தினமணி கதிர்

பாட்டுக்கார பாட்டி!

DIN

தேசிய விருது என்பது ஒரு கனவு. அதுவும் இசைத்துறையில் அது மிகப் பெரிய மைல் கல். ஆனால், பாரம்பரிய இசையை கற்காமலேயே இருளர் இனத்தைச் சேர்ந்தவர் பெற்றிருக்கிறார் என்பது மிகப் பெரிய ஆச்சரியம்தான். அவர் அட்டப்பாடியைச் சேர்ந்த நஞ்சியம்மா(60). எத்தனை விருதுகள் பெற்றாலும், ஊரில் அவருடைய பெயர் "பாட்டுக்கார பாட்டி'.
 கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஆலங்காடி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சியம்மா. இவர் திருமணமாகி கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி கிராமத்துக்கு சென்றுவிட்ட பின்னர் கேரளவாசியானார். இவரது கணவர் நஞ்சப்பன்.
 இந்தக் கிராமத்தில் நஞ்சி என அழைக்கப்படும் நஞ்சியம்மா இருளர் இன மொழியில் "நாட்டார்' பாடல்களைப் பாடி பிரபலமானவர். இதில் பிரபல மலையாள திரைப்படமான "ஐயப்பனும் கோஷியும்' என்ற திரைப்படத்தில் இவர் பாடிய பாடலுக்காக நாட்டின் 68-ஆவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கேரள அரசின் சிறப்பு விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 பாரம்பரியமாக இசையை கற்காமலேயே நஞ்சியம்மா விருது பெற்றுள்ளது இந்திய இசை உலகையை அசைத்திருக்கிறது எனலாம்.
 இவருக்கு விருது அறிவிக்கப்பட்டதும் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஆதிவாசிகள் நலச்சங்கம் மற்றும் பண்டைய பழங்குடியினர் பேரவையின் சார்பில் உடனடியாக அட்டப்பாடி கிராமத்துக்குச் சென்று முதன்முதலில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
 இதுகுறித்து அட்டப்பாடி கிராமத்தில் "பாட்டுக்கார பாட்டி' என அன்போடு அழைக்கப்படும் நஞ்சியம்மா கூறியதாவது:
 "எனது ஊரில் "பாட்டுக்கார பாட்டி' எனவும், "அம்மா' எனவும்தான் என்னை அழைக்கின்றனர். குழந்தைக்கு சோறு ஊட்டும் வகையிலான இந்தப் பாடல் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்திருக்கிறது என்றால் அது இறைவனின் அருளாசிதான்.
 பொது நிகழ்ச்சிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டார் பாடல்களை பாடி வருகின்றேன். முதன்முதலில் பாடிய கடவுள் குறித்த தெய்வ மகள் பாட்டுதான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது. நான் பள்ளிக்கூடமே போனதில்லை. எனது சகோதரர்கள்தான் அதிகளவாக 6-ஆம் வகுப்பு வரை படித்துள்ளனர். ஆனால், முதியோர் கல்வியில் சேர்ந்து படித்து கையெழுத்து போடும் வரை தெரிந்து வைத்துள்ளேன். 13 -ஆம் வயதிலிருந்து நான் பாடி வருகிறேன். ஆனால், அது இருளர் இனத்தில் பிறந்த நாள் முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளில் மட்டுமே பாடி வந்த காலமாகும்.
 "கலக்காத்தா சந்தன மெரா' பாடல் தமிழில் நிலவைக்காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்போது பாடும் கிராமியப் பாடலைப்போல, இருளர் இனத்தில் இயற்கையைக் காட்டிகுழந்தைகளுக்கு சோறு ஊட்டும் பாடலாகும்.
 பின்னர், "ஐயப்பனும் கோஷியும்' எனும் திரைப்படத்துக்காக, கலக்காத்தா சந்தன மெரா பாடலை பாடுகிறேன் என்பதே எனக்குத் தெரியாது. அதிலும் எந்த திரைப்படத்துக்காக, யாருக்காக இந்தப் பாடலை பாடுகிறேன் என்பது கூட தெரியாது. இயக்குநர் சச்சிதான் இத்தனை புகழுக்கும் காரணமானவர்.
 இந்தப் பாடலை பாடுவதற்காக என்னை எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு இசையமைப்பாளர் முன்னிலையில் இந்தப் பாடலை பாடிய பின்னர், இந்தப் பாடலுக்காக திரைப்படத்திலும் நடிக்க வைத்து படமாக்கினர்.
 எனக்கு மலையாள திரைத்துறையில் மோகன்லாலை மட்டுமே தெரிந்திருந்தது. பிருத்விராஜ் எனக்கு தெரிந்திருக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடியிருந்தாலும், சினிமாவுக்காக பாடியது இதுவே முதன்முறையாகும். மேட்டுப்பாளையத்தில் இருந்தபோது திரைப்படங்களை பார்ப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான அம்சமாகும். அதிலும் மிகவும் பிடித்த ஹீரோ என்றால் அது எம்ஜிஆர்தான்.
 விவசாயத்திலும், தோட்ட வேலைகளிலும், ஆடு மேய்ப்பதிலும்தான் எனது வாழ்க்கை கழிந்திருக்கிறது. இருந்தாலும் கஷ்டப்பட்டு என்னுடைய குழந்தைகளை படிக்க வைத்துள்ளேன். அதனால், குழந்தைகளுக்கு கண்டிப்பாக படிப்பை கற்றுத்தர வேண்டும். எந்தச் சமுதாயத்திலும் படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதேபோல, இயற்கையையும், வனத்தையும், வனவிலங்குளையும், பறவைகளையும் பாதுகாக்க வேண்டும். அந்த மனப்பான்மையை எல்லோர் மனதிலும் உருவாக்க வேண்டுமென்பதே எனது ஆசை'' என்றார் நஞ்சியம்மா.
 -ஏ.பேட்ரிக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT