தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 19

17th Jan 2021 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT


​வாக்கு எண்ணிக்கைக்கு முன்னால் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதிக்கும், இப்போது நான் பேட்டி எடுக்கும்போது சந்திக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது. அப்போது இருந்தது தன்னம்பிக்கை என்றால், இப்போது அவரிடம் அதீத உற்சாகமும், மீண்டும் முதல்வராகிவிட்ட பெருமிதமும் காணப்பட்டது.

நியாயம்தானே? 1972-இல் எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்து தோல்வி மேல் தோல்வி. பதிமூன்று ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் தமிழக முதல்வராக அதிகாரத்தில் அமர்ந்த 
அவரது சாதனையின் பெருமிதம் இருக்கத்தானே செய்யும்..

அதே நேரத்தில், அந்தப் பெருமிதம் தலைக்கேறிவிடவில்லை என்பதை அவரது சிரிப்பும், வரவேற்பும் எடுத்தியம்பின. மிகவும் சகஜமாக என்னை வரவேற்று அமரச் சொன்னாôர். வாழ்த்துச் சொன்னபோது முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு அவர் கேட்ட கேள்வி என்னை நிலைகுலைய வைத்தது.

""தில்லியிலிருந்து எப்போது வந்தீர்கள்?''

ADVERTISEMENT

நான் சற்று திகைத்துப்போய் பதிலளிப்பதற்கு முன், அவரே தொடர்ந்தார்.

""நீங்கள் செய்தி நிறுவனம் தொடங்கிய பிறகு தில்லியில்தான் அதிகம் இருப்பதாக மாறன் சொன்னார். அதனால்தான் கேட்டேன்.''

அப்பாடா... என்றிருந்தது. ஆனாலும், என்னைப் பற்றிய எல்லா தகவல்களையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார் என்கிற ஐயப்பாடு எனக்குள் ஏற்படாமல் இல்லை. நான் செ.மாதவனையும், ம. நடராஜனையும் சந்தித்ததுகூட முதலமைச்சரான அவருக்குத் தெரிந்திருக்கக் கூடும்.

சுமார் 15 நிமிடங்கள்தான் எனது பேட்டி. கொஞ்சம்கூடத் தயக்கமில்லாமல் அவர் பதிலளித்தது, அவர் எவ்வளவு தெளிவாக இருக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது. காங்கிரஸூடனான உறவு குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். 

""மத்திய அரசுடனான உங்கள் உறவு எப்படி இருக்கப் போகிறது?'' 

""நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் எந்தவித மோதலோ, கருத்து வேறுபாடோ இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அதற்காக நாங்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்போம் என்று அர்த்தமல்ல. காங்கிரஸூம், திமுகவும் அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கிறது என்பதற்காக, பிரதமருக்கும் முதல்வருக்கும் இடையேயான உறவில் பிரச்னை இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.''

அடுத்த பல கேள்விகளுக்குப் பிறகு நான் மீண்டும் அவரது மனப்போக்கை அறிந்து கொள்ள ஒரு கேள்வி எழுப்பினேன். மாநிலத்தில் ஆட்சி அமைத்துவிட்ட நிலையில், திமுகவும் காங்கிரஸூம் இணைந்து செயல்படவும், தேசிய முன்னணியில் இருந்து திமுக விலகி காங்கிரஸூடன் கைகோத்து செயல்படவும் வாய்ப்புண்டா என்று நேரிடையாகவே அவரிடம் கேட்டுவிட்டேன்.
அவர் சிரித்தார். ""நீங்கள் இந்தக் கேள்விக்காகத்தானே இந்தப் பேட்டியே எடுக்கிறீர்கள்? 

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மத்திய ஆட்சியில் தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, "திமுகவின் வெற்றி தேசிய முன்னணியின் வெற்றி' என்று அறிவித்தார் வி.பி. சிங். இப்போது "தேசிய முன்னணியின் வெற்றி, திமுகவின் வெற்றி' என்று அறிவிப்பது எங்கள் முறை. அதில் மாற்று சிந்தனைக்கே இடம் கிடையாது!''

முதல்வர் கருணாநிதி மிகவும் தெளிவாகத் தெரிவித்து விட்டார். பேட்டிக்காக மட்டுமல்லாமல், நீங்கள் தில்லி காங்கிரஸ் தலைமைக்கும் இதைத் தெரிவித்து விடுங்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டார்.

முதல்வர் கருணாநிதியிடம் கேட்க இன்னும் நிறையக் கேள்விகள் இருந்தன. ஆனால், வெளியே "தலைவர் முதல்வர் டாக்டர் கலைஞர் வாழ்க' என்று குரலெழுப்பிக் கொண்டிருந்த கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு நடுவில் அவரது நேரத்தை மேலும் எடுத்துக் கொள்ள முடியாத நிலை. அவரும் இரண்டு மூன்று முறை தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டார்.

அவரிடம் விடைபெற்று, கோபாலபுரத்திலிருந்து மீண்டும் வீனஸ் காலனி சுஜாதா பிலிம்ஸ் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தேன். தயாரிப்பாளர் ஜீவி காத்துக் கொண்டிருந்தார். அவரது அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தபோது, அவர் சிரித்துக் கொண்டே  ஓர் உறையை நீட்டினார்.

அவர் தந்த உறையில் அடுத்த நாள் அதிகாலை விமானத்தில் தில்லி செல்வதற்கான டிக்கெட்டும், எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரும் விதத்திலான ஓர் "ஓபன்' டிக்கெட்டும் இருந்தன.

""உங்களுக்கு எப்போது வசதிப்படுகிறதோ அப்போது இதற்கான பணத்தைத் திருப்பித் தாருங்கள். காங்கிரஸ்காரனாகவோ, சினிமா தயாரிப்பாளராகவோ அல்ல, உங்களது நண்பனாக நான் செய்யும் உதவி என்று எடுத்துக் கொள்ளுங்கள். வாங்க போகலாம்'' என்றபடி எழுந்தார். நானும் எழுந்தேன்.

அடுத்த நாள் அதிகாலை விமானத்தில் நான் தில்லிக்குக் கிளம்பியபோது, ம. நடராஜனும் அதே விமானத்தில்தான் பயணம் செய்தார். அவருடன் சில வழக்குரைஞர்களும், கட்சிப் பிரமுகர்களும் இருந்ததால் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டோமே தவிர, பேசிக் கொள்ளவில்லை.

விமான நிலையத்திலிருந்து நேராக நான் தவான்ஜியின் கோல்ஃப் லிங்க்ஸ் இல்லத்துக்குத்தான் போனேன். அவரும் என்னை எதிர்பார்த்திருந்தது தெரிந்தது. முதல்வர் கருணாநிதி எந்தக் காரணத்துக்காகவும் தேசிய முன்னணியைக் கைவிடுவதாக இல்லை என்பதைச் சொன்னபோது, தவான்ஜிக்கு முகம் சற்று இறுகியது. 

""கருணாநிதி இஸ் மேக்கிங் எ மிஸ்டேக்!'' 

(கருணாநிதி தவறு செய்கிறார்) என்று சொன்னார் ஆர்.கே. தவான்.

""என்னுடன் விமானத்தில் ம. நடராஜனும் வந்தார். அவரிடம் நான் எதுவும் பேசவில்லை.''

""தெரியும். தில்லி வந்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்தார். அவருக்கு பூட்டா சிங் எல்லா உதவிகளையும் செய்து கொடுப்பார் என்று சொல்லி விட்டேன். ஜெயலலிதாஜி இஸ் அன்ஸ்டாப்பபிள் நெளவ்!'' (இனிமேல் ஜெயலலிதாஜியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது) என்றார் அவர்.

அவரிடம் விடைபெற்று வெளியே வந்தேன். முதல்வர் கருணாநிதி காங்கிரஸூடன் சமரசமாகி இருந்தால், இணைந்துவிட்ட அதிமுகவுக்கு "இரட்டை இலை' சின்னம் கிடைக்காமல் போயிருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.

1989 பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி, தமிழகத்தில் இருந்து வெளிவரும் மாலை செய்தித் தாள்களின் தலைப்புச் செய்தி "அதிமுகவுக்கு மீண்டும் இரட்டை இலை சின்னம்' என்பதுதான். தொடர்ந்து நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத்தேர்தல்களில் திமுக அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்தும்கூட, ஒன்றுபட்ட அதிமுகவின் "இரட்டை இலை' சின்னம் வெற்றி தேடிக் கொடுத்தது என்பது வரலாற்று உண்மை.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு ம. நடராஜன் எடுத்துக்கொண்ட முனைப்பை நேரில் பார்த்து நான் வியந்திருக்கிறேன். இப்போது மறக்கப்பட்டுவிட்ட அந்த நிகழ்வுகளை முன்னாள் தலைமை வழக்குரைஞராக இருந்த கே. சுப்பிரமணியம் ஒருவரால்தான் முழுமையாகப் பதிவு செய்ய முடியும். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த பெரி சாஸ்திரியும், உள்துறை அமைச்சராக இருந்த பூட்டா சிங்கும் "இரட்டை இலை' சின்னத்தைப் பெற நடராஜனுக்கு உதவியவர்கள் என்பது வரைதான் எனக்குத் தெரியும்.

நான் அடுத்த சில நாள்களில் சென்னை திரும்பிவிட்டேன். நண்பர் ஜீவி தந்திருந்த ஓபன் டிக்கெட்டை பத்திரப்படுத்திக் கொண்டு, வழக்கம்போல ரயிலில்தான் திரும்பினேன். அடுத்த முறை தேவை ஏற்பட்டால், விமான டிக்கெட் கையில் இருக்கட்டும் என்கிற பத்திர உணர்வுதான் காரணம்.

மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஜெயலலிதா தலைமையில் அதிமுக வலுப்பெற்று விட்டது. சட்டப்பேரவையில் மார்ச் 25-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.

அதற்கிடையில் நான் இரண்டு மூன்று முறை தில்லி சென்றேன். ஒருமுறை அக்பர் சாலை காங்கிரஸ் அலுவலகத்தில் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்ததால், இடைப்பட்ட நாள்களில் நடந்த சம்பவங்களை எல்லாம் அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவரும் எதையோ படித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தார்.
""வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூம் அதிமுகவும் கூட்டணி அமைக்க இருக்கின்றன. இதை சட்டப்பேரவைத் தேர்தலின்போது செய்திருந்தால் பிரயோஜனமாக இருந்திருக்கும். திமுக ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், வெற்றி பெறுவது சுலபமல்ல...'' என்றேன் நான்.

அதுவரை சுவாரஸ்யமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்த பிரணாப்தா ஒரு விநாடி தாமதித்து, ""நீ தப்புக் கணக்கு போடுகிறாய்...'' என்றார்.

நான் எதுவும் பேசவில்லை. அவரே தொடர்ந்தார்.

""சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பன்னிரண்டு தடவை ராஜீவ் காந்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததன் பலனை இப்போது இந்தக் கூட்டணி அறுவடை செய்யப் போகிறது. இப்போது மட்டுமல்ல, இனிவரும் எல்லா மக்களவைத் தேர்தல்களிலும் பல ஆண்டுகளுக்கு ராஜீவின் தாக்கம் வெளியில் தெரியாமல் இருந்து கொண்டே இருக்கும்.''

அப்போது பிரணாப் முகர்ஜி சொன்னபோது அதன் நுணுக்கம் புரியவில்லை. இப்போது புரிகிறது.

அவரிடமிருந்து விடைபெறும்போது, அவர் என்னை ஒரு நிமிடம் உட்காரச் சொன்னார். ஏதோ யோசனையில் ஆழ்ந்தார், சற்று நேரம் கழித்துப் பேசத் தொடங்கினார்.

""வேலையை விட்டுவிட்டு, உனக்கென்று ஒரு செய்தி நிறுவனம் தொடங்கி இருக்கிறாய். அரசியல்வாதிகள் உன்னை பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். அவர்களுடன் சுற்றத் தொடங்கினால் உனது செய்தி நிறுவனம் முடங்கிவிடும். தேர்தல் வர இருக்கிறது. உனது செய்தி நிறுவனத்தை பலப்படுத்த இதுதான் சரியான நேரம். பெரிய பத்திரிகைகளே உன்னை வியந்து பார்க்கும்படி செய்திகளையும், பேட்டிகளையும், கட்டுரைகளையும் உனது செய்தி நிறுவனம் வழங்குவதற்கான வேலைகளைச் செய். அரசியல்வாதிகளின் இடைத்தரகராக மாறிவிடாமல் கவனமாக இரு. இதுதான் நான் உனக்குத் தரமுடிந்த வழிகாட்டுதல்...!''

உண்மைதான். கவனச்சிதறல் நிறையவே இருப்பதை என்னால் உணர முடிந்தது. சரியான தருணத்தில் என்னை சுதாரித்துக் கொள்ள பிரணாப்தாவின் அந்த அறிவுரை உதவியது.

நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, என்.டி. ராமாராவ் தலைமையிலான தேசிய முன்னணியின் அறிமுகக் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் திமுகவால் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. வி.பி. சிங், என்.டி. ராமாராவ், பரூக் அப்துல்லா, சந்திரசேகர், அஜித்சிங், பகுகுணா என்று இந்தியாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருமே சென்னையில் நடந்த அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அன்று கடற்கரையில் நடந்த அந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டமும், அதற்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பும் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் சென்னையில் குவியச் செய்தது.

கடற்கரைப் பொதுக்கூட்டம் முடிந்த இரவு ஹெச்.என். பகுகுணாவின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால், அவர் இன்னும் தூங்கவில்லை என்று தெரிந்தது. முன்னாள் மத்திய அமைச்சர், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர், ஜெகஜீவன் ராமுடன் காங்கிரஸிலிருந்து வெளியேறி, ஜனதா கட்சியில் இணைந்தவர். மூத்த தலைவர். எனக்கு நன்றாகத் தெரிந்தவர். உரிமையுடன் அவரது அறையின் அழைப்பு மணியை அழுத்தினேன்.

அவரே கதவைத் திறந்தார். அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. என்னை முறைத்துப் பார்த்தபடி உள்ளே வந்து அமரச் சொன்னார். நாற்காலியில் நான் அமர்ந்ததுதான் தாமதம், கோபாவேசமாகப் பேசத் தொடங்கினார். அவர் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்துபோய், திகைப்பில் 
சமைந்தேன்!

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT