தினமணி கதிர்

தொழில்முனைவோராகும் மாற்றுத் திறனாளிகள்!

21st Feb 2021 06:00 AM | வே.சுந்தரேஸ்வரன்

ADVERTISEMENT


கோடிக்கணக்கான மனிதர்கள் வாழும் இந்தப் பரந்து விரிந்த பூமிப்பந்தில் மனிதநேயம் என்பது அரிதாகி வருகிறது. பெருநகர் சாலைச் சந்திப்புகளில் ஆங்காங்கே உடலும், மனமும் பாதிக்கப்பட்டு வாழ்க்கைக்காக போராடும் சகமனிதர்களைப் பார்க்கும் போது பலரும் முகத்தைத் திருப்பிக் கொள்வதும், "அய்யோ பாவம்' என்று கூறிவிட்டு நகர்வதும் அன்றாடக் காட்சி. வெகு சிலர் மட்டுமே சில ரூபாய் தாள்களை பரிதாபப்பட்டு கொடுத்துவிட்டு செல்வதைக் காணலாம். யதார்த்த சூழல் இப்படியிருக்கும் நிலையில், பார்வைத் திறனற்ற, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறன்மிக்கவர்களை தொழில்முனைவோராக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒருவர் செயல்படுகிறார் என்றால், நம்மில் பலருக்கும் வியப்பைஏற்படுத்தக் கூடும். அவர்தான் தில்லியைச் சேர்ந்த 35வயதானஆகாஷ் பரத்வாஜ்.

தெருவில் பலூன் விற்ற, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் துயர்நிலை கண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி அளிப்பதற்காகவே"காஸ்' எனும் டிராவல்ஸ் ஏஜென்ஸி நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் இந்த இளைஞர். பொது முடக்கத்தால் ஏற்பட்ட சுற்றுலாத் தொழில் பாதிப்பால் சில காலம் அலுவலகத்தைமூடியிருந்த இவர், தற்போது மீண்டும் நொய்டாவில் அலுவலகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

"காஸ்' நிறுவனம் தொடங்கியதன் நோக்கம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

""எனது பூர்வீகம் உத்தர பிரதேச மாநிலம், மீரட் நகரமாகும். பி.ஏ. பட்டப் படிப்பு முடித்துள்ளேன். தொடக்கத்தில் கால்சென்டரில் வேலை செய்தேன். எனது திருமணத்திற்குப் பிறகு சுற்றுலாத் தொழிலில் ஃப்ரீலான்ஸராக ஈடுபட்டு வந்தேன். டிராவல் டூரிஸம் குறித்து தொழில்முறையாக நான் படிப்பு ஏதும் முடிக்கவில்லை. அந்தந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று நேரில் ஆய்வு செய்து கற்றுக் கொண்டேன். இந்தச் சூழலில், 2015-இல் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பு நண்பர்கள் சிலருடன் கடைக்குப் பொருள்கள் வாங்குவதற்காக தில்லியில் உள்ள லாஜ்பத் நகருக்கு சென்றேன். அங்கு தெருவில் பெண் ஒருவர் மிகவும் நயமாகப் பேசி பலூன்களை விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவருடன் கையில் ஒரு குழந்தையும், அருகில் ஒரு சிறுவனும் இருப்பதைப் பார்த்தேன். அவரது பேச்சு சாதுர்யம், அணுகும் முறை ஆகியவை காரணமாக பலரும் பலூன்களை பேரம் பேசாமல் விலைக்கு வாங்கிச் சென்றனர். நானும் அவரிடம் அணுகி பலூன் வாங்குவதுபோல் அவர் பற்றி விசாரித்தேன்.

ADVERTISEMENT

அவர் முகத்தில் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட தழும்புகள் இருப்பது தெரிய வந்தது. அதை மறைப்பதற்காக முகத்தை துணியால் மூடிக் கொண்டு அந்தப் பெண் பலூன் விற்பதும் தெரிய வந்தது. தனது பக்கத்துவீட்டு இளைஞரால் ஏதோ ஒரு பிரச்னையில் அமில வீச்சால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் மேலும் விசாரித்த போது பெரிய நிறுவனத்தில் செக்யூரிட்டி பொறுப்பாளராக ரூ.28 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்து வந்த அந்தப் பெண், அமில வீச்சால் முகம் சிதைவுற்ற பிறகு வேலை பறிபோனதும், கணவரால் கைவிடப்பட்டதும் தெரிய வந்தது.

இதுபோன்ற நபர்களுக்கு உணவு கொடுப்பது, நன்கொடை அளிப்பதையும் விட அவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து தொழில்முனைவோராக அவர்களை மாற்றுவதுதான் அவர்களுக்கு உண்மையில் உதவுவதாகவும் என்று எனக்குத் தோன்றியது.

இதன் காரணமாகவே, "காஸ்' (ஹிந்தியில் சிறப்பு எனும் பொருள்) டிராவல் ஏஜென்ஸி எனும் நிறுவனத்தைத் தொடங்க நினைத்தேன். இதற்கான பொருளாதார வசதி போதுமான நிலையில் என்னிடம் இல்லை. இந்த நிலையில், எனது நல்ல நோக்கத்திற்கு உதவும் வகையில் எனது மனைவி அவரது நகைகளைக் கொடுத்து உதவினார். இதன் பிறகு லட்சுமி நகரில் காஸ் நிறுவனத்தை 2016-இல் தொடங்கினேன். பார்வைத் திறன் குன்றிய, அமிலவீச்சால் பாதிக்கப்பட்டவர் உள்ளிட்ட 5 பெண்களுக்குப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை அளித்தேன். தொடக்கத்தில் அலுவலகம் நடத்துவதில் பணப் பிரச்னை ஏற்பட்டது. இதற்காக எனது பைக் முதற்கொண்டு எல்லாவற்றையும் விற்கும் நிலை ஏற்பட்டது. எனினும், பின்னர், பணச் சுமை குறையத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளை பல்வேறு அமைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். இதுவரை 150 பேருக்கு டிராவல்ஸ் ஏஜென்சி நடத்துவது தொடர்பான பயிற்சியை அளித்துள்ளேன். "ஐகாங்கோ' நிறுவனம் போன்ற பல அமைப்புகள் இதற்காக என்னைப் பாராட்டின. இது போன்ற சில ஊக்குவிப்புகள், விருதுகள் வாயிலாக எனது பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

எனது நிறுவனம் என்ஜிஓவாக இருந்தால் பணம், நிதி உதவி அளிப்பதாகக் கூறுகின்றனர். இதுபோன்ற நபர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஆரம்பிக்கின்றனர்.

ஆனால், அந்த நிறுவனங்கள்தான் வளர்கின்றனவே தவிர, மாற்றுத் திறனாளிகளின் நிலைமையில் உரிய வளர்ச்சி இருப்பதாக நான் கருதவில்லை. மாற்றுத் திறனாளிகள் அகர்பத்தி, மெழுவர்த்தி செய்வதுடன் மட்டுமே நின்றுவிடுகின்றனர். இதையும் தாண்டி பல்வேறு பணிகளை அவர்களால் திறன்மிக்க வகையில் செய்ய முடியும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். மேலும், உலகில் சுற்றுலா, பயண ஏற்பாடு தொழிலில் அதிகமான மாற்றுத்தினாளிகள் பணியாற்றும் முதல் நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியமாகும்.

கரோனா பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத் தொழிலில் வருவாய் நின்றுவிட்டது. இதனால், எனது அலுவலகத்தை சாகேத் பகுதிக்கு மாற்றினேன். என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் அவர்களது வீட்டில் இருந்து இணையதளம் வாயிலாக தொழில் செய்து வந்தனர். தற்போது நொய்டாவில் எனது அலுவலகத்தை ஓரிரு வாரங்களுக்கு முன்புதான் தொடங்கியுள்ளேன்.மாதத்திற்கு குறைந்தபட்சம் 20 பேருக்கு சுற்றுலாத் தொழில் மேற்கொள்வதற்கான பயிற்சியை அளிக்க விரும்புகிறேன். இதற்கான பயிற்சி மையத்தை பெரிய கட்டடத்தில் தில்லியில் தொடங்க வேண்டும். தில்லிக்கு வந்து பயிற்சி பெறுவதைவிட அவரவர் பகுதியில் இருந்து பயிற்சி பெற்று தொழில் தொடங்கும் வகையில் பல இடங்களிலும் கிளைகள் அமைக்க வேண்டும். இதுதான் எனது தற்போதைய விருப்பம். என்னுடைய பணிக்கு எனது மனைவியும், தந்தையும் ஆதரவு அளித்து வருகின்றனர். இது எனது பணியை மேலும் செய்வதற்கு ஊக்குவிப்பாக உள்ளது'' என்கிறார் தன்னம்பிக்கை இளைஞர் ஆகாஷ்.

இவரிடம் பயிற்சி பெற்று சுயமாகப் பணியாற்றி வரும் அன்னபூர்ணா கூறுகையில், ""நான் தில்லி, வெங்கடேஸ்வரா கல்லூரியில் பி.ஏ. படித்துள்ளேன். எனக்கு ஒரு கண்ணில் பார்வைத் திறன் குறைபாடு உள்ளது. சுற்றுலா தொழில் முனைவுப் பயிற்சியை ஆகாஷ் சாரிடம் பெற்றேன். அதன் பிறகு, சிறிது காலம் அவரிடம் பணியாற்றினேன். அதன் பிறகு தற்போது "அன்னபூர்ணா நியூ டிராவல்ஸ்' எனும் பெயரில் சுயமாக தொழில் செய்து வருகிறேன். பொது முடக்கம் காரணமாக தொழில் செய்ய முடியவில்லை.

தற்போது மீண்டும் சுற்றுலாத் தொழிலுக்கான வாய்ப்புகள் ஆரம்பித்துள்ளன. அண்மையில் 25 பேர் கொண்ட குழுவை மணாலிக்கு அழைத்துச் சென்று வந்தேன். இதுபோன்று தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன்.

என்னைப் போன்ற பலருக்கும் இந்தத் தொழிலைப் பயிற்றுவித்து அவர்களை தொழில் முனைவோராக்க விரும்புகிறேன்' என்றார்.

படங்கள்: டி.ராமகிருஷ்ணன்

Tags : தொழில்முனைவோராகும் மாற்றுத் திறனாளிகள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT