தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கழிவுகளை வெளியேற்றும் பச்சைப் பயறு கஞ்சி!

எஸ். சுவாமிநாதன்


கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கேரளாவிற்குச் சென்று ஆயுர்வேத மருத்துவமனைஒன்றில் தங்கி பதினைந்து நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அங்கு காலையில் பச்சைப் பயறு கஞ்சியை மட்டுமே உணவாகத்தருகிறார்கள். நம் ஊர் போல இட்லி, தோசை என்றெல்லாம் கொடுப்பதில்லை. அது ஏன்? பச்சைப் பயறு அத்தனை நல்லதா? அதன் குணாதிசயங்கள் எவை?

சந்திரன், ஈரோடு.

பச்சைப் பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச்சுவையும் குளிர்ச்சியான தன்மையும் கொண்டது. நல்ல ருசி தரக் கூடியது. ரத்தத்தில் தெளிவை ஏற்படுத்தி கொதிப்பைக் குறைக்கும். ரத்தத்தில் கசடுகள் அதிகமாகத் தங்காமல் வெளியேற்றிவிடும். அதனால் நீங்கள் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கியிருந்தபோது, எண்ணெய் தேய்ப்புமற்றும் உடல் வியர்வையை வரவழைக்கும் சிகிச்சை முறைகளால், உடல் உட்புறக் கசடுகள் நெகிழ்ந்து ரத்தத்தில் கலக்கும் என்பதை அறிந்தே. கேரள மருத்துவர்கள் அதை வெளியேற்றும் பொருட்டே தங்களுக்கு பச்சைப் பயறு கஞ்சியைக் கொடுக்கிறார்கள்.

இந்த வேலையை இட்லியோ தோசையோ செய்யாது என்பது மட்டுமல்ல, அங்குள்ள காலநிலை, சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இப்படித் தீர்மானிக்கிறார்கள்.

ஆகவே ரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும் என்பதால், தமிழகத்திலும் காலை உணவாக, பச்சைப் பயறு கஞ்சியைப் பருகுவதில் தவறேதுமில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மட்டுமல்ல, சாதாரணமாக வீட்டில் தங்கியிருக்கக் கூடியவர்களே காலையில் பச்சைப் பயறு கஞ்சி குடிக்கலாம்.

மேலும் பச்சைப் பயறு சிறப்பான சில செயல்களையும் செய்யக் கூடியது. சிறுநீர் தேவையான அளவில் பெருகவும் வெளியேறவும் உதவும். கபமோ பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும். பயறு அறுவடையாகி ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீர்யம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து உபயோகிக்க மிக எளிதில் ஜீரணமாகக் கடியது.

தோல் நீக்கி உடைத்த பயறு, பாசிப்பருப்பு ஆகிறது. ஆனால் வறுத்த பச்சைப் பயறை ஆற வைத்துக் குழவியில் அரைக்க முழுத்தோலும் நீங்காமல் கிடைக்கும் பாசிப்பருப்பைப் புடைத்து எடுத்ததே கூடுதல் குணம் தரும்.

பாசிப்பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும் காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறைவு உள்ளவர்கள் சாப்பிட களைப்பு நீங்கி பலம் உண்டாகும். பால் சேர்த்துச் சாப்பிட நல்ல புஷ்டி ஏற்படும். உபவாஸம் எனும் பட்டினி இருப்பவர்களுக்குக் குடலில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர்கேட்டைத் தணிக்க, பயற்றங் கஞ்சித் தெளிவுடன் பாலும் சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட மிகவும்நல்லது.

ஏசி அறையில் படுத்து உறங்குபவர்களுக்கு உடற்சூடு வெளியேறாமல் தடைப்படுவதால், வயிற்றில் கதகதப்பு ஜீரண கேந்திரத்திலிருந்திலிருப்பதன் காரணமாக, விடியற் காலையிலேயே கடுமையான பசியை ஏற்படுத்தலாம். பாசிப்பருப்பு சேரும் பொங்கல் அவர்களுக்குச் சத்து மிகுந்த உணவாகவும், ஆஸிட் ரிஃப்ளக்ஸ் எனும் பித்தத்தின் மேல் நோக்கில் எழும்பும் தன்மையும் தவிர்க்கப் பயன்படும்.

பச்சைப் பயறைத் தூளாக்கி, தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை அகற்ற குளிக்கும்போது பயன்படுத்தினால், தலைக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும். பச்சைப் பயறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி தாய்ப்பால் தரும் பெண்ணின் மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறையும். மார்பின் நெறிக் கட்டிகளும் குறையும்.

மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு, நீங்கள் காலை உணவாக பச்சைப் பயறு கஞ்சி குடிப்பதை விட்டிருக்கலாம். ஆனால் நீங்கள் மறக்காமல் மேலும் சில காலம் தொடரலாம். காரணம் பச்சைப் பயறு சீக்கிரம் ஜீரணமாவதும் வயிற்றில் அதிகமாக வாயுவை உண்டாக்காமல் இருப்பதும் இதன் சிறப்பு.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT