தினமணி கதிர்

அறிவுரை  

ரமாமணி சுந்தா்

அந்த புத்தம் புதிய சிவப்பு நிற மாருதி கார் வீட்டு வாசலில் வந்து நின்ற உடனேயே அது எனது மகள் அனிதாவினுடையது என்று கண்டுபிடித்துவிட்டேன். திருமணமாகி உள்ளூரில் குடியிருக்கும் அவள், ஏதாவது சாக்கு வைத்துக் கொண்டு இப்படித்தான் அடிக்கடி வந்து கொண்டிருப்பாள். திருமணம் ஆகி ஓராண்டு கூட ஆகவில்லை என்பதால் இன்னமும் பிறந்த வீட்டு ஒட்டுதல் குறையவில்லை. ஆனால் பன்னாட்டு நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் அவள் அலுவலக நாளன்று இப்படி காலையில் வந்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரிலிருந்து அவள் பெட்டியும் கையுமாக வந்திறங்கியதைப் பார்த்தவுடன், எனக்கு ஏற்பட்ட ஆச்சரியம் அதிர்ச்சியாக மாறியது. அதற்காக வீட்டிற்கு வந்த மகளிடம் ""எதற்கு வந்திருக்கிறாய்?'' என்றா கேட்க முடியும்? வாசல் திண்ணையில் உட்கார்ந்து செய்தித்தாளில் மூழ்கியிருந்த என் கணவருக்கோ செல்ல மகளைக் கண்டதும் பரம சந்தோஷம்.
வீட்டிற்குள் நுழைந்து தனது அறையில் பெட்டியையும் பையையும் வைத்த அனிதா,""ரொம்ப பசிக்கிறது. சீக்கிரம் ஏதாவது சாப்பிடக் கொடுங்கள். ஆபீசுக்கு நேரமாகிறது'' என்று வந்ததும் வராததுமாய் என்னை விரட்டினாள்.
நான் சுடச் சுட செய்து போட்ட தோசையைச் சாப்பிட ஆரம்பித்த அவளிடம் ""என்ன ஏதாவது ஆபீஸ் டூரா? பெட்டியும் கையுமாக வந்திருக்கியே?'' என்று மெதுவாக பேச்சுக் கொடுத்தேன். நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் தோசையை விழுங்கிக் கொண்டிருந்தாள் அவள் .
""சாப்பிட விடாமல் அவளை ஏன் தொண தொணன்னு கேள்வி மேல கேள்வி கேட்கிறே?'' என்று என்னை அதட்டினார் என் கணவர்.
அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து விட்டு காரில் ஏறப் போன மகளிடம், ""ஆபிசிலிருந்து எப்போ வருவே?'' என்று மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு அவளிடமிருந்து ஏதாவது விஷயம் வருகிறதா என்று சோதித்துப் பார்த்தேன். அதற்கு பதில் சொல்லாமல், ""சாயங்காலம் வந்து சாவகாசமாக உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்றேன். நான் இனிமேல் இங்கேதானே இருக்கப் போறேன்'' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு புறப்பட்டுப் போய்விட்டாள் அனிதா.
அதைக் கேட்ட எனக்கோ நெஞ்சு பட படவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. அவள் சொன்னதற்கு என்ன அர்த்தம்? புகுந்த வீட்டில் ஏதாவது தகறாரா? இல்லை கணவனுடன் மனஸ்தாபமா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று ஒரே குழப்பமாக இருந்தது. அன்று முழுவதும் எனக்கு வேறு எதிலும் மனம் லயிக்க வில்லை. அனிதாவைப் பற்றிய சிந்தனையாகவே இருந்தது.
அனிதா எங்களுக்கு ஒரே குழந்தை என்பதால் அவளை மிகவும் செல்லமாக வளர்த்தோம். அதனால் அவள் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. சிறு வயதிலிருந்தே அவள் படிப்பில் மட்டுமல்லாது, பேச்சுப்போட்டி, பொதுஅறிவுப் போட்டி போன்ற அறிவு சார்ந்த போட்டிகளிலும், கூடைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளிலும் பரிசுகளை தட்டிச் சென்று கொண்டிருந்தாள். அவளது வாதாடும் திறமையினால் பள்ளிகளுக்கிடையே நடக்கும் விவாத மேடைகளில் தொடர்ந்து பல ஆண்டுகள் அவள் தனது பள்ளிக்காக கேடயம் வென்று பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலைப் பெற்றாள். பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் பொழுது அனிதா மாணவிகளின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். நல்ல மதிப்பெண்களுடன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அவளுக்கு தில்லி பல்கலைக்கழகத்தின் புகழ் பெற்ற கல்லூரியில் வெகு சுலபமாக இடம் கிடைத்தது.
விஞ்ஞானிகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த அவளுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வேதியியலில் இளங்கலை, முதுகலை, என்று படித்து வெளிநாட்டிற்குச் சென்று ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும் என்பது அவள் அவா. அதுவே எங்களது விருப்பமும் கூட. திட்டமிட்டபடியே இளங்கலை பட்டப் படிப்பு வரையில் எல்லாமே சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. முதுகலை பட்டப்படிப்பிற்காக கல்லூரியில் சேர்ந்து இரண்டு - மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்காது திடீரென்று ஒரு நாள், ""நான் எனது எம் எஸ்சி படிப்பை விட்டு விடப் போகிறேன்'' என்று அறிவித்தாளே பார்க்கணும். நானும் என் கணவரும் ஆடிப் போய் விட்டோம்.
""அவனவன் காலேஜில் இடம் கிடைக்காமல் தவிக்கிறான். நீயானால் கிடைத்த அட்மிஷனை விடப் போகிறேன் என்கிறாயே?'' என்று கேட்ட என் கணவரிடம், துளிகூட தயங்காமல் ""எம் எஸ்சி, பி எச் டி எல்லாம் முடித்து வேலை கிடைக்க குறைந்தது இன்னும் ஐந்தாறு ஆண்டுகளாவது ஆகும். நாங்க இரண்டு பேரும் அதுவரை காத்திருக்கத் தயாராக இல்லை'' என்று பதிலளித்தாள் எங்கள் அருமை மகள்
""அது யாரடி அந்த இரண்டு பேரும்?'' என்று நாங்கள் இருவரும் ஒரே குரலில் கேட்டோம், ""அதான் நானும் என்னுடன் படிக்கிறானே மனோஜும். நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நாங்கள் ஒருவரையொருவர் விரும்பறோம்'' என்று சர்வ சாதாரணமாக பதிலளித்தாள்.

அதைக் கேட்ட எங்கள் இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

""யாருடி மனோஜ், அந்த பஞ்சாபி பையனா? யாரைக்கேட்டு இந்த முடிவெடுத்தாய்? பெரியவா நாங்க இருக்கோம். நீயாகவே எல்லாத்தையும் தீர்மானித்து விடுவாயா? ஒரே குழந்தைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாய் போய்விட்டது'' என்று எனது உள்ளக் குமுறலை கொட்ட ஆரம்பித்தேன். எதிலுமே நிதானத்தைக் கடைப்பிடிக்கும் என் கணவரோ என்ன சொல்வது என்று தெரியாமல் மெளனம் சாதித்தார்.

அதற்குப் பிறகு எங்களுக்கும் எங்கள் மகளுக்குமிடையே வாக்குவாதங்கள் மாதக்கணக்கில் தொடர்ந்தன. தான் நினைத்ததை சாதிப்பதில் குறியாக இருந்த அவள் எங்கள் அறிவுரையையும் மீறி முதுகலைப் படிப்பை விட்டுவிட்டு மேலாண்மைப் பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்ய ஆரம்பித்தாள். மனோஜும் அவளும் அதற்கான பயிற்சி மையத்திற்கு ஒன்றாகப் போய் வர ஆரம்பித்தார்கள் என்ற விஷயமும், மேலாண்மைப் படிப்பு இரண்டு வருடங்களில் முடிந்து விடும் என்பதனாலும், படித்து முடிக்கும்போதே இருவருக்கும் வேலை கிடைத்துவிடும் என்பதனாலும் அவர்கள் இருவருமாக இந்த முடிவை எடுத்தார்கள் என்ற விவரங்களெல்லாம் பெற்றோர்களான எங்களுக்குப் புரிய அதிக நாட்கள் ஆகவில்லை.

அவள் மனோஜை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தைக் கைவிட வைக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன்; ஆனால் அவளோ தனது முடிவில் மிகவும் உறுதியாக இருந்தாள். அந்தப் பையன் நமக்கு சரிவராது என்று நான் செய்த ஒவ்வொரு வாதத்திற்கும் அவள் எதிர்வாதம் வைத்திருந்தாள்.

""அவர்கள் பஞ்சாபிக்காரர்கள். அவர்கள் கலாசாரம், பழக்க வழக்கங்கள் எல்லாம் வேற மாதிரி இருக்கும். உன்னால் எப்படி அவர்கள் வீட்டில் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும்?'' - இது நான் வைத்த முதல் வாதம் ""தில்லியிலே பிறந்து வளர்ந்த நான் எந்த விதத்தில் ஒரு தமிழச்சி? எனக்கு தமிழ் எழுத படிக்கக் கூட தெரியாது. என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வடஇந்தியர்கள். நான் விரும்பி சாப்பிடுவதோ சப்பாத்தி, சப்ஜி. எனக்கென்ன பிரச்னை வரப்போகிறது?'' என்று பதிலளித்து, நான் அவளை ஒரு தமிழ்ப் பெண்ணாக வளர்க்காதது என் தவறோ என்று எனக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்தினாள்.

""மனோஜ் உனக்கு பொருத்தமானவனாக எங்களுக்குத் தோன்றவில்லை. நீ படிப்பில் அவனை விட கெட்டிக்காரி. பர்சனாலிட்டி, ஸ்மார்ட்னஸ், தன்னம்பிக்கை என்று எல்லாவற்றிலும் உன்னைவிட அவன் ஒரு படி குறைவாகத்தான் இருக்கான். உனக்கு இப்போ காதல் கண்ணை மறைக்கிறது. கல்யாணத்திற்குப் பிறகு உங்கள் இருவருக்குமிடையே ஈகோ பிரச்னைகள் உண்டாகலாம்'' என்று அவளை எச்சரித்தேன்

""மேலும் நம்ப வீட்ல படிப்பு தான் ரொம்ப முக்கியம். உனக்கும் மேல மேல படிக்கணும்னு ஆசை. அவர்கள் வீட்டுப் பெண்கள் அதிகம் படிக்கலை. ஒருவரும் வேலைக்கும் போவதில்லை. எப்பொழுதும் கிட்டி பார்ட்டி, பேஷன், நகை நட்டு, டிசைனர் உடைகள் என்று அவர்கள் லைஃப் ஸ்டைலே வேறாக இருக்கிறதே? அந்தக் குடும்பத்திற்கும் உனக்கும் ஒத்து வருமா?'' என்று எனக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டை வெளிப்படுத்தினேன். ஆனால் அவளோ அதற்கு ""நான் மனோஜைத்தானே கல்யாணம் பண்ணிக்கப் போறேன், அவன் குடும்பத்தை இல்லையே'' என்று படு அலட்சியமாகப் பதிலளித்தாள்.
மகளுடன் விவாதித்து அலுத்துப் போன நான், என்னுடைய கடைசி அஸ்திரத்தை எடுத்து விட்டேன். ஒரு நல்ல தருணத்தில் எனது மகள், மற்றும் மனோஜை உட்கார்த்தி வைத்து, ""உங்களுக்கு இப்பொழுதான் இருபத்தியொரு வயதாகிறது. இன்னும் கொஞ்ச காலம் காத்திருந்து நன்கு யோசித்து முடிவெடுங்கள். நாளைக்கே வேலைக்கு போக ஆரம்பித்து, உங்களுக்கு இன்னும் மெச்சூரிட்டி வரும் பொழுது உங்கள் எண்ணங்கள் மாறும். வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கருத்துகள், புரிதல் எல்லாம் மாறலாம். எனக்கென்னவோ நீங்கள் அவசரப்பட்டு முடிவெடுக்கிறீர்கள்னு தோன்றது'' என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். எதற்கும் மசியவில்லை அவர்கள்.

என்னதான் இருந்தாலும் அனிதா எங்களுடைய ஒரே மகள். எங்களால் அவள் ஆசைக்கு எதிராகச் செயல்பட முடியவில்லை. சொல்லப்போனால் அவளது முடிவை ஏற்றுக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியும் இல்லை. ஆரம்பத்தில் அந்தத் திருமணத்தில் அவ்வளவாக விருப்பம் இல்லையென்றாலும், எங்களது அருமை மகளுக்கு நாங்கள் ஒரு குறையும் வைக்கவில்லை. பஞ்சாபி முறைப்படி, நமது தமிழ் நாட்டு சம்பிரதாயப்படி என்று ஏகமாக பணம் செலவழித்து தடபுடலாக திருமணத்தை நடத்தினோம். இப்பொழுது திருமணமாகி ஓராண்டிற்கு மேல் ஆகி விட்டது. மகளின் திருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம்... இன்று காலை அவள் அப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடும் வரையில்.
மாலையில் அவள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வரை ஒவ்வொரு நிமிடமும் எனக்கு ஒரு யுகமாகக் கழிந்தது. நானும் என் கணவரும் வாய்விட்டு பேசிக்கொள்ளவில்லை என்றாலும், நாள் முழுவதும் எங்கள் இருவரையும் இதே சிந்தனைதான் வாட்டிக் கொண்டிருந்தது. வந்ததும் வராததுமாக அவளை தொந்தரவு செய்யாமல் அவளாக பேச்சை ஆரம்பிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்தோம்.
""அம்மா! என்னால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. எனக்கு அங்கே மூச்சுத் திணறுகிறது'' என்று ஆரம்பித்தாளே பார்க்கணும், எங்கள் மகள்.
""என்னடி புதுசா சொல்லறே! கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனையோ தடவை வந்தாயே, ஒரு தடவை கூட ஒண்ணும் சொல்லலையே?'' என்று நான் கேட்டதற்கு ,
""உங்களிடம் சொல்லி உங்களை வருத்தப்பட வைக்க வேண்டாம்னு நான் எல்லாம் சரியாக இருக்கிறாற்போல் நடிச்சேன்'' என்று அவள் அளித்த பதில் எங்களை உலுக்கியது.
""நான் என்ன பேசினாலும் அவர்களுக்கு தப்பாகவே படுகிறது. மனோஜைவிட அதிகம் சம்பாதிக்கிறேன் என்ற திமிர் என்று சொல்லி என் வாயை அடைத்து விடுகிறார்கள், என் மாமியாரும், நாத்தனாரும். எனக்கு அந்த வீட்டில் ஒரு விதமான சுதந்திரமும் இல்லை''
""மனோஜ் ஒன்றும் சொல்வதில்லையா?'' என்று நான் கேட்டதற்கு , ""தன் அம்மா அப்பா முன்னாடி அவன் வாயைத் திறக்கமாட்டேன்கிறான். அவனுக்கும் சரியான இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்'' என்று அவனைப் பற்றியும் குற்றப் பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தாள்.
மேலாண்மை பட்டப் படிப்பை முடிப்பதற்குள்ளேயே இருவருக்கும் கேம்பஸ் நேர்காணல் மூலம் வேலை கிடைத்து விட்டது. நாங்கள் எதிர்பார்த்தபடியே எங்கள் மகளுக்கு மனோஜைவிட பெரிய நிறுவனத்தில் அதிக வருமானத்தில் வேலை கிடைத்தது. அந்த வேலையில் சேர்ந்து ஆறே மாதத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் அதைவிட அதிக சம்பளத்தில் மிகவும் பொறுப்பான வேலை ஒன்று அனிதாவிற்கு கிடைத்தது. அவள் தகுதிக்கான அங்கீகாரம் என நாங்கள் பெருமைப்பட்டோம். ஆனால் அவள் புகுந்த வீட்டிலோ இதன் காரணமாக ஒரு பூகம்பமே வெடித்துள்ளது என்பது அனிதா சொல்லச் சொல்லத்தான் எங்களுக்குத் தெரிந்தது.
""இப்போ இருக்கிற வேலையே உனக்குப் போதும். ஏற்கெனவே உனக்கு நிறைய சம்பாதிக்கறோம்னு திமிர். வீட்டு வேலை ஒன்றும் செய்யறதில்லை. செய்யவும் தெரியலை. என் பெண்களைப் பார். எத்தனை பேர் வந்தாலும் விருந்தே சமைத்து விடுவார்கள். ஒழுங்கா வீட்டு வேலையெல்லாம் கத்துக்கோ'' என்று புதிய வேலை கிடைத்த என் உற்சாகத்தில் மண்ணை வாரிப் போட்டார் என் மாமியார்.
தன்னுடைய படிப்பு, திறமை, கெட்டிக்காரத்தனம் ஒன்றையுமே மதிக்காமல், தன்னை பாராட்டாமல் தனக்கு சப்பாத்தி சுடத் தெரியாது, சப்ஜீ பண்ணத் தெரியாது என்று குறை கூறும் புகுந்த வீட்டினரின் மேல் அவளுக்கு கோபம் கோபமாக வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை .
""ஏற்கெனவே அவனை விட நான் அதிகம் சம்பாதிப்பதை ஜீரணிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மனோஜும் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு இந்த வேலையெல்லாம் வேண்டாம். இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டால் வீட்டைக் கவனிக்க முடியாது என்று சொல்லி என்னை தடுக்கப் பார்த்தான். நான்தான் ஒரே பிடிவாதமாக இந்த பன்னாட்டு நிறுவன வேலையில் சேர்ந்தேன்'' என்றாள், எப்பொழுது மே தான் நினைத்ததை சாதித்திவிடும் அனிதா .
""நான் புதிய வேலையில் சேர்ந்தவுடன் ஆபீசில் லோன் கொடுத்தார்கள் என்று கார் வாங்கினேன் இல்லையா? அதற்கும் வீட்டில் ஒரே தகராறு. மனோஜ் மோட்டார் சைக்கிளில் ஆபீசுக்கு போகும்பொழுது நான் மட்டும் காரில் போனால் அவர்களுக்கு அவமானமாம். அதனால் மனோஜிடம் காரை கொடுத்து விட்டு நான் ஆட்டோவிலோ மெட்ரோவிலோ தான் ஆபீஸ் போய் வருகிறேன்''
""கூட்டுக் குடும்பம்னா நாலும் இருக்கும். நீதான் கொஞ்சம் பொறுமையாக அட்ஜஸ்ட் பண்ணிண்டு போகணும்'' என்று நான் அவள் புலம்பலில் குறுக்கிட்டு புத்திமதி சொல்ல ஆரம்பித்தேன்.
அவளுடைய கோபம் இன்னும் அதிகமாகியது.
""எத்தனை அட்ஜஸ்ட் பண்றது? எனக்கு அவர்கள் பேச்சு நடத்தை ஒன்றுமே பிடிக்கலை. அவர்கள் வீட்டுப் பெண்கள் எப்பொழுதும் பிறர் வீட்டைப் பற்றிய வம்பு பேசுவது, இல்லைனா யார் எத்தனை லட்சத்திற்கு நகை வங்கியிருக்கா, யார் எந்த டிசைனர் கடையிலே எத்தனை ரூபாய்க்கு புடவை எடுத்திருக்கா, அடுத்த கிட்டி பார்ட்டிக்கு புதுசா என்ன டிரஸ் வாங்கலாம் இதேதான் பேச்சு. இந்த லட்சணத்திலே நான் அவர்களுடன் உட்கார்ந்து பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு வேறு. வர வர எனக்கு அவர்கள் பேச்சு மட்டுமல்ல, அவர்கள் வீட்டு சாப்பாடும் அலுத்துப் போகிறது; அதே டால் , அதே சப்ஜீ , அதே சுக்கா ரொட்டி.

மனோஜுக்கும் வேலையில் முன்னுக்கு வரணும், ஏதாவது சாதிக்கணும் போன்ற லட்சியங்கள் ஒன்றும் இல்லை. எப்போதும் டிவி பார்ப்பது இல்லைனா மொபைலை நோண்டுவது என்று பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறான். இருவரும் அமெரிக்காவிற்குச் சென்று மேலே படிக்கலாம் என்று சொன்னால், தன்னுடைய குடும்பத்தை விட்டு வெளிநாட்டிற்கெல்லாம் வரத் தயாராக இல்லை என்று சொல்லி விட்டான். இப்படி ஒரு வழிக்கும் வரலைனா நான் என்ன செய்வேன்? நான் அவசரப்பட்டு அவனைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டேன். என்னால் இனி ஒரு நாள் கூட அந்த வீட்டில் இருக்க முடியாது'' என்று "ஓ' வென்று கதறி அழ ஆரம்பித்தாள் சீரும் சிறப்புமாக வளர்ந்த எங்கள் அருமை மகள் .

ஏற்கெனவே நொந்து போய் வந்திருக்கும் என் மகளிடம், "இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் திருமணத்திற்கு முன்பே படிச்சுப் படிச்சு சொன்னேனே; நீ என் பேச்சை கேட்கவில்லையே?' என்று என்னால் சொல்ல முடியவில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT