தினமணி கதிர்

மாற்றம்!

4th Dec 2022 06:00 AM | வாதூலன்

ADVERTISEMENT

 

""இப்ப எதுக்கு அவசரமா ஜனார்த்தன மாமா வந்துட்டு போறார்?'' என்று அரைத் தூக்கத்தில் கேட்டாள் ராஜி.
""நாலு மாச முன்னால்தான் ஆஸ்பத்திரியிலே தங்கிட்டு வந்தார்?''
சேதுராமன் கொஞ்சம் பெருமையுடன் , ""என்னுடைய பழைய கச்சேரியை யூ டியூபில் கேட்டாராம். தன்யாசி அபாரமாம். இப்ப யாருமே இந்த ராகம் பாடுவதில்லை'' என்று சொல்லி ஆதங்கப்பட்டார்.
""என்ன பாட்டு? ஹிமகிரி தனயே தானே?'' என்றாள் ராஜி. அவள் கணவர் நோகாமல் தலையில் அடித்துக் கொண்டார்.
""விடு. போனில் பேச ட்ரை பண்ணினாராம். அது ஒரே எங்கேஜ்டா இருந்ததாம்'' என்றார் லேசான எரிச்சலுடன்! சடக்கென்று ராஜி படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.
""இப்பத்தான் ஞாபகம் வந்தது. மணியோட மெயிலைப் பார்த்தீர்களா?''
""அவனுடைய நிச்சயதார்த்தம் மாசி மாதம்தானே?'' என்றார். ""பார்த்தேன். படிக்க முடியலை. எனக்கு கண் ஆபரேஷன் ஆகி'' என்று சொல்லி முடிக்கு முன் ùஸல்லின் ரீங்காரம் ஒலித்தது. எடுத்தார், மணிதான் மறுமுனையில். ஆனால் அவரைப் பேசவே விடவில்லை.
அவன் சொல்வதற்கெல்லாம், ""சரி சரி ஊம்! பார்க்கிறேன்'' என்று ஒற்றை சொல்லிலேயே பதில் அளித்தார். மறுமுனையில் பேச்சு நின்றதோ இல்லையோ, கைப்பேசியை கோபமாக படுக்கையில் வீசினார்.
""ஏன்? என்ன சொல்றான்? கோபம் வருது?''
""ஆமாம். தகப்பனுக்கு மகன் உபதேசம் பண்ணுகிறான். அபிநயா வீட்டுக்குப் போகணுமாம். முறையாகக் கூப்பிடணுமாம்'' என்றார் சினத்துடன்.
""சரியாக யார் சொன்னாலும் உங்களுக்கு ஏற்காதே'' என்றாள் ராஜி சுருக்கமாக!
ராஜிக்கு இரு விதங்களில் வருத்தம். பெண் அபிநயாவுக்கு மணமாகி காரக்ரிகை வருடம் ஆகப் போகிறது. "கர்ப்பம் தரிக்கவில்லையே' என்ற வருத்தம் ஒருபுறம். பிள்ளை கல்யாண நிச்சயதார்த்தத்தில் கணவர் செய்யும் பிடிவாதம் இன்னொரு புறம்.
அதற்கு காரணம் அபிநயாவின் காதல் திருமணம். தான் காதலிக்கும் சாய்ராமைத்தான் கல்யாணம் செய்து கொள்வேனென்று உறுதியாக இருந்தாள். சாதி, படிப்பு, உத்தியோகம் எல்லாமே பொருந்தியிருந்தன. ஆளும் பார்க்க களையாத்தான் இருந்தான்.
இத்தனை இருந்தும் பெண்ணிடம் பேசாமல், மனைவியிடம் ""ராஜி சிங்கப்பூர் வரனைப் பார்க்கலாமே? வயசு 23 தானே ஆகிறது? என்ன அவசரம்?''
""அப்பா, சாய்க்கு என்ன குறைச்சல்? நீங்கள் எதாவது சாக்கு சொல்லி நிறுத்தினால், நான் ஒற்றை பெண்மணியாகதான் இருப்பேன்.''
சேதுராமனால் மேற்கொண்டு பேச முடியவில்லை. நாளைக்குத் தன் உறவினர்களும், நண்பர்களும் "யார் சம்பந்தி?' என்று கேட்டால், சமையல்காரர் என்று சொல்ல முடியுமா?
"பந்தியில் சாருக்கு என்ன வேணும்? மிளகு ரசமா?' என்ற பிம்பம் வந்து நின்றது.
""வேறு வழியே இல்லை. கல்யாணம் நிச்சயமாக நடந்தாக வேண்டும்''. ஆனால் சேதுராமன் திடீரென்று ஒரு நிபந்தனை போட்டார்.
""நான் உன் மாமனாரோடு சகஜமாகப் பழக மாட்டேன். வெறும் "ஹலோ'தான்''
""ஏதோ இந்த மட்டிலாவது விவாகத்துக்கு ஒப்புக் கொண்டாரே'' என்று ராஜி மகிழ்ச்சியடைந்தாள். ""நாளைக்கு குழந்தை பிறந்தால் அதையொட்டி பேசாமலிருக்க முடியுமா? "தாத்தா' என்ற பெருமை பிய்த்துக் கொண்டு போகுமே!''
ஆனால் அதற்கு வேளை வரவில்லை. போதாக்குறைக்கு கரோனா தொற்று? சேதுராமனுக்கு மேடைக் கச்சேரிகளும் இல்லை. ஏதோ ஐந்தாறு பேருக்கு டியூஷன், வங்கி வட்டி, சொந்த ஊரில் நில புலன்களிலிருந்து வரும் வருமானம் என்று காலம் கழித்து வந்தார். அதே சமயம் தில்லியில் நல்ல வேலையிலிருக்கும் மணியிடம் ஓர் அவசரத்துக்குக் கூட பணம் கேட்பதில்லை. ராஜி தலைசுற்றலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது, டெபாசிட்டில்தான் கடன் வாங்கினார்.
இத்தகைய சூழலில்தான் ஜனார்த்தனன் அறிமுகமானார். அவருக்கு மாதாந்திர பென்ஷன் வரும். ஒருநாள் வாக்கிங் போனபோது, ""உங்க போட்டோவை எங்கோ பார்த்திருக்கேனே என்று கேட்டதும், "தன்னை சங்கீத பாடகர்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டதும்தான் நட்புக்கு வழி
வகுத்தது.
ஒருநாள் ஜனா அவர்கள் வீட்டுக்கே வந்தார். ""உங்க கணவர் கச்சேரி எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றார். பிறகு, ""என்ன உங்க ஹஸ்பெண்ட் வங்கி டெபாசிட்டுகளிலேயே வளைய வருகிறார்? மியூச்சுவல் பண்ட், ஷேர் எல்லாமிருக்கே?''
""என் பெண் அபிநயாவும் சொல்லியிருக்காள். ஆனால் பயப்படுகிறார்.''
பயமே இல்லையென்று உறுதி செய்தார். பிரபல நிறுவனத்தில் "டிமேட்' கணக்கு வைக்க சொன்னார். சில குறிப்பிட்ட பங்குகளை வாங்கச் சொன்னார். மிக பிரபலமான பரஸ்பர நிதியில் கணிசமான தொகை போடச் சொன்னார். அதோடு நில்லாமல் பத்து நாளுக்கொரு தரம் விசாரிக்கவும்
செய்தார்.
சேதுராமன் ஆரம்பத்தில் பயந்தார். ஆனால் பங்குகள் 2021-இல் திடீரென ஏறின. சமநல நிதியிலிருந்து, கணிசமான தொகை வந்து
கொண்டிருந்தது.
ராஜியே ஜனார்த்தனுக்கு , ""ரொம்ப தாங்ஸ் சார். எங்கள் பையனுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு!'' என்றாள் பேச்சோடு பேச்சாக.
இருந்தாலும் ராஜிக்கு கணவர் பெண் விஷயத்திலுள்ள பிடிவாதம் கொஞ்சம்கூட தளரவில்லையே என்ற தாபம்தான். அந்த வருத்தம் அபிநயாவுக்கும், மாப்பிள்ளைக்கும் இருக்காதா என்ன? ஓர் ஆறு மாத முன்பு பொது இடத்தில் ஒரு விசேஷத்தில் பார்த்தபோது, ""செளக்கியமா?'' என்று சம்பந்தி கேட்டதற்கு, ""இருக்கேன்'' என்ற முணுமுணுப்பான பதில்தான்.
அன்றிரவே அபிநயா போனில் வெடித்தாள்.
""மேனர்ஸ் தெரியாதா உங்களுக்கு? மரியாதைக்கு எதாவது பேசக் கூடாதா? அப்படியென்ன பிடிவாதம்? சாய்ராமுக்கு வருத்தம்.''
சேதுராமன் பதிலே சொல்லவில்லை, மௌனமாக போனை வைத்தார். மனைவியிடம் கேலியாக, ""அவரிடம் என்ன பேசுவது? பேங்க் ஆனால் வட்டி விகிதம் பற்றி பேசலாம். தனியார் கம்பெனியென்றால் பிசினஸ் பற்றி கேட்கலாம். அபிநயா மாமனாரிடம்? கிண்டலாக, காய்கறி, பருப்பு விலையைத்தான் கேட்கணும்.''
ஜனார்த்தனத்தைக் கொஞ்ச நாளாக காணோம். தளத்துக் காவலாளியை விசாரித்தபோது, அவர் பையன் அயல் நாட்டிலிருந்து குடும்பத்தோடு வந்திருக்கிறாரென்று கேள்விப்பட்டார்.
கைப்பேசியில் பேச முயன்றபோது, பையனின் விசித்திரமான உச்சரிப்பே ஒலித்தது. தகப்பனாரின் கைப்பேசியை உபயோகப்படுத்துகிறான் போல!
இரண்டு நாள் கழித்து, அவரே தன் மனைவியுடன் இல்லத்துக்கு வந்தார். சும்மா இல்லை, பழம், தேங்காய், வேஷ்டியுடன்.
""என் பையனுக்கு சஷ்டியப்த பூர்த்தி. கலாட்சேத்ரா காலனியில்'' என்று குறுஞ்செய்தியை காண்பித்தார். ""நீங்கள் மனைவியுடன் வந்து ஆசி பண்ண வேண்டும்!''
""வாழ்த்துகள், கண்டிப்பா வரேன். உங்களோடதைத்தான் கொண்டாட முடியலை'' என்று சேதுராமன் இழுத்தார்.
""ஆமாமாமம்... என் ஒய்ப்புக்கு அசாத்திய முட்டு வலி. போதாக்குறைக்கு கரோனா தொற்றுவேற!'' ராஜி அவசர அவசரமாக டீ கலந்து வைத்து, கணவரை ஓரக் கண்ணால் பார்த்தாள். நீங்களும் இருக்கிறீர்களே!'' என்று அனாவசியப் பிடிவாத்த்துடன் என்ற பாவம் அதில் தெரிந்தது.
""வருகிறோம். பங்ஷன் முடிந்து கொஞ்ச நாள் இருப்பார்களில்லையா?''
""ஆமாமாம்... மூன்று வார லீவு. மருமகள் பிறந்து வளர்ந்ததெல்லாம் பிலானி. அவளுக்கு ரொம்ப ஆசை இருக்கு!''
""நியூஸிலாந்து போனாலும், நம்ப பழக்க வழக்கங்களை மறக்காமலிருக்கிறதென்பது, எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்'' என்று சொன்னாள் ஜனார்த்தனன் மனைவி.
ராஜி கைப்பேசியில் அழைப்பிதழை பார்த்தாள். அன்றைக்குத்தானே ஸ்ரீராம்!
சட்டென்று சேதுராமன் இடைமறித்தார்.
""ஸ்ரீராமும் ஆச்சு! ஸ்ரீகிருஷ்ணாவும் ஆச்சு! பக்கத்திலேதானே? நாங்கள் இரண்டு பேரும் வருகிறோம்'' என்று அவர் புன்னகையுடன் சொன்னார்.
எந்த வேளையில் ராஜி சொன்னாளோ தெரியவில்லை. சமையலறையில் வழுக்கி விழுந்து, புறங்கையில் எலும்பு முறிவு. அவளுக்கென்று தனியே ஒருத்தியை நியமிக்க வேண்டி இருந்தது. சிறிய பிராக்சர்தான். ஆனால் வயது கூடியதால் மிக எச்சரிக்கை தேவையாம்.
எரிச்சலுடன் மனைவியைப் பார்த்து, ""ஜாக்கிரதையா இரு. சமையல் மாமி வந்துவிடுவாள்'' என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.
கலாட்சேத்திரா மண்டபம் கலகலவென்றிருந்த்து. பையன் விழா நாயகனான, நியூஸிலாந்தில் இருந்தாலும், தன் பழைய நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தான். மருமகளுக்கு சென்னையில் நிறைய உறவினர்கள்.
ஜனார்த்தனம் வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்தார். விழா நாயகனுக்கான வைபவம், புரோகிதர்களின் வேத கோஷத்துடன் நடந்து கொண்டிருந்தது.
விசேஷத்துக்கான நாற்காலிகள், மேசைகள் தனியே வந்தன. இரண்டு வரிசையாக இருபது பேர் தாராளமாக உட்காருமளவு கூட்டம்.
""பையனுடன் ஜனா நியூஸிலாந்து போயிடுவாரோ?''
""நோ! நோ! விசா எல்லாம் கிடைப்பது கஷ்டம்''
உறவினர்கள் தவிர, மற்றவர்களுக்கு டிபன் இல்லை போல, ஏதோ சம்பிரதாயத்துக்கு பேசினார்களே தவிர, மனதில் ஒரே எண்ணம்தான். "சாப்பாடு எப்போது வரும்?''
நாற்காலிகள் மெதுவாக நிரம்பின. விருந்தினர்கள் சிலர் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் கழுத்தை வளைதது வாசற்புறம் நோக்கினார்கள். அப்போதுதான் இரண்டு நபர்கள், ""ஸாரி ஸாரி'' என்று கூறியபடி உள்ளே நுழைந்தார்கள்.
நிமிர்ந்து பார்த்தார்கள். உணவுக்கான பாத்திரங்கள் இல்லை. ஒரு வாளி, அதில் நிறைய பால். இதைக் குடியுங்கள். பசி ஆறும். சாப்பாடு ஒரு பதினைந்து நிமிஷத்திலே வந்துடும்.
விருப்பமே இல்லாமல்தான், விருந்தினர்கள் பாலை குடித்தார்கள். அதிலுள்ள பாதாம் பருப்பும், ஏலக்காய் பொடியும் சுவையாக இருந்தது.
சேதுராமன் அப்போதுதான் நுழைந்தார். ஒருவரிடம் வேன் வருகிறது, ""பார்த்தேன், சாப்பிடலாம்'' என்றார்.
பச்சைக்கரை வேட்டியும், வெள்ளைச் சட்டையும், முகக் கவசமுமாக ஒருவர் வேகமாக வந்தார். ""மன்னிச்சுக்கணும், ஊரிலிருந்து சில ஆள்கள் வரலை. அதனாலே லேட். மன்னிச்சுக்கணும்'' என்று அரசியல்வாதி போல் பெரிய கும்பிடு போட்டார். நேரே உள்ளே போனார். மாமியிடம், ""பாதாம் அல்வாதான் நெனச்சேன் முதல்லே. சர்க்கரை கொஞ்சம் கம்மியாயிடுத்து! அதனாலே காஜூ கேக். லேட்டானதுக்கு ரொம்ப சாரி. பட்சணம் வந்திண்டிருக்கு!'' என்று கை கூப்பிச் சொன்னார்.
""என்ன? காலிலே ரெக்கை கட்டிண்டு வரேள்? இருங்கோ? உங்களுக்கு தெரிஞ்சவா இந்த ஏரியாவில இருக்கார்னு'' என்று அவர் இடைமறித்து, பேசினால் நேரமாகிவிடும்.
""வரட்டுமா. பணமெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்'' என்று கிளம்பினார். தன் உதவியாளர்களிடம் ஏகமாக அறிவுரை செய்துவிட்டு பைக்கில் புறப்பட்டார்.
இதுபோல விருந்து உண்டதேயில்லை என்ற அளவுக்கு அவ்வளவு ருசி. பரிமாறினவர்களும் கேட்டுக் கேட்டு இலையில் மெதுவாக உணவு வகைகளை வைத்தார்கள்.
சேதுராமன் மிக ருசித்துச் சாப்பிட்டார். ராஜி வரவில்லை என்பதால் தனி கேரியரில் உணவைப் பெற்றுக் கொண்டார். விடை பெறும்போது, ""உங்கள் பாட்டுன்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றார்.
சேதுராமனுக்கு லேசாக உறுத்தியது. கேரியர், தின்பண்டங்கள், கை கனத்தது. ""உங்க ஃபிளாட்டுக்கு அனுப்பறேன்'' என்றான் இரண்டாவது கொச்சின் பையன்
""வேண்டாம் பரவாயில்லை'' என்று சொல்லிவிட்டு, ஓரமாக அமர்ந்தார்.
சற்றுமுன் நடந்ததை எண்ணி அசை போட்டார். காலியான வயிற்றுக்கு இதமாக பாதாம் பால் தந்து பசியாற்றின சமயோசிதம், தொற்றுப் பரவலுக்கிடையிலும், எப்படியோ சமாளித்து, அபாரமான விருந்து படைத்த சாமர்த்தியம், யார் பார்வையிலும் படாமல் உற்ற தோழன் போல் பேசிவிட்டு விரைந்த நாகரிகம்.
சட்டென்று சந்தேகம் உதிக்க, பக்கத்திலிருந்தவரிடம் கேட்டார்.
""யார் கேட்டரிங்?''
வி.கே.எஸ். விமலா கேட்டரிங். ""அபிநயாவின் மாமியார்தானே விமலா? சம்பந்தியின் உயரத்துக்குமுன் தான் மிகவும் குறுகிப் போனது போல் தோன்றியது. வீட்டுக்குள் நுழைந்தார். ராஜியின் கைப்பேசியிலிருந்து சங்கீத கலாநிதியின் பாடல் வரி (மகா கவி) ஒலித்தது.
பொய்யகல தொழில் செய்தே - பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலார்
அப்போது கைப்பேசி ஒலித்தது.
""எவ்வளவு நேரம்? - என்று இப்பத்தான் அபிநயா பேசினாள்.
ஒரு நல்ல நியூஸ். ""பொய்யோ, மெய்யோன்னு இருக்கிறதாம்! டாக்டர் கன்பார்ம் பண்ணனுமாம்'' என்றாள் ராஜி மலர்ச்சியுடன். கை வலியையும் மீறி குரலில் மகிழ்ச்சி ஜொலித்தது.
சேதுராமன் மெதுவாக நடந்தார். "மணியின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு சம்பந்தி வீட்டார்களை எப்படி அழைக்க வேண்டும்' என்று மனைவியிடம் கேட்க வேண்டும், என்ன பேசுவது, எப்படி மன்னிப்பு கோருவது என்பதையும் மனத்துக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டார்.
டிபன் கேரியர், பட்சண பாத்திரம் இவற்றால் அவர் கை கனத்தாலும், மனது லேசாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT