தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குழந்தை பிறந்த பிறகு...!

எஸ். சுவாமிநாதன்

எனக்குக் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அது முதல் இடுப்புப் பிடிப்பு, மென்னி பிடிப்பு, உடல் வீக்கம், தலைவலி, மார்பு வலி, முதுகுவலி, சளி, இருமல், பசியின்மை என்றெல்லாம் கஷ்டப்படுகிறேன்.  தாய்ப்பால் கொடுக்க குழந்தையை மடியில் வைத்துக் கொள்ளவும் கஷ்டப்படுகிறேன்.  இவை நீங்க வழி என்ன?

செளமியா, பள்ளிக்கரணை, சென்னை.

கேரளத்தில் பல இடங்களிலும் பெண் பிரசவித்தவுடன் ஆயுர்வேத மருந்துகளைக் கொடுப்பது என்பதை வழக்கத்தில் கொண்டு வந்துள்ளனர். தான்வந்திரம் கஷாயத்தை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதையும், செளபாக்யசுண்டி என்ற லேகியத்தை ஜீரணம் சரி வர நடப்பதற்காக, சுமார் 5 கிராம் காலை, இரவு உணவிற்கு அரை மணி முன் நக்கிச் சாப்பிடுவதையும், ஜீரகாத்யாரிஷ்டம் எனும் மருந்தை 30 மி.லி. காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடுவதையும் பழக்கமாக்கி, உடலில் ஏற்படும் பல வாயு உபாதைகளையும், நரம்புத் தளர்ச்சியையும் நீக்கிவிடுவர்.  தமிழகத்தில் இதுபோன்ற சிகிச்சைமுறையை அனுசரிப்பது வழக்கத்தில் இல்லை.  மேலும் தான்வந்திரம் எனும் தைலத்தை இளஞ்சூடாக உடலில் தேய்த்துவிட்டு , அரை - முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரால் குளிப்பாட்டி விடுவதும் வழக்கத்தில் உள்ளது.    இதனால் உடல் வலி நீங்குவதுடன், உடலில் புதுத்தெம்பும், உற்சாகமும் ஏற்படும். 

தங்களுக்கு ஏற்பட்டுள்ள உபாதைகளை நீக்குவதற்கு தசமூலம் என்று பிரசித்தமாக உள்ள பத்து கஷாயச் சரக்குகள் பயன்படும். இவை ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கஷாயமாகவே கிடைக்கும்.  சிறிது சிவப்பு காணும் வரை லேசாக வறுத்த புழுங்கலரிசி ஒரு பங்கு,  தண்ணீர் இருபது பங்கு ஊற்றி அதைக் கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் கால் பங்கு சுண்டும்வரை கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டி, அதில் 15 மி.லிட்டர் தசமூலம் கஷாயத்தைக் கலந்து, ருசிக்காக சிறிது இந்துப்பு சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் முதல் உணவாகக் குடிக்கவும்.  மிக எளிதில் ஜீரணமாகும். மார்பில் கபம் கட்டுவதால் ஏற்படும் மூச்சுத் திணறல், இருமல் முதலியவை குணமாகும்.  மூளைக் கொதிப்பைக் குறைக்கும்.  திடீரென வியர்த்து உடல் சோர்வு அடையும் நிலைகளில் மிகவும் நல்லது.  நீங்கள் குறிப்பிடுவதுபோல் ஏற்படும் இடுப்பு பிடிப்பு, மென்னி பிடிப்பு, உடல் வீக்கம், தலைவலி, மார்பு வலி, முதுகுவலி குணமாகும். அதனால் பிரசவித்த பெண்கள் இந்தக் கஞ்சியை சுமார் ஒருவாரம் சாப்பிட, நல்ல ஆரோக்கியம் பெறலாம். 

முதல் மூன்று நாட்கள் இவ்வாறு பயன்படுத்திய பிறகு, அடுத்த மூன்று நாட்களுக்கு கஞ்சியை வடிகட்டாமல், பருக்கையுடன் கஷாயம் 15 மில்லி லிட்டர் கலந்து குடிக்க,  அது அதிக சத்துள்ளதாகும். அதற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு பயற்றம் பருப்பு, கறுப்பு கொண்டைக் கடலை, துவரம்பருப்பு, பச்சைப் பயறு சேர்த்த கஞ்சி தயாரித்து வடிகட்டி, சூடு ஆறாத நிலையில், சுமார் 85 மி.லி. பசும்பால் மற்றும் 15 மி.லி. கஷாயம் கலந்து சிறிது கல்கண்டு பொடித்துக் கலந்து சாப்பிட, உடல் வாட்டமானது குறைந்து புதுத்தெம்பும் உற்சாகமும் ஏற்படும். 

தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு ஏற்படும் பல உபாதைகளையும் நீங்கள் நீக்கலாம். முன் குறிப்பிட்ட தான் வந்திரம் கஷாயம், அரிஷ்டம் லேகியம்,  தைலத் தேய்ப்பு ஆகியவற்றின் வழியாகவும் நீங்கள் நன்மை  பெறுவதுடன், குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாய்ப்பால் வழியாக வளர்த்துவிடுகிறீர்கள்.  அடுத்த பிரசவத்திற்கான கருப்பையின் வலுவையும் மாதவிடாய் மறுபடியும் சரியான நேரத்தில்  ஏற்படும்படியான நிலையையும் இவை மூலம் நீங்கள் பெறலாம். ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகளைச் சாப்பிடும் முறையும் சிறந்ததே.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT