தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ரத்த வாதம் குணமாக...!

18th Jul 2021 06:00 AM | பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT

 

என் வயது 43. கணுக்கால், முழங்கால், மணிக்கட்டு, புஜங்கை, தோள்பட்டை மூட்டுகளில் வீக்கமும், எரிச்சலும், தொட்டால் அவ்விடங்களில் தொட முடியாத சூடுள்ளதாகவும் இருக்கிறது. அடிக்கடி கடுமையான காய்ச்சலும் ஏற்படுகிறது, காலையில் குறைவாகவும், மாலையில் அதிகமாகவும் ஏற்பட்டு அவதிப்படுகிறேன். இது என்ன உபாதை? எப்படிக் குணப்படுத்துவது?

ராஜேஸ்வரி,
சேலம்.

ரத்தவாதம் எனும் இந்த உபாதை அநேகமாக காலின் மூட்டுகள் ஒன்றில்தான் முதன்முதலில் தொடங்கும். சிலருக்குக் கையிலும் தொடங்குவதுமுண்டு. இந்த இரண்டு வகையிலும் வெகுவிரைவில் மற்ற மூட்டுகளில் எல்லாம் படுவேகத்தில் பரவிவிடும். நிரந்தரமானஎரிச்சல், விண்விண் என்று தெறிப்பு நோவு ஆகியவையும் விடாத காய்ச்சலும் இதன் முக்கிய குறிகள். கையை, காலை எளிதில் அசைக்க முடியாது. அருகாமையில் யாராவது நடந்தாலும் நோயாளியின் வீக்கமுள்ள இடத்தில் சம்மட்டியால் அடித்தது போன்ற வலி உண்டாகும். நோயாளி அலறுவான்.

ADVERTISEMENT

விரல், கணுக்கள், கழுத்து என்று ஓரிடமும் பாக்கியில்லாமல் இந்த உபாதைகள் பரவி இருக்கும். சரி வர சிகிச்சை எடுக்காததாலோ, அல்லது சிகிச்சைக்கும் மீறிய கொடிய நிலையிலிருப்பதாலோ உபாதை நீடித்து நிற்க நேரிடுமானால் வீக்கமுள்ள இடத்தில் சீழ் பிடிக்கவும், குத்தல் வலியும் உண்டாகும். வர வர குத்தல் அதிகரிக்கும். ஆனால் எரிச்சலும் சூடும் ஓரளவு குறையும். தொடையில் ஒரு ரத்தக்கட்டி போல் உடைந்து, வீக்கமுள்ள இடத்திலிருந்து ரத்தமும் சீழும் பெருகும்.

இவ்வாறு உடைந்த இடத்திலிருந்து பெருகும் சீழ் ரத்தங்கள் நெடுநாளானாலும் நிற்காது. புண்ணும் காயாது. கால ஓட்டத்தில் அடியிலுள்ள எலும்பும் புண்ணோடு சம்பந்தப்படும். இப்படி பெரியதொரு வேதனையைக் கொடுக்கக் கூடியது ரத்தவாதம். இதில் வாதம், ரத்தம், பித்தம் இவை அழற்சியுறுவதுதான் காரணம்.

பொதுவாக அதிகமான ரத்தம் உடலில் உண்டாவதும், அந்த ரத்தம் மாமிசம், மேதஸ் என்ற தாதுக்களாக மாற்றமடையாமல் தங்கிவிடுவதாலும் இந்நிலை ஏற்படுகிறது. எறுமைப் பாலை அதிகம் உபயோகிப்பது இதற்கு நேரடியான காரணங்களில் ஒன்றாகும்.

ரத்த வாதத்தில் எண்ணெய், நெய், வெண்ணெய், பால் போன்ற நெய்ப்பு குணமுள்ளதும் குளுமையானதுமான மருந்துகளையே உபயோகிக்க வேண்டும். அதற்கு பிண்ட தைலம் என்னும் மருந்தை வீக்கமுள்ள மூட்டுகளில் மிக தாராளமாக மேலுக்கு உபயோகிக்க வேண்டும். கையினால் வீக்கத்தைத் தொட்டு வலியை அதிகரிக்கச் செய்யக் கூடாது. அதனால் இந்தத் தைலத்தை ரத்தவாதம் வந்துள்ள இடத்தின் வீக்கத்தின்மேல் தாரையாக ஊற்றிப் பயன்படுத்துவதே நல்லது. கால் மணி நேரம் தாரை செய்தால் வீக்கமுள்ள இடத்தில் சூடு அறவே நீங்கிவிடும். எரிச்சல் மிகக் கணிசமாகக் குறைந்துவிடும். வலி பொறுக்கும் அளவுக்குக் குறையும்.

பிறகு ஒரு பஞ்சில் பிண்ட தைலத்தை சொட்டச் சொட்ட நனைத்து வீக்கமுள்ள இடத்தில் மேல் இட்டு வைக்கவும். ரத்த சூட்டினால் இந்த பஞ்சு சூடாகிவிட்டால், அதை உடனே நீக்கிவிட்டு, வேறு ஒரு பஞ்சை தைலத்தில் முக்கிப் போட வேண்டும். கடுமையான நிலையிலுள்ள போது, ரத்தவாதத்தில் இச்சிகிச்சை ஆச்சரியமான பலனை உடனே அளிக்கும்.

ஜடாமயாதி எனும் மருந்தை அரிசி வடித்த கஞ்சியில் குழைத்து விரல் அளவு கனத்தில் பற்று இட வீக்கம் வலி எரிச்சல் இவையாவும் படிப்படியாகக் குறைந்துவிடும். பற்று முழுவதும் உலர்ந்து விடுமுன் அதை மாற்றிவிடுதல் அவசியம்.

வீக்கம் முதலியவை கடுமையாக இருப்பின், அட்டைப் பூச்சியைக் விட்டுக் கடிக்கச் செய்து சிறிது ரத்தத்தைக் களைய வேண்டும். இந்நோயின் உள்ளுக்குக் கொடுக்கக் கூடிய, மிகவும் பிரசித்தி பெற்ற மருந்து சீந்தில்கொடி. அதன்மேல் படர்ந்துள்ள மெல்லிய தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் விட்டு இடித்துப் பிழிந்து சாற்றில் சிறிது கற்கண்டு கலந்து காலை மாலை இரண்டு அவுன்ஸ் (60 மி.லி) வீதம் உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், காய்ச்சல் குறையும். ரத்தவாதம் குணமாகும்.

(தொடரும்)

Tags : kadhir Cure Rheumatism ...!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT