண்பேசியது சுவர்ணாவை நெகிழ வைத்தது.
""இங்க பாரு காயத்ரி, என் கணவரை பத்தி எனக்கு நல்லாதெரியும். அவரை நான்எப்போதும் சந்தேகப்பட்டதுமில்லே , சந்தேகப்படற மாதிரி அவர் நடந்துக்கிட்டதுமில்லே ! நீ தாராளமா அவரை ஃபிரண்ட்டாக்கிக்கோ. போன் பண்ணி பேசிக்கோ. இந்த
அக்காகிட்டேயும் அப்பப்போ பேசிக்கோ''என்றாள்உள்ளன்போடு.
""ரொம்ப தேங்க்ஸ் அக்கா! போனை ஃபிரண்டுக்கிட்ட கொடுங்க.''
ஆனந்தனிடம்கொடுத்தாள்.
""பிரண்ட் அக்கா கிட்டே அனுமதி வாங்கிட்டேன்! இனிமே தினமும் உங்ககிட்டே போன் பண்ணி பேசுவேன். நான் காயத்ரி , நீங்க ஃபிரண்ட்! நீங்க எங்கே இருக்கீங்க , நான் எங்கே இருக்கிறேன், நீங்க என்ன பண்றீங்க , நான் என்ன பண்றேன்... இந்த ஆராய்ச்சியெல்லாம் பண்ணாம ஒன்லி ஃபிரண்ட் டாயிருப்போம்! ஓகே ஃபிரண்ட்... மீண்டும் நாளை போன் தாக்குதலுக்கு தயாராகும் வரை, உங்களிடமிருந்து விடைபெறுவது காயத்ரி'' அவள் குரலில் மகிழ்வு தெரிந்தபோது போன்கட்டானது.
போனை அணைத்துவிட்டு சுவர்ணாவைப் பார்த்தான்.
""என்னங்க அந்த பொண்ணு பேசறத பாத்தா தப்பாவும் தெரியல! பொண்ணுங்கிறதால பயமாவும் இருக்கு?''
""யார் மேல? என் மேலேயா? "" கேட்டுவிட்டு குறும்பாக அவளைப் பார்த்தான்.
""சே..சே... என் புருஷன் உத்தம புருஷன், என் புருஷன் எனக்குமட்டும்தான், புருஷன் எனக்கு அரசன்''
""சுவர்ணா நீ இந்த ஒட்டடையை விட ரொம்பப் படுத்தற''அவன் கையிலெடுத்த ஒட்டடைக்கொம்பை பயன்படுத்த தொடங்க , சிரித்துக் கொண்டே மீண்டும் சமையலறைக்குள் சென்றாள்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு காயத்ரி அடிக்கடி போனில் பேச ஆரம்பித்தாள். கள்ளம் கபடம் இல்லாத அவள் பேச்சு ஆனந்தனை மட்டுமல்ல, சுவர்ணாவையும் கவர்ந்து விட்டது. சினிமா முதல் பொதுத் தேர்தல் வரை தான் தெரிந்து கொண்டவற்றை இவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது , அவள் அளிக்கும் விளக்கத்தைக் கேட்டு ஆச்சரியபட்டுப் போயினர். அவள் சொல்லும் புதுப்புது விளக்கங்களை கேட்பதற்காக ஆனந்தனிடமிருந்து போனைப் பிடுங்கி சுவர்ணாவும் பேசத் தவறுவதில்லை.
மூன்று மாதங்கள் முழுமையாக ஓடிவிட்ட நிலையில் காயத்ரியிடமிருந்து போன் கால் வருவது நின்று விட்டது. ஒரு வாரம் பொறுத்துப் பார்த்து ஆனந்தனே போன்செய்த போது "ஸ்விட்ச்ஆப்' என்றது.
""இந்த பொண்ணுக்கு என்னாச்சி சுவர்ணா! திடீர்ன்னு பேசறத நிறுத்திட்டா ?''
""மூணு மாசமா அவகிட்டே பேசிப் பேசி இப்போ அவ பேசாதது கஷ்டமா இருக்குங்க ? ஏன்தான் இந்தப்பொண்ணு இப்படி பண்ணுதோ ?''
வருத்தமான சுவர்ணாவின் முகம் ஆனந்தனை என்னமோ செய்தது.
அன்று மாலையே அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல காயத்ரியின்அழைப்பு வந்தது. அவசரமாக ஆனந்தன் எடுத்தான்.
""ஏய் கழுதை... ஒரு வாரமா செல்லை ஆப்ல வச்சிட்டு எங்கே போயிருந்தே, ?'' உரிமையுடன் கோபித்தான்.
""ஸாரி ஃபிரண்ட் முதல்ல நீங்களும் அக்காவும் என்னை மன்னிக்கணும். நான் எக்ஸாமுக்கு படிக்க தடையாயிருக்க கூடாதுன்னு அப்பாதான் என் செல்லை ஆப் பண்ணி பீரோவுல வச்சிப்பூட்டிட்டாரு.'' என்றாள்.
""என்ன எக்ஸாமா ?''
""எஸ்... நான்பி.லிட்பண்றேன்!''
""பி.லிட்பண்றியா, சொல்லவேயில்ல ?''
""தமிழ்மேதை - ஆன பின்னாடி , தூய தமிழ்ல பேசி அறுக்கும்போது தெரிஞ்சிடப் போவுதுன்னு சஸ்பென்ஸா வச்சிருந்தேன். நான் ஒரு வாரமா பேசாததால ரொம்ப கலங்கிட்டீங்களோ ?''
""கலக்கமா எனக்கா நோ... நோ... இந்த
ஆனந்தன் எதுக்கும் எப்பவும் கலங்க மாட்டான். தெரியுமா ?''
சுவர்ணா போனை பிடுங்கினாள்.
""இங்க பாருடி இப்படி எங்களை காயவிடுறதுக்குதான் ரொம்ப நாளா திட்டம் போட்டியா? எதுக்கு ராங்கால் பண்ணி எங்க வீட்ல ஒருத்தியா நீ நுழையணும், நீ பேசாததால நாங்க ஏன் வருத்தப்படணும்?''
""இப்பதான் ஃபிரண்ட் கலங்கலேன்னு சொன்னாரு ?''
""நான் மட்டும் கலங்கினதா சொன்னேனா, வருத்தப்பட்டோம்னுதான்சொன்னேன்''
""வந்துக்கா... வந்து ...''
""பி.லிட் பண்றே அதனால பேச தடை. உன்னோட ஃபிரண்ட் போன்ல மைக்கை ஆன் பண்ணியிருந்தாரு! நீ பேசினதை நானும்கேட்டேன்.''
""ஆமாக்கா அதான்காரணம்'' தொடர்ந்த பேச்சுகள் ஒரு வாரத்து உள்ளக்கிடங்கையெல்லாம் கொட்டிக் கொண்டி ருந்தன.
குழந்தைத்தனமான அவள் குதூகலப் பேச்சு தொடர்ந்தது அடுத்து வந்த ஐந்து
மாதங்கள்தான்.
மீண்டும் போன்கட்.
""ஏங்க மறுபடியும் ஏதாவது எக்ஸாமா இருக்குமா ?''
""இருக்காது சுவர்ணா? அப்படி இருந்திருந்தா கண்டிப்பா சொல்லியிருப்பா. என்ன பொண்ணு இவ ? கருப்பா... சிவப்பா ... எந்த ஊருன்னு கூட கேட்டதில்லே ? நம்ம பொண்ணுங்க மாதிரி அவமேல பாசம் வச்சிட்து தப்போ''ஆனந்தன்ஆதங்கத்தோடு பேசினான்.
""என்னங்க இப்படிப் பேசறீங்க? போன தடவை மாதிரி திடீன்னு பேசப் போறா
பாருங்க !''?
பதினைந்தாம் நாள் வந்தது அந்த போன் கால்! காயத்ரியின் நம்பரை பார்த்ததும் சுவர்ணா முகம் மலர்ந்தாள்.
""என்னங்க, என்னங்க காயத்ரி போன்பண்றா!''
உள்ளறையிலிருந்த ஆனந்தன் ஓடி வந்தான். போனை உயிர்ப்பித்து மைக்கை ஆன் செய்து காதில்வைத்து , அவளைத் திட்ட வாயேடுத்த போது எதிர்முனையில் ஆண் குரல் கேட்டது.
""சார் உங்க பேர் ஆனந்தனா ?''
""ஆ... ஆமா நீங்க?''
""நான் காயத்ரியோட அப்பா பேசறேன்.''
ஆனந்தன் முகம் கேள்விக்குறியானது.
""காயத்ரியோட அப்பாவா ?''
""ஆமாங்க எட்டு மாசமா உங்ககிட்ட பேசிக்கிட்டிருந்த காயத்ரியோட அப்பாதான் பேசறேன்''
குரலில் ஒரு தழுதழுப்பு தெரிந்தது.
""சார்... என்னாச்சி ? ஏன் ஒரு மாதிரியா பேசறீங்க ?''
""எம்பொண்ணு.... எம்பொண்ணு... ரொம்ப சீரியஸா இருக்காங்க''
""வாட்? என்ன சொல்றீங்க? காயத்ரிக்கு என்ன ?''
பக்கத்தில் நின்றிருந்த சுவர்ணா பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
""காயத்ரிக்கு ரத்த புற்று நோய் சார்'' காயத்ரியின்அப்பா விம்மலுக்கிடையே சொன்னபோது இருவரும் அதிர்ந்து போயினர்.
""என்ன சார்... என்ன சொல்றீங்க ? காயத்ரிக்கு ரத்த புற்றா ?''
அதிர்ந்து போய் கேட்டான்.
கிட்டத்தட்ட சுவர்ணா முகம் அழுகைக்குப் போயிருந்தது.
""நாளை எண்ணிக்கிட்டிருக்கிற அவ மனசு வருத்தப்படக் கூடாதுன்னுதான், இத்தனை மாசமா உங்ககிட்ட பேசவே அனுமதிச்சோம்? உங்ககிட்ட பேசும்போது அவ முகத்தல ஒரு சந்தோஷம் தெரியும் பாருங்க. அதுக்காகவே
உங்களோட பேசவிட்டோம். அதுதான் என்னைக்கோ போக வேண்டிய என் மகளோட உயிரை இதுவரைக்கும்
தக்க வச்சிருந்தது?'' கேட்ட ஆனந்தன் ஒருகணம் திகைத்துப் போனான்.
""இப்போ காயத்ரி எங்கே சார்?''
""பக்கத்திலதான் இருக்கா , உங்ககிட்ட பேசணும்னு சொன்னா... தரேன். பேசுங்க .''
கொஞ்சநேர அமைதிக்குப் பிறகு...
""ஹலோ... ஃபிரண்ட்...'' காயத்ரியின் குரல் சற்று ஒடிந்திருந்தது.
""என்னம்மா என்ன இது? அப்பா சொன்னது ?''
கொஞ்ச நேரம்மௌனமாக கரைந்தது.
""ஆமாம் பிரண்ட்... உணர்ச்சிவசப்படாதீங்க. அ..அப்பா... சொ..சொன்னது உண்மைதான்... என் முடிவு எ...எனக்கு எப்பவோ தெ...தெரிஞ்சிடுச்சி ஃபிரண்ட்! ஆறு மாசத்துக்கு முன்ன கூட ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகியிருந்தப்போ , உங்ககிட்ட பேசலே ?
பி.லிட் பண்றதா பொய் சொல்லிட்டேன். ஸாரி ஃபிரண்ட். உங்ககிட்டேயும் அக்கா கிட்டேயும் பேச ஆரம்பித்ததற்கு அப்புறம் எனக்கு வாழணும்னு ஆசை வந்திடுச்சி ஃபிரண்ட். ஆனா கடவுள்போட்ட முடிவை மாத்த முடியுமா ?''
போன்அமைதியானது.
""காயத்ரி... அம்மாடி பேசுமா...''
அவளோட அப்பாதான்பேசினார்.
""சார் அவ மயக்கமாயிட்டா. உங்ககிட்ட ஒரு சின்ன வேண்டுகோள். நீங்க இங்கே வர முடியுமா ?''
முகவரியைக் குறித்துக் கொண்டான்.
அலுவலகத்திற்கு லீவு சொல்லிவிட்டு , டிராவல்ûஸத் தொடர்பு கொண்டான். அடுத்த பத்தாவது நிமிடம் வாசலில் வந்து நின்ற காரில் இருவரும் ஏறிக் கொண்டதும் கார் சேலம் நோக்கி விரைந்தது.
திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் சேலம் வந்து, பேர்லண்ட்ஸ் உட்புறம் இருந்த வீட்டை சரியாகக் கண்டுபிடித்து உள்ளே போனபோது... அழகிய மலர் சற்று வாடியதைப் போல படுக்கையில்
அந்தப் பெண். இவர்களைப் பார்த்ததும் சுற்றி நின்றிருந்தவர்கள் நகர்ந்து நின்றனர். அருகே போன ஆனந்தனும் சுவர்ணாவும் உதடுகள் துடிதுடிக்க ஒரே குரலில், ""காயத்ரி''என்றனர்.
மூடியிருந்த கண்ணை சிரமத்துடன் திறந்தவள்,
புதிதாக நின்றிருந்த இவர்களைப் பார்த்ததும்...
""ஃபிரண்ட்... சுவர்ணாக்கா... ?'' என்றாள் ஆவல் ததும்பிய முகத்துடன்.
""ஆமா'' என்பது போல தலையசைத்துவிட்டு அவளருகே சென்றனர்.
ஆனந்தன் கையை ஒரு கையாலும், சுவர்ணாவின் கையை ஒரு கையாலும் பிடித்துக் கொண்டாள்.
""ஸாரி ஃபிரண்ட்... உண்மையை உங்ககிட்ட மறைச்சிட்டேன். இப்போ கடைசி நேரத்தில சொல்ல வச்சிட்டேன்.''அந்த நேரத்திலும் புன்னகையை முகத்தில் காட்டினாள்.
""இல்லம்மா அப்படிச் சொல்லாதே . உனக்கு ஒண்ணும் ஆகாது''
""இல்ல ஃபிரண்ட்... எனக்கு தெரிஞ்சு போச்சி. பிரண்ட்இந்த எட்டுமாசத்தல முகம் தெரியாத என்கிட்டே - எவ்வளவு கண்ணியமா பேசனீங்க ... எங்க அப்பா மாதிரி ''
""காயத்ரி'' ஆனந்தன் குரல் தழுதழுக்க... சுவர்ணா கண்ணீருக்குப் போனாள்.
""ஃபிரண்ட் நீங்களும் சுவர்ணா அக்காவும் எனக்கு இன்னொரு அப்பா அம்மா மாதிரிதானே?''அவள் முகத்தில் பாச உணர்வு தெரிந்தது.
""ஆமாம்மா'' என்றான்.
""அப்போ உங்க மடிமேல நான் கொஞ்சநேரம் தலைவச்சி படுத்துக்கிறேனே..'' ஒரு குழந்தையைப் போல கேட்டாள்.
""கண்டிப்பாம்மா ...கண்டிப்பா...'' படுக்கை மீது ஏறி அமர்ந்து காயத்ரியின் தலையைத் தூக்கி தன் மடி மீது வைத்துக் கொண்டான்.
""இப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஃபிரண்ட்''
சோகம் மேலிட காயத்ரியின் ஒரு கையை பற்றிக் கொண்டு, இன்னொரு கையால் அவள் தலையைத் தடவிக் கொடுத்தான்.
""இந்த முகம் எனக்கு
பிடிக்கல ஃபிரண்ட். போன்ல பேசும்போது சிரிச்சி சிரிச்சி நீங்களும் சுவர்ணா அக்காவும் பேசுவீங்களே... அப்படி சிரிச்ச முகமா இருங்க ஃபிரண்ட்...''
இருவரும் முயற்சித்தார்கள். முடியவில்லை.
""உங்கள நான் அப்பா அம்மான்னு கூப்பிடலாமா?''ஆர்வம்அவள்முகத்தில் தெரிந்தது.
""என்னம்மா இப்படி கேட்டுட்டே... தாராளமா கூடப்பிடும்மா. உனக்கில்லாத உரிமையா?
நீதாம்மா எங்க மூத்த மக''
சுவர்ணா கண்ணீருக்கிடையே விம்மலுடன்கூறினாள்.
""அப்பா... அம்மா...'' என்றபடி இருவர் கைகளையும் இறுக பற்றிக் கொண்டாள்.
கட்டிலுக்கருகே அழுதுஅழுது முகம் வீங்கிப் போயிருந்த காயத்ரியின்அம்மா, கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அருகே நின்றிருந்த அவளின்
அப்பா ஆனந்தன், சுவர்ணா என நால்வரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
""எனக்கு ரெண்டு அப்பா, அம்மா'' என்றவள்
ஆனந்தன் கையை இறுக்கமாகப் பிடித்தபடி ""ஃபிரண்ட்...'' என்றாள்.
அதுதான்அவள் பேசிய கடைசி வார்த்தை. சோதித்த டாக்டர் உயிர் போய்விட்டதை உறுதிப்
படுத்த... எதற்குமே கலங்காத ஆனந்தன் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT