தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நெய் எனும் அரிய மருந்து!

எஸ். சுவாமிநாதன்


தலையில் அடிபட்டுக் குணமடைந்த என் 67 வயது நண்பர், கடந்த 2020 டிசம்பர் 26-ஆம் தேதி சோபாவில் அமர்ந்து காபி குடிக்கும் வேளையில் மயங்கிச் சரிந்தார். பரிசோதனையில் மூளையில் 2 கட்டிகள் இருந்தன. அவற்றில் ஒன்று உடைந்து இரத்தம் சிதறிப் பரவியிருந்தது. அறுவைச் சிகிச்சை மூலம் அவை நீக்கப்பட்டாலும், கடந்த 8 மாதங்களாக கோமா நிலையில் உள்ளார். திரவ உணவு மட்டுமே தரப்படுகிறது. இதற்கு மூலிகைமருந்துகள் உள்ளனவா?

ந.முத்துக்குமாரசாமி,
மயிலாடுதுறை.

வெண்ணெய் பழசாகப் பழசாக குணங்களை இழக்கிறது. ஆனால் நெய் பழசாகப் பழசாக விசேஷ நற்குணங்களை அடைகின்றது. கலப்படமில்லாத பரிசுத்தமான நெய் மிகப் பழசானாலும், புதிதாக உருக்கிய நெய் போல சாப்பிட ருசி, வாசனையில்லாவிட்டாலும், அதிக துர்நாற்றத்தை அடைவதில்லை. பல வியாதிகளுக்கு மருந்தாக உபயோகிக்க அபார சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. மிகவும் பழையதான- வருஷக்கணக்கில் பழையதான நெய், கத்தியால் துண்டிக்கும்படி கெட்டியாகிவிடும்.

அதில் ஒரு வருடம் பழசான நெய்- வாயு, பித்தம், கபம் மூன்று தோஷங்களின் நோய்களையும் குணமாக்கும். வியாபார நோக்கமில்லாமல், வியாதியைக் குணப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்ட பழைய காலத்தில் ஆயுர்வேத மருத்துவர்கள் ஒரு வருடத்துக்குக் குறைவில்லாமல் பழையதான நெய்யையே மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சி மருந்து நெய்கள் தயாரிப்பது வழக்கம்.

அதிலும் 10 ஆண்டுகள் பழசான நெய் மூளை, நரம்பு சம்பந்தமான உன்மத்தம் எனும் பித்து பிடித்த நிலை, அபஸ்மாரம் எனும் காக்காய் வலிப்பு உபாதை, பயத்தால் ஏற்படும் கோளாறுகள், மயக்கம், மூர்ச்சை, விஷம், குஷ்டம், சருமநோய்கள், ஜலதோஷம், மூச்சிரைப்பு, இருமல், கண்ணோய்கள், ஜலதோஷம், நாட்பட்ட காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற விஷமஜ்வரம், நாள்பட்ட குணமாகாத மேலும் பல நோய்களைக் குணப்படுத்தும்.

101 ஆண்டுகள் பழசான நெய் கும்பகிருதம் என்றும் அதற்கு மேல் பழசான நெய் மஹாகிருதம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் பவித்திரமானது. திமிர நோய் எனும் கண்புரை சிகிச்சைக்குச் சிறந்தது. பூத - பிரேத - பிசாசாதி துஷ்டகிரஹ பீடைகளைப் போக்க வல்லது. கபவாத நோய்களைக் கண்டிக்கும். பைத்தியத்தைப் போக்கி, மூளைக்குத் தூய்மை, ஞாபகசக்தியை அதிகமாக்கும். இந்த நெய் உத்தம சக்தி வாய்ந்தது என்று மருத்துவநூல்கள் வெகுவாகப் புகழ்கின்றன.

பரம்பரை வைத்தியம் செய்யும் பல குடும்பங்களில் இன்றும் மண் கலயங்கள், குடங்களில் பசு நெய் நிரப்பி, தேதி போட்டு, பல வருடங்கள் பழசாகக் காப்பாற்றி வருகின்றனர். நூறு வருடத்துக்கும் மேற்பட்ட மஹாகிருதம் சில வைத்திய குடும்பங்களில் பூஜை அறையில் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நெய்யைத் தகுந்தபடி பிரயோகித்து, கொடிய வியாதிகளைக் குணப்படுத்தி, புண்ணியத்தையும், சிறந்த புகழையும், பெரும் சம்பத்தையும் அடைந்துள்ளார்கள்.

கேரளத்தில் திருச்சூர் நகரத்தில் விளங்கும் வடக்குநாதன் எனும் சிவ பெருமான் கோயில் சிவலிங்கத்துக்கு என்றென்றும் நெய்யினால் பக்தர்கள் செய்யும் அபிஷேகம் செய்வது மிக அதிகம்.

லிங்கத்தின் மேல், பின்புறம் எல்லாம் நெய் கட்டி கட்டியாகத் தேய்ந்து கிடக்கும். இந்த நெய்யைத் தனியாக வருடக்கணக்காய் கோயிலில் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புராணகிருதத்தை தங்கள் நண்பருக்கு, சிறிய அளவில் உருக்கி, திரவ உணவுடன் சேர்த்துக் கொடுத்தால், மூளையின் எல்லையற்ற சக்தியைத் தூண்டி, மறுபடியும் உயிர்ப்பித்து சாதாரண நிலைக்கு வரக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தக் கூடும்.

விற்பனையிலுள்ள சில ஆயுர்வேத மூலிகை நெய் மருந்துகளும் அவருக்குப் பயனளிக்கலாம். அதற்கு ஆயுர்வேத மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT