தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 39

தில்லி அரசியல் வட்டாரங்களில் நிலவிய பரபரப்பை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள செளத் அவென்யூ, நார்த் அவென்யூ மட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் தலைமையகங்கள் இருந்த அக்பர் ரோடு, அசோகா ரோடு பகுதிகளும், பத்திரிகை அலுவலகங்கள் இயங்கும் ரஃபி மார்க், பகதூர்ஷா சஃபர் மார்க்பகுதிகளும் பரபரப்பின் உச்சத்தில் இருந்தன.

வடநாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிரதமராக முடியும் என்கிற விதியை மாற்றி எழுதிய பெருமை பி.வி. நரசிம்ம ராவுக்கே உண்டு. அவரை எப்படி வடநாட்டு எம்.பி.க்கள் ஏற்றுக் கொண்டனர் என்பது இப்போது கூட ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. "வேறு வழியில்லாமல் அவரை ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் நிஜம்' என்று ஒருமுறை என்னிடம் தெரிவித்தார் கேரள முதல்வராக இருந்த கே. கருணாகரன்.

பி.வி. நரசிம்ம ராவைப் பிரதமராக்கியதில் கருணாகரனின் பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல. பிரணாப் முகர்ஜியும் அவரும் இணைந்து செயல்பட்டனர். இவர்களுடன் ஜி.கே. மூப்பனாரும் கணிசமான பங்கு வகித்திருக்கிறார்.

பி.வி. நரசிம்ம ராவ் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஜந்தர் மந்தர் சாலையிலுள்ள கேரள ஹெளஸில் தில்லி வந்திருந்த கே. கருணாகரனைச் சந்திக்கச் சென்றேன். அப்போது கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று, கருணாகரன் அடுத்த நான்கு நாள்களில் முதல்வராகப் பதவி ஏற்க இருந்தார். கேரள எம்.பி.க்களும், சில எம்.எல்.ஏ.க்களும் அவர்களது ஆதரவாளர்களும் என்று கேரள ஹெளஸ் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

கருணாகரன் தில்லிக்கு வந்தால், கேரளா ஹெளஸ் வளாகத்தில் உள்ள ஓர் அறையில்தான் தங்குவார். அவர் முதல்வராக இல்லாமல் இருந்தாலும் கூட அந்த அறை அவருக்கு ஒதுக்கப்படும். கேரள முதல்வராக ஈ.கே. நாயனார் இருந்தபோதுகூட, "லீடர்' (கருணாகரன்) வருகிறார் என்றால் அவருக்கு அந்த அறையை ஒதுக்கிவிடும்படி கேரளா ஹெளஸ் ஊழியர்களிடம் கூறிவிடுவார். தனிப்பட்ட முறையில் லீடர் மீது அப்படியொரு மரியாதை தோழர் ஈ.கே. நாயனாருக்கும் ஏனைய கேரள அரசியல் தலைவர்களுக்கும் இருந்தது.

அங்கிருந்த கூட்டத்திற்குள் நுழைந்து கே. கருணாகரனின் அறை வாசலில் நின்று கொண்டிருந்தேன். அவ்வப்போது கதவு திறப்பதும், சிலர் வந்து போவதுமாக இருந்தனர். என்னை அடையாளம் கண்ட கருணாகரனின் உதவியாளராக இருந்த கண்ணப்பன் உள்ளே அழைத்துக் கொண்டார்.

கருணாகரன்ஜி சாப்பிடுவதற்கான நேரம் வந்தபோது, எல்லாரும் அறையிலிருந்து வெளியேறினார்கள். நான் மட்டும் ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அப்போதுதான் என்னைக் கவனித்த "லீடர்' (அவரை அப்படித்தான் அழைப்பது வழக்கம்) முகமலர்ச்சியுடன், "ஹா... தான் எப்போ வந்நு?' (எப்போது வந்தாய்?) என்று அழைத்து அமரச் சொன்னார்.

"பி.வி.யைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்து விட்டோம். பிரணாபின் சாதுர்யம்தான் அதற்குக்காரணம்' என்று உணவருந்தியபடியே அவர் சொன்னபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இதில் ஏதோ பின்னணி இருக்கும் போலிருக்கிறதே என்கிற பொறி தட்டியது.

""பி.வி. நரசிம்ம ராவை எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. குறைந்தபட்சம் 1967-இல் நடந்ததுபோல வாக்கெடுப்பு நடக்கும் என்றுதான் அக்பர் ரோடு தலைமையகத்தில் பலரும் பேசிக் கொண்டார்கள்'' என்றேன்.

""பி.வி.யைக் காங்கிரஸ் தலைவராக்கியதில் இருக்கிறது பிரணாப் முகர்ஜியின் ராஜதந்திரம். அப்போது பி.வி. ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காவிட்டால், இப்போது இது சாத்தியமாகி இருக்காது.
பிரணாப் போட்ட திட்டம் தெரியாததால், சீதாராம் கேசரியும், பல்ராம் ஜாக்கரும், அர்ஜுன் சிங்கும், சரத் பவாரும் ஏமாந்து விட்டார்கள்.''

கருணாகரன்ஜி என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு முதலில் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்:

""காங்கிரஸ் செயற்குழுவை எனது தலைமையில் கூட்டியபோது, பிரணாப் முகர்ஜி ஏதோ செய்யப் போகிறார் என்று நானும் மூப்பனார்ஜியும் ஊகித்துவிட்டோம். அவர் எங்களிடம் முன்கூட்டி எதுவும் தெரிவிக்கவில்லை. செயற்குழுக் கூட்டத்தில் எடுத்த எடுப்பில் பி.வி. நரசிம்ம ராவின் பெயரை பிரணாப் முகர்ஜி முன்மொழிந்திருந்தால், கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கும். எல்லாரும் அதை எதிர்த்திருப்பார்கள். எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் கூட்டம் குழப்பத்தில் முடிந்திருக்கும். சோனியாஜி பெயரை முன்மொழிந்து எல்லாருடைய கனவையும் கலைத்துவிட்டார் பிரணாப்!''

""ஒருவேளை தலைவராவதற்கு சோனியா காந்தி அப்போதே ஒப்புக் கொண்டிருந்தால் என்னவாகி இருக்கும்?''

""அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று பிரணாபுக்குத் தெரியும். அப்படி ஏற்றுக் கொண்டிருந்தால், கணவர் இறந்த ஒரு சில நாள்களிலேயே பதவியின் மீது ஆசைப்பட்டவர் என்கிற கெட்ட பெயர் சோனியா காந்திக்கு ஏற்பட்டிருக்கும். சோனியாஜி அவராகவே போட்டியில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிவிட்ட நிலையில், மற்றவர்கள் சிந்திக்கவோ, எதிர்க்கவோ நேரம் கொடுக்காமல் பி.வி. நரசிம்ம ராவ் பெயரை முன்மொழிந்து தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டார்.''

பி.வி. நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் இப்படியொரு ராஜதந்திரம் இருந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

கருணாகரன் - பிரணாப் முகர்ஜி - மூப்பனார் கூட்டணியின் முயற்சியின் காரணமாகத்தான் பி.வி. நரசிம்ம ராவ் கட்சித் தலைவராகவும், அதன் பிறகு பிரதமராகவும் உயர முடிந்தது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்ய மாட்டார்கள். ஏனென்றால், அது திரைமறைவில் நடத்தப்பட்ட திட்டமிட்ட ராஜதந்திர நகர்வு. எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்துத் தன்னை முன்னிலைப்படுத்திய மூவரையும், ஒருவர் பின் ஒருவராக பி.வி. நரசிம்ம ராவ் ஓரங்கட்டினார் என்பது தில்லி அரசியலில் யாரும் எதிர்பார்த்திராத திருப்பம்.

ஒளிவு மறைவே இல்லாமல் என்னிடம் எல்லா விஷயங்களையும் "லீடர்' பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு, அவருக்கு என்னிடம் நம்பிக்கை இருந்தது. நான் எப்போது தில்லி வந்தாலும் எனக்குக் கேரளா ஹெளஸில் தங்க இடம் தர வேண்டும் என்று அங்கிருந்த சில ஊழியர்களிடம் அவர் சொல்லி வைத்திருந்தார். அதேபோல, நான் பலமுறை கேரளா சென்றபோது அரசினர் தங்கும் விடுதிகளில் எனக்குத் தங்க அனுமதி பெற்றுத் தந்திருக்கிறார்.

""யாரெல்லாம் அமைச்சர்களாவார்கள் என்று நரசிம்ம ராவ் ஏதாவது தெரிவித்தாரா?'' - நான் கேட்டேன்.

""பி.வி. என்ன செய்வார் என்பது அவருக்குத்தான் தெரியும்.

பிரணாபை நிதியமைச்சராக்குவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்'' என்றார் லீடர்.

அவரிடமிருந்து விடைபெற்று கேரள ஹெளஸிலிருந்து வெளியே வரும்போதே இருட்டிவிட்டது. பொடி நடையாக, ராஜேந்திர பிரசாத் சாலை, ராய்சினா சாலை சந்திப்பில் இருக்கும் பிரஸ் கிளப்புக்கு நகர்ந்தேன். பொழுது சாய்ந்தால் தில்லி பத்திரிகையாளர்கள் கூடும் இடமது.

அருகிலுள்ள ரஃபி மார்க் "ஐ.என்.எஸ்.' கட்டடத்திலிருந்தும், யு.என்.ஐ., பி.டி.ஐ. நிறுவனங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அங்கே வந்து விடுவார்கள்.

சிகரெட் புகை மண்டலத்துக்கு நடுவில் மெல்ல நடந்து ஒரு மேஜையில் போய் அமர்ந்து, அங்கே பேசப்படும் செய்திகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். எல்லாருடைய பேச்சும் அடுத்த நாள் பதவி ஏற்க இருக்கும் நரசிம்ம ராவ் அமைச்சரவை பற்றியதாகத்தான் இருந்தது.

சரத்பவாரும், அர்ஜுன் சிங்கும் துணைப் பிரதமர்களாவார்களா, யாருக்கு உள்துறை ஒதுக்கப்படும், பாதுகாப்பு அமைச்சர் யார் என்பவைதான் விவாதிக்கப்பட்டனவே தவிர, நிதியமைச்சர் யாராக இருப்பார் என்பது பற்றி, அந்தப் பத்திரிகையாளர்கள் மத்தியில் எந்தவித விவாதமும் இருக்கவில்லை. பிரணாப் முகர்ஜிதான் நிதியமைச்சர் என்பதை அனைவரும் தீர்மானம் செய்திருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

அங்கே இருந்த வங்காளப் பத்திரிகையாளரான பார்த்தா பானர்ஜி என்னைப் பார்த்ததும் கையசைத்தபடி வந்து என்னருகில் அமர்ந்தார்.

""உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன்'' என்றபடி அவர் சொன்ன தகவல், அப்போது எனக்கு உப்புச்சப்பு இல்லாததாக இருந்தது. அது திரும்புமுனையை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், ஏற்படுத்தியது.

""நாளை பதவி ஏற்க இருக்கும் பி.வி. நரசிம்ம ராவ், குடியரசுத் தலைவரை சந்திக்க ராஷ்டிரபதி பவன் சென்றிருக்கிறார்'' என்பதுதான் பார்த்தா பானர்ஜி என்னிடம் தெரிவித்த தகவல். நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோர குடியரசுத் தலைவரைச் சந்திப்பது என்பது சம்பிரதாயம் என்பதால் , பார்த்தா பானர்ஜி சொன்ன தகவலுக்கு நான் எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.

பிரஸ் கிளப்பின் இன்னொரு பகுதியில் முக்கியமான இரண்டு மூத்த பத்திரிகையாளர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர் "தி வீக்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் டி.வி.ஆர். ஷெனாய். இன்னொருவர், "கேரள கெளமுதி' நாளிதழின் தில்லி தலைமை நிருபர் நரேந்திரன். தில்லி அரசியல் வட்டாரங்களில் நடக்கும் சிறு அசைவு கூட அவர்கள் இருவரின் பார்வையிலிருந்து தப்பாது.

பொதுவாக, சாதாரண பத்திரிகை நிருபர்கள் கூடும் பிரஸ் கிளப்பில் அவர்கள் இருவரையும் பார்க்க முடியாது. அவர்கள் அங்கே வந்திருப்பதே என்னை ஆச்சரியப்படுத்தியது. பேசிக் கொண்டிருக்கும் அவர்களை அந்த இடத்தில் சந்தித்தால், அது அந்த மூத்த பத்திரிகையாளர்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்கிற அச்சம் என்னில் நிலவியது. தயக்கத்துடன் சற்று தள்ளிப்போய் நின்று கொண்டிருந்த என் மீது நரேந்திரன் சாரின் பார்வை விழுந்தது. ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தபடி அருகில் அழைத்தார். ஷெனாய் சாரும் திரும்பிப் பார்த்தார்.

""இந்த இடத்துக்கெல்லாம் நீ வருகிறாயா? வரமாட்டாய் என்று நினைத்தேன்...'' என்று நரேந்திரன் சார் கேட்கும்போது, தனக்கருகில் இருந்த நாற்காலியில் அமரும்படி சைகை செய்தார் டி.வி.ஆர். ஷெனாய். ""லீடரை சந்தித்துவிட்டுக் கேரள ஹெளஸிலிருந்து வந்து கொண்டிருந்தேன். ஏதாவது செய்தி கிடைக்குமா என்று உள்ளே நுழைந்தேன்.''

""கிடைத்ததா?'' - இது ஷெனாய் ""சொல்லும்படியாக எதுவும் இல்லை. ராஷ்டிரபதி பவனில் ஆர்.வி.யை சந்திக்க பி.வி. சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.''

இரண்டு பேருமே சிரித்தார்கள். எனக்கு அர்த்தம் புரியவில்லை. அவர்கள் தாங்கள் விட்ட இடத்திலிருந்து தங்களது சம்பாஷணையைத் தொடர்ந்தனர். அதிலிருந்து கிடைத்த தகவல் இது - பி.வி. நரசிம்ம ராவின் வேண்டுகோளின்படி, அமைச்சரவைப் பட்டியலையும், அந்த அமைச்சர்களுக்கான துறைகளையும் பிரணாப் முகர்ஜி தயாரித்துக் கொடுத்திருக்கிறார். அதில் தனது பெயரை இணைக்கவில்லை என்பது மட்டுமல்ல. நிதியமைச்சருக்கான நபரையும் குறிப்பிடவில்லை. நிதியமைச்சர் பதவியை நான் எதிர்ப்பார்க்கிறேன் என்பதை அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்பதுதான் அதன் பொருள்.

""நீதான் பிரணாப்தாவின் சிஷ்யனாயிற்றே. அவர் உன்னிடம் ஏதாவது சொன்னாரா?'' - கண்ணை சிமிட்டியபடி கேட்டார் டி.வி.ஆர். ஷெனாய்.

""நான் அவரை சந்திக்கவே முடியவில்லை. நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த பிறகு, அக்பர் ரோடு தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பார்த்தேன். பேசவில்லை. நீங்கள் சந்திக்கவில்லையா?''

""நாங்கள் எதற்காக அவரை சந்திக்க வேண்டும்? கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்'' என்று மலையாளத்தில் கூறியபடி, "நாளைக்குத்தான் எல்லாம் தெரிந்துவிடுமே...' என்றார் அவர்.

""பிரணாப் முகர்ஜி தப்பு செய்துவிட்டார். நிதியமைச்சர் பொறுப்புக்குத் தனது பெயரை இணைத்துப் பட்டியல் கொடுத்திருக்க வேண்டும். பிரணாப் முகர்ஜி ராஜதந்திரி; சாமர்த்தியசாலி; திறமைசாலி. ஆனால் பி.வி. நரசிம்ம ராவ் சாணக்கியர். நிதியமைச்சர் பதவிக்குப் பலர் காத்திருக்கிறார்கள். இவர் மறுபரிசீலனைக்கு வாய்ப்பே கொடுத்திருக்கக் கூடாது...'' டி.வி.ஆர். ஷெனாயின் அந்த வார்த்தைகள் இன்றுவரை எனது காதில் ஒலித்த வண்ணம் இருக்கிறது.

அன்றைய நரசிம்ம ராவ் - ஆர். வெங்கட்ராமன் சந்திப்பு இந்தியாவின் வரலாற்றையே புரட்டிப் போட்டது. நான் சற்றும் எதிர்பாராத திருப்பம், அடுத்த நாள் காலையில் காத்திருந்தது...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT