தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தர்ப்பைப்  புல்லின் மருத்துவ குணங்கள்!

10th Jan 2021 06:00 AM | பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT

 

தியானப் பயிற்சியில் ஈடுபடும் என் சகோதரர் எப்போதும் தர்ப்பைப் பாயில் அமர்ந்துதான் தியானம் செய்கிறார். தர்ப்பைப் பாய் அத்தனை நல்லதா? தர்ப்பையை உள்ளுக்கும் பயன்படுத்தலாமா? அதன் மருத்துவகுணங்கள் பற்றி ஆயுர் வேதத்தில் குறிப்புகள் உள்ளனவா?

சம்பந்தம், கரூர்.

தீவிரமான தியானப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் தர்ப்பைப் பாயைப் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுகிறார்கள். மனதை ஒரு நிலைப்படுத்துவதையும், உடற்சூட்டைக் குறைப்பதிலும் தர்ப்பைப் புல் பெரிதும் உதவுகிறது. அதிலிருந்து வரும் மந்தமான நறுமணம் மனதில் களிப்பூட்டுகிறது. தரையிலுள்ள சில்லிப்பை தான் வாங்கிக் கொண்டு, உடலுக்குத் தேவையான குளிர்ச்சியை மட்டும் அணிந்திருக்கும் துணி வழியாக தோலுக்குச் செலுத்துகிறது. நூலால் கோர்க்கப்பட்டு, ஓரங்களில் துணியால் தைக்கப்பட்டு, அதன் கட்டு அவிழ்ந்துவிடாமலிருக்கும் வகையில் நல்ல தரமான தர்ப்பைப் பாய்கள் சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பகுதி சுற்றுவட்டாரத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

கோப தாபங்களைக் கூட்டும் ரஜஸ் மற்றும் எதிலும் அலுப்பு சலிப்பு எண்ணத்தைத் தூண்டிவிடும் தமஸ் எனும் மனோதோஷங்களை அடக்கி, ஸத்வம் எனும் மனதில் உயர்ந்த குணத்தைத் தூண்டி, நல்வழிப்படுத்துவதில் பெரும் உபகாரமானதாக தர்ப்பைப் பாயில் அமர்வதின் வழியாகவே நாம் பெற முடியுமென்றால், அதன் உட்புற உபயோகம் எத்தனையோ நன்மைகளைச் செய்யக் கூடியதாகத்தான் இருக்க முடியும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு தர்ப்பைப் புல் ஒரு வர பிரசாதமாகும். பதினைந்து கிராம் புல்லை சுமார் ஒரு லிட்டர் தண்ணீர் போட்டுக் காய்ச்சி அரை லிட்டராக அது வற்றியதும் வடிகட்டி, ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாக அருந்துவதன் மூலம், சர்க்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று அஷ்டாங்கஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது. சிறுநீரின் வழியாக வெளியேறும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தப்படும் சிறப்பு இதற்குண்டு.

பாவபிரகாசர் எனும் முனிவர் தர்ப்பைப்புல் பற்றிய வர்ணனையில் மூவகை தோஷங்களாகிய வாத - பித்த- கபங்களைச் சமநிலைப்படுத்துகிறது. நல்ல குளிர்ச்சியான வீரியமுடையது. சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடையை நீக்குகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதைத் தடுப்பதுடன் ஏற்பட்டுள்ள கற்களையும் கரைத்து வெளியேற்றுகிறது. சிறுநீர்ப்பையில் ஏற்படும் வலியை நீக்குகிறது. தண்ணீர் தாகத்தைக் குறைக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப் போக்கை மட்டுப்படுத்துகிறது என்றெல்லாம் அதன் மருத்துவ மகத்துவத்தைப் புகழ்கிறார்.

நாணல், தர்ப்பை, கரும்பு, நெல், பேய்க்கரும்பு இவற்றின் வேர்களை ஒன்று சேர்த்தால் அதற்கு த்ருணபஞ்சமூலம் என்று பெயர். பெருந்தூளாக இடித்து, அறுபது கிராம் மொத்தமாக எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி, காலையில் 125 மி.லி. , மாலையில் 125 மி.லிட்டர் என வெறும் வயிற்றில் சாப்பிட, உடலில் ஏற்படும் ரத்தக் கசிவு உபாதையைக் கட்டுப்படுத்தும். பித்தத்தால் ஏற்படும் காய்ச்சல், நா வறட்சி, நீர்க்கடுப்பு, அதிக அமிலத்தன்மையால் ஏற்படும் உணவுக்குழாய் எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

சுகுமாரம் எனும் ஆயுர்வேத நெய் மருந்தில் தர்ப்பைப் புல் சேர்க்கப்படுகிறது. இந்த நெய் மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்த உடல் வனப்பையும், புஷ்டியையும் அது கூட்டுகிறது. குடலிறக்கம், உட்புறக் கட்டிகள், குல்மம் எனும் வாயு உபாதை, மூலம், பிறப்புறப்பு நோய்கள், வாயு உபாதைகள், வீக்கம், உதரம் எனும் வயிற்றில் ஏற்படும் நீர்த்தேக்கம், மண்ணீரல் உபாதை, மலச்சிக்கல் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

தர்ப்பையை வெளிப்புறமாகவும், உட்புறமாகவும் பயன்படுத்தி நம் உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வோம்.

(தொடரும்)

,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT