காதலர் தினம்

வள்ளுவம் உணர்த்தும் காதல்!

இரா.அறிவழகன்

காதல் சிறப்பு

காதலும் வீரமும் பண்டைத் தமிழரின் அடிப்படைப் பண்பாடு என்றால் மிகையாகாது. அகம், புறம் என வாழ்வை வகைப்படுத்திய சங்கத் தமிழ் மரபு, அகத்தை என்று அகவாழ்வை களவு, கற்பு சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. அன்பின் ஐந்திணையின் காதல் செய்திகளெல்லாம் கவிதையாய், காட்சியாய் விரிகின்றன. சங்க மரபு தாண்டி சிற்றிலக்கியம், காப்பியங்கள் எனத் தொடரும் காதலைப் பேசும் கவி மரபு தெளிவு பெறுகிறது. சுட்டி ஒருவர் பெயரைச் சொல்லக் கூடாது, பெண் தன் காதலைக் கூறக் கூடாது என்றெல்லாம் இலக்கணம் தந்த பண்டைய இலக்கண மரபின் நீட்சியாய் திருக்குறள், காமத்துப்பால் எனத் தனி அதிகாரம் தந்து காதலை வளர்த்தெடுக்கிறது.

காதல் சிறப்புரைத்தல் எனும் காமத்துப்பாலின் ஐந்தாம் அதிகாரம் தகை அணங்குறுத்தல், குறிப்பறிதல், புணர்ச்சி மகிழ்தல், நலம் புனைந்துரைத்தல் என்பதைத் தொடர்ந்து வருகிறது. இறைவன் பொருட்டோ ஊழின் பொருட்டோ எதிர்ப்படுவதில் தொடங்கும் காதலை, காதலால் வரும் துன்பத்தைச் சொல்லித் தொடங்கும் காமத்துப்பாலில், காதல் சிறப்புரைத்தல் அதிகாரம் காதலன் காதலி இருவரும் தம் காதலின் மிகுதியைக் கூறும் இடமாக உள்ளது. இது புணர்ச்சிக்குப் பின்னும், அவரவர் நலம் உணர்ந்த பின்னும் சொல்லப்படுவதால் இவ்விடத்தில் வைக்கப்பட்டதாகப் பரிமேலழகர் விளக்கம் தருகிறார்.

சிறப்புமிக்கதே அதிகம் விரும்பப்படும். அவ்வகையில் காதலர் தம் சிறப்புமிக்க காதலை உணர்ந்துகொண்டு காதலில் திளைக்க வழி செய்கிறார் வள்ளுவப் பேராசான். காதலிக்காதவர்களுக்கு மிகச்சாதாரணமாகப் படுகிற செயல்களை, பொருட்களை காதலில் ஆழ்ந்வர்களின் உணர்வு கொண்டு காட்சிப்படுத்திக் காதலின் சிறப்பை உணர்த்துகிறார்.

பால் - தேன் கலவை

காதலின் மிக முக்கியமான அன்பு பரிமாற்றத்தில் முத்தத்திற்குப் பெரும் பங்குண்டு. காதலர்களின் முத்தத்தின் வழிப் பருகப்படும் இன்பத்தை அதன் உள்ளான அன்பைக் கூற வந்த குறுந்தொகைத் தலைவன்

இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார்   (குறுந் 267)

பெரிய செல்வம் ஒருங்கே பொருந்துவதாயினும் கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தை உண்டாற் போன்ற சுவையை உடைய வெள்ளிய பல்லினிடத்தே ஊறிய குற்றம் இல்லாத இனிய நீரையும் திரட்சி அமைந்த குறிய வளையையும் உடைய இளைய தலைவி நீங்கி இருப்ப, முயற்சியின் பொருட்டுத் தாம் மட்டும் தனித்துப் பிரிந்து செல்லார். என்று தன் நெஞ்சுக்கு கூறிக்கொள்கிறான்.

மற்றொரு காதல் முத்தத்தைக் காட்சிபடுத்தும் அகநானூறு. "கடை சிவந்து ஐய அமர்த்த உண்கண் நின் வை ஏர் வால் எயிறு ஊறிய நீர்"  (அகநா.237:17) என்கிறது. “சிவந்த உன் கடைக்கண் பார்வையையும் உன் கூரிய பற்களிலே ஊறும் நீரினையும் சுவைக்காமல் உன்னுடைய அன்புக்குரியவனால் இருக்க முடியாது. விரைவில் உன்னைத் தேடி வருவான்" என்று தோழி தலைவிக்கு ஆறுதல் சொல்வதாக உள்ளது.

இப்படித் தொன்றுதொட்டு இலக்கியங்கள் பதிவு செய்துள்ள முத்தச் சுவையை வள்ளுவரும் பேசுகிறார். காதலிக்காததவர்களுக்கு எச்சிலாக தெரிவது காதலில் வீழ்ந்தவர்களுக்குத் தேனும் பாலும் கலந்த சுவை நிறைந்த அமிர்தமாகத் தெரிகிறது. இதைக் கூற வந்த வள்ளுவர். இயற்கைப் புணர்ச்சியின் இறுதியில் தலைமகன் தலைவியின் நலம் கூறுவதாகக் கூறும் குறளில்

“பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.” (குறள். 1121)

என்கிறார். மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும் எனக்கூறுகிறார். இன்பம் தரக்கூடிய காதலியை மென் மொழி பேசும் காதலி எனப் புகழ்ந்து, இனிமை தரும் காதலியின், காதலின் சிறப்பை உரைக்கிறார். பற்களில் ஊறிய நீரினை உண்பது பற்றி மட்டும் இலக்கியம் சொல்ல வில்லை. பற்களில் முத்தமிட்டுக்கொள்ளும்  காதலர்களையும் காட்சிப்படுத்துகிறது. இதை நற்றிணை   204 ஆம்  பாடல்,

இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு' என
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,

என்கிறான் சங்கத் தலைவன். "நீ இன்று காவல் காப்பதற்குத் தினைப்புனத்திற்கு வருவாய் தானே? நானும் அங்கே வருகிறேன். இருவரும் சிரித்து விளையாடி காதல் கொள்ளலாம். நீ வருவதை உறுதி செய்து அந்த நற்செய்தியை நீ எனக்குச் சொன்னால் உன் பற்களில் முத்தம் கொடுத்து, இதழ்களால் சுவைப்பேன் பெண்ணே" என்கிறான்.

உடம்பு உயிர் நட்பு..

காதல் என்பது உயிரும் உயிரும் கலத்தல் என்பர். இரு வேறு உயிர்கள் கலத்தலைத் தாண்டியது காதல் என்பதைச் சொல்வதற்காக, உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பைக் காதலன் - காதலிக்கு இடையேயான தொடர்பாகக் கூறுகிறார். உடல், உயிர் இவற்றில் இரண்டில் எது இல்லை என்றாலும் மற்றொன்று இயங்காது. அதைப்போன்றே காதலும் இருக்கும், இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறார் வள்ளுவர். அதை
 
“உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.” (குறள். 1122)

என்பதாகத் தலைவியை விட்டுப் பிரிய நேருமோ என்ற அச்சம் தோன்ற, பிரிவச்சத்தின் பொருட்டுத் தலைவன் கூறுவதாக அமைந்த இக்குறளில் இம் மடந்தைக்கும் எமக்கும் உள்ள நட்பு என்பது, உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்பைப் போன்றது எனக் கூறி உடலும் உயிரும் தொன்றுதொட்டுச் தொடர்பிலிருந்து வருவதாலும் இன்ப துன்பங்களைச் சேர்ந்து அனுபவிப்பதாலும் காதலுக்கு இணையானது என்கிறார். உடலும் உயிரும் பிரிந்து வாழ முடியாது என்பது போல் நாமும் பிரிய முடியாது என்பதைப் பதிவு செய்கிறான் வள்ளுவரின் தலைவன். இந்த “உடம்பொடு உயிரிடை நட்பு” (குறள்.338) என்பதை வள்ளுவர் ஞானம் என்னும் அதிகாரத்திலும் பயன்படுத்தியுள்ளார். உடம்பை விட்டு உயிர் தனித்து இயக்க முடியாது என்பதைச் சொல்ல இக்குறளில் பயன்படுத்துகிறார்.

காதலை நட்பு என்று கூறும் வழக்கம் சங்க இலக்கியம் தொடங்கி இருந்துள்ளது.

கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந் 3)

என்று வளம் நிறைந்த குறிஞ்சித் தலைவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது. வானை விட உயர்ந்தது. நீரினை விட ஆழமானது  என்கிறாள் குறுந்தொகைத் தலைவி

காதல் கண்

காதலுக்குக் கண்ணில்லை என்று சொல்வார்கள். சில நேரங்களில் காதலியைக் காதலன், காதலனைக் காதலி கண் என்று சொல்லும் வழக்கமும் உண்டு. கண்ணுக்கு கண்ணான உறவு என அந்த உறுப்பின் முக்கியத்துவத்தை வைத்துக் காதலை மதிப்பிடுவர்.  காதலியைக் கண் போன்றவள் எனச் சொல்லும் குறுந்தொகைப் பாடல் தலைவன்,

பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தே மொழித் திரண்ட மென் தோள் மா மலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஒப்புவாள் பெரு மழைக் கண்ணே  (குறுந் 72)

எனக்கூறி அவளுடைய பெரிய, குளிர்ச்சியான கண்கள் பூப்போன்றவைதாம். ஆனால் ஏனோ, எனக்குமட்டும் அவை அம்புகளைப்போல் தோன்றுகின்றன, என்னைக் குத்தி ரணமாக்கித் துன்பம் தருகின்றன, எல்லோரும் அறியும்படிக் காதல் நோயை உண்டாக்குகின்றன என்று வருந்துகிறான். சங்க இலக்கியம் காதலியின் கண்ணை இப்படிப் பேச, வள்ளுவனின் தலைவனோ இடந்தலைப்பாட்டின்கண் நீங்கிய தலைமகளுக்குச் சொல்வதாக அமைந்துள்ள குறட்பாவில் என்னால் விரும்பப்பட்ட தலைவி இருக்க இடம் இல்லை என் கண்ணுக்குள் அவள் இருக்க வசதியாக கண்ணிலுள்ள கருமணிப் பாவையை செல்லச் சொல்கிறார். கண்ணான காதலி இருக்க கண்ணில் இடம் தந்து காதலியின் முக்கியத்துவத்தைச் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
 
“கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.” (குறள்.1123)

என்பதாக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே எனக்கூறி, நீ வருவாயானால் என் கண்ணில் உள்ள பாவையையே துறக்கிறேன் என அவளின் முக்கியத்துவத்தையும் கூறிக் காதலியைத் தன்னுள் வருமாறு அழைக்கிறான் வள்ளுவரின் காதல் தலைவன். "இது இரண்டாம் கூட்டத்திற்கு எதிர்ப்பட்ட தலைமகன் தலைமகளது நாணத்தை நீக்குதற் பொருட்டு அவளது கவின் தனது கண் நிறைந்தது என்று தலைமகள் கேட்க  சொல்லியது" (கி.வா. ஜெகந்நாதன், 2004;589) என்கிறார் பரிப்பெருமாள். இதன் மூலம் இரண்டாம் கூட்டத்திற்காகத் தலைவியைப் புகழ்ந்து தலைவிக்கும் தனக்குமான உறவைச் சொல்லிடும் தலைவனின் காதல் சிறப்பை உணர்ந்து கொள்ள முடிகிறது.

உயிருக்கு வாழ்வான காதலி

மகிழ்ச்சி என்பதே மனிதர்கள் வாழ்வதற்கான நிலைக்களன். துன்பப்படும் பொழுது வருந்துகிற மனிதன் இறக்கவும் துணிகிறான். இது காதலில் மிக அதிகம். காதலில் உள்ளவர்கள் காதலியோடு இருப்பதை இன்பமாகவும் இல்லாததை மரணமாகவும் கருதுவர். காதல் கைகூடாத நிலையில் இறந்து விடுவது அன்று முதல் இன்று வரை  காதலர்களால் பின்பற்றப்படுகிறது. இதைச் 'சாக்காடு' என்று தொல்காப்பிய பொருளதிகார களவவியல் நூற்பா (9) களவொழுக்க உணர்வாகக் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலை காதலின் உறுதியை விளக்குகிறது. இவை சங்க கால அகநானூற்றுப் பாடல்

ஆராக் காமம் அடூஉநின்று அலைப்ப,
இறுவரை வீழ்நரின் நடுங்கி (அகம் 322) என்கின்றன அகநானூற்றுப் பாடலடிகள்.

காதலன் தன் நெஞ்சிடம் பேசுவதாக உள்ள இப்பாடலில் மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் சங்ககால வழக்கம் அறியப்படுகிறது. காதல் கைகூடப் பெறாத நிலையில் காதலன் முதலில் மடலேறும் வழக்கத்தைக் கைக்கொள்ளும் நிலை இருந்திருக்கிறது. இந்த அளவிலும் அவனது காதல் கைகூடப்பெறாத சூழலில் இறுதியாக "வரைபாய்ந்து' உயிரை மாய்த்துக்கொள்ளுகின்ற நிலை இருந்துள்ளது. காதலன் மடலேறுதலும், வரைபாய்தலும், காதலி காதல் மிகுதியால் உடல் மெலிந்து வருந்தி இருத்தலும் பண்டைய அக வாழ்க்கை நெறியாக, மரபாக இருந்திருக்கிறது. இந்த மரபை அறிந்து உணர்ந்த மகாகவி பாரதி குயில் பாட்டில்

காதல் காதல் காதல்
காதன் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல் என்கிறார். இத்தகைய உயிர் போகும் உண்ர்வைத் தரும் காதலின் சிறப்பைச் சொல்ல வந்த வள்ளுவர்
     
“வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத் து.” (குறள்.1124) என்கிறார்.

பகற்குறியில் தலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைவன், அழகுக்கு அழகு சேர்க்கும் நல்ல அணிகலன்களை அணிந்த இவள் என்னோடு கூடும் போது உயிர்க்கு வாழ்வாக இருக்கிறாள். என்னை விட்டுப் பிரியும் பொழுது உயிர்க்குச் சாவு போன்றதாக இருக்கிறாள் எனக்கூறி அவளைப் பிரிய முடியாத காதலை வலியுறுத்துகிறார்.

தலைவன் அவளைப் பிரிந்து செல்வது சாகும்போது ஏற்படும் வருத்தத்தை அளிக்கிறது என்று கூறுவதிலிருந்து அத்தலைவனின் காதலை உணர்ந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் பிரிந்து விடுவானோ என்கிற தலைவியின் அச்சத்தை நீக்கிவிடுகிறான் தலைவன். இதற்கு உரை கூறும் மணக்குடவர் "இது இரண்டாம் கூட்டத்துப் புணர்ந்து நீங்கான் என்று கருதிய தலைமகள் கேட்ப தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது" (கி.வா. ஜெகந்நாதன், 2004;590) என்கிறார். தன் மேல் அன்பு செலுத்தும் தலைவிக்கு அவளை விட்டுப் பிரிய மாட்டேன் என உறுதி கூறுகிற காதலனின் சிறப்புக்  கவனிக்கத்தக்கது.

மறக்க முடியா அன்பு

தலைவன் தலைவியர் இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்துக்கொண்டு இருத்தல் காதலுக்கு அடிப்படை. பிரிந்த தலைமகனை நினைத்தபடியே அவன் வரவை மட்டுமே எதிர்பார்த்து, தன் செயல்களை எல்லாம்  மறப்பாள் தலைவி. தலைவனும் வேலை முடிந்து திரும்பும் வழியெல்லாம் அவளையே நினைத்துத் திரும்புவான். இது தமிழ் அக இலக்கியங்களின் காதல் மரபு. அத்தகைய அடிப்படையான நினைவுப் பண்பைக் கேள்வி கேட்கும் தோழிக்கு,

“உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.” (குறள். 1125)

எனக்கூறிப் போர் செய்யும் கண்களை உடைய தலைவியினுடைய அன்பை, பண்பை யான்  ஒரு போதும் மறந்ததே இல்லை. மறந்தால்தானே பிறகு நினைக்க முடியும் என்கிறார் வள்ளுவர். காதலர்கள் தங்களுக்குள் நினைத்தலும் நினைத்தவழி இரங்கலும் மீண்டும் சந்தித்தபின் மகிழ்தலும் நடக்கும். ஆனால் வள்ளுவர் காட்டும் காதலனோ காதலியை அவளின் பண்பு நலன்களை மறக்கவே இல்லை என்கிறான்.

இக்குறட்பாவில் இடம்பெறும் "மன் என்னும் சொல் ஒழியிசையின் கண் வந்தது எனக் கூறும் பரிமேலழகர் தலைவியின் குணங்களான நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலிய இத்தனை தலைமகளின் குணங்களையும்" (கி.வா. ஜெகந்நாதன், 2004;590) மறக்க முடியவில்லை என உரை எழுதுகிறார். உரை வேறுபாடு கூறும் பரிப்பெருமாள் "காதல் மிக்கார்க்குத் தான் காதலிக்கபட்டாரை ஒழிவின்றி நினைத்தலும் அவர் தம்மாட்டு இல்லாத காலத்திலும் கண்முன்னால் காண்டலும், உண்ணாமையும், உறங்காமையும், கோலம் செய்யாமையும் உளவாம் அன்றே. இவை ஐந்தும் ஈண்டுக் கூறப்படுகின்றன"  (கி.வா. ஜெகந்நாதன், 2004;590) என்கிறார். ஒருவரை ஒருவர் நினைத்துக்கொண்டே வாழ்தல் என்னும் காதல் வாழ்வு சிறப்புமிக்கது தான்.

கண்ணினுள் காதலன்..

மனதிற்குள் வைத்துக் காதலிப்பது வழக்கம். ஆனால், வள்ளுவரோ காதலனைக் காதலியின் கண்ணுக்குள் வைத்துள்ளார். தலைவன் தன்னை விட்டுப் பிரிந்து விடுவான் என்று தலைவனைப் பழிக்கும் தோழிக்குக் கேட்கும்படித்  தனக்குள் சொல்லிக் கொள்ளும் தலைவி, எம் காதலர் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறார். கண்ணுள்ளிருந்து போக மாட்டார், நான் கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

“கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.” (குறள்.1126)

என்னும் குறள் வழி நுட்பமான தன் காதலனின் அன்பை அவன் தன்னை விட்டுப் பிரிய மாட்டான் என்கிற உறுதியைத் தன் தோழிக்கு உணர்த்துகிறாள் வள்ளுவரின் காதல் தலைவி. நுண்மையான அன்புடைய என் காதலர் எப்போதும் என் நினைவிலேயே இருக்கிறார். அதனால் எப்போதும் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரை நான் காண்பதை இமைப் பொழுதும் கூட மறந்ததில்லை என்கிறாள். இக்கருத்தை வலியுறுத்தும் பரிமேலழகர் "இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்போதும் முன்னே தோன்றலின் கண்ணுள்ளின் போகார் என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் இமைப்பின் பருவரார் என்றும் கூறினாள்." (கி.வா. ஜெகந்நாதன், 2004;590) என்கிறார். என் காதலைப் பற்றி நன்கு உணரும் நுண்மையான அறிவுடைய என் காதலர் என்னை ஒருபோதும் பிரிய மாட்டார் எனும் தலைவியின் உறுதி சிறப்புமிக்கது.

காதலிப்பவர்களுக்குத் தான் விரும்புகிறவர் தன் கண்ணுக்குள் இருப்பதாக நினைத்துக் கொள்வது மரபு இதை சீவகசிந்தாமணியும்

“கண்ணுள்ளார் நுங்காதலர் ஒலிக்காமல் ஈங்கென
உண்ணிலாய வேட்கையால் ஊடினாரை” (சீவக.72)

என்று பதிவு செய்துள்ளது.  வள்ளுவரின் காதலியும் கண்ணை விட்டுப் பிரியாத காதலன் கண்ணுக்குள் இருப்பதால் அவரைப் பிரிய முடியவில்லை எனக் கூறிக் கண்ணுக்கு மை எழுதுவதையே தவிர்க்கிறாள். இதை

“கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.” (குறள்.1127)

எனக் கூறித் தலைவன் பிரிவை அஞ்சும் தோழிக்கு, எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், மை எழுதும் போது அவர் மறைந்து விடுவார் என்பதால் கண்ணுக்கு  மையும் எழுதமாட்டேன் என்பதாகத் தன் காதலின் உறுதியைக் கூறிக் காதலன் பிரிய மாட்டான் என்கிறாள்.  உரை கூறும் மணக்குடவர் "எப்போதும் அவன் வரவை நோக்கி இருத்தலால் கோலம் செய்ததற்குக் காலம் பெற்றிலேன்"  (கி.வா. ஜெகந்நாதன், 2004;591) என்று கூறுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார். இது, தான் விரும்பும் காதலன் எப்படியாகினும் தன்னை வந்து அடைவான். ஏமாற்ற மாட்டான் எனும் தலைவியின் உறுதியைக் காட்டுகிறது.

நெஞ்சினுள் காதலன்

பார்த்துப் பழகிய காதலன் கண்ணை விட்டு நீங்காமல் இருந்தான். அவனையே நினைத்துக் கொண்டிருந்ததால் இப்போது அவன் நெஞ்சுக்குள் இருக்கிறான். நெஞ்சுக்குள் காதலன் உள்ளதைக் குறுந்தொகை குறிப்பிடுகின்றது. காதல் என்பது உணர்வு சார்ந்தது. அந்த உணர்வு என்பது நெஞ்சம் எனப்படும் மனதோடு தொடர்புடையது. அப்படியான இரு நெஞ்சங்கள் கலந்ததே காதல் என்கிறார் செம்புலப்பெயல் நீரார்.

செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே (குறுந்-40)

நெஞ்சங்கள் கலந்த காதலைச் சொன்ன குறுந்தொகை நெஞ்சத்திற்குள் உள்ள காதலனையும் காட்டுகிறது .

அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஓதம்
பெயர்தரப் பெயர்தந்தாங்கு,
வருந்தும் தோழி! அவர் இருந்த என் நெஞ்சே (குறுந்.340)

எனக் குறிப்பிட்டுத் தோழி, அவர் இருந்த நெஞ்சு காதல் மிகுதியால் அவரை நினைத்து அவர் பின் செல்கிறது. அவரைப் பிரிந்து வருந்தும்போது மீண்டும் நம்மிடம் வந்துவிடுகிறது என்பதாக நெஞ்சுக்குள் இருக்கும் காதலனைக் குறிப்பிடுகிறார்.

திருவள்ளுவரோ காதலர் நெஞ்சில் இருக்கிறார் என்பதை வலியுறுத்துகிறார். "நெஞ்சத்தார் காதலவர்" என்பதைப் பல குறட்பாக்களில் (குறள் எண் 1130, 1204, 1205, 1218) பதிவு செய்துள்ளார். அப்படித் தன்மீது அன்பு பாராட்டி நெஞ்சுக்குள் இருக்கும் தலைவனுக்குச் சுட்டு விடக் கூடாது என்பதற்காகச் சூடான பொருட்களை உண்ணாமல் இருக்கின்றேன் என காதலில் நம்மை வியக்க வைக்கிறாள். திருவள்ளுவரின் தலைவி  

“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.” (குறள்.1128)

என்பதாக அவன் மேல் தான் செலுத்தும் அன்பைச் சொல்லித் தான் அன்பு செலுத்தும் அவர் ஒரு பொழுதும் தன்னை விட்டுப் பிரிய மாட்டார் என்பதை வலியுறுத்துகிறார். எப்போதும் என் நெஞ்சுக்குள் இருப்பவர் பிரிந்தார் என எப்படிச் சொல்ல முடியும்  என்று வினவுகிறாள்.  இதற்கு உரை கூறும் மணக்குடவர் "நீ உண்ணாதது என்னை என்று வினாவிய தோழிக்குத் தலைமகள் உணவில் காதல் இல்லை என்று கூறியது. இது காரணம் துறவுரைத்தல்" (கி.வா. ஜெகந்நாதன், 2004;591) என்கிறார். நினைவெல்லாம் காதலனைப் பற்றி இருப்பதால் உணவின் மீது காதல் இல்லை என்கிற தலைவி காதலின் சிறந்தவள். காதலன் பற்றிய நினைவால் உண்ணாமல் இருந்தாலும் சரி காதலனுக்குச் சுடுமோ என்று சொல்லி உண்ணாமல் இருந்தாலும் சரி, இதனால்  அவளின் காதல் உறுதியை உணர்ந்துகொள்ள முடிகிறது.

இமைத்தற்கு அஞ்சும் தலைவி

காதலனை நெடுங்காலம் பிரிந்திருக்கிறாள் ஒரு தலைவி. அவன் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கி மெலிந்து போகிறாள். ஒரு கட்டத்தில் தன் வாழ்வைப் பற்றிய நம்பிக்கையையும் இழந்து விடுகிறாள். காதலனைக் காணாமலேயே தன் இன்னுயிர் பிரிந்து விடுமோ என்று அஞ்சுகிறாள். இந்த நிலையில் தலைவனைப் பிரிந்த தலைவி தன் ஆற்றாமையைத் தோழியிடம் நெஞ்சம் நெகிழ எடுத்துரைக்கிறாள். "தோழி! நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வேறு ஒன்றிற்காக அஞ்சுகிறேன். நான் இறந்து விட்டால் பிறகு வேறு ஒரு பிறப்பும் பிறந்தால் அந்த மறுபிறப்பில் என் காதலனை மறந்து விடுவேனோ! என்று தான் அஞ்சுகிறேன்' என்கிறாள். இதனை,

'சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்புப் பிறிது ஆகுவதாயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே'

என்ற நற்றிணைப்பாடல் அடிகள் விளக்குகின்றன. இப்படிச் சாவதற்கு அஞ்சும் தலைவிக்கு மத்தியில் வள்ளுவரின் தலைவியோ இமைப்பதற்கு அஞ்சுகிறாள்.
தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்துள்ளான். துன்பத்திலிருந்து தலைவியை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி தலைவனை இகழ்ந்து பேசுகிறாள். தலைவனைப் பழிக்கும் தோழிக்குப் பதில் சொல்லும் விதமாகப் பேசும் தலைவி
 
“இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.” (குறள்.1129) என்கிறார்.

பார்த்துப் பார்த்துக் காதல் செய்த தலைவன் கண்ணுக்குள் இருக்கிறான். இமைக்கும் போது கண் மூடுவதால் அவன் மறைந்து போவான் என அஞ்சி நான் இமைக்காமல் இருக்கிறேன்.  நான் கண்ணிமைக்காமல் இருப்பதைப் பார்த்த ஊரார் அன்பில்லாத நம் தலைவர் செய்த துன்பம் எனக் கருதுகின்றனர். இது அவர் செய்த துன்பம் அல்ல அவரின் நினைவில் நான் இருக்கிறேன் என்பது இந்த ஊராருக்குப் புரியவில்லை எனக்கூறி ஊரார் மட்டுமல்ல நீயும் புரிந்து கொள்ளவில்லை எனத் தோழியைக் கடிந்து பேசுகிறாள் வள்ளுவரின் காதல் தலைவி. இது "கண் துயில் மறுத்தல் என்னும் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடு" (கி.வா. ஜெகந்நாதன், 2004;592)  என்கிறார் மணக்குடவர். தலைவனின் காதலை, அவன் வரவை எண்ணித் தூங்காமல் காத்திருத்தலும் காதலுக்குச் சிறப்பைத்தரும்.

உள்ளத்தில் உறையும் காதலன்

காதலன் பிரிவை விரும்பி இருந்தாலும் அவன் உள்ளத்தில் இருப்பான் என்பது தமிழ் மரபு. அம் மரபைக் கூற வந்த நற்றிணை

"பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத் தகல்வறி யானே" (நற்.388;9}10) எனக் குறித்துள்ளது.

மகிழும் துறையை உடையவன்  உன் காதலனாகிய துறைவன்.  அவன் உன்னோடு அன்று சேர்ந்திருந்ததும், இடையில் வராமல் இருந்ததும், இப்போது வந்திருப்பதும் என் நெஞ்சை விட்டு அகலவே இல்லை என்கிறது. "நெஞ்சத்தார் காத லவராக" (குறள்.1128) என்று சொன்ன வள்ளுவர், இக்குறளில், என் மேல் அன்பு செய்து இல்லறத்தின் பொருட்டுப் பொருள்வயின் பிரிந்த காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாத இந்த ஊரார் அன்பு நிறைந்த என் காதலர் அன்பில்லாதவர். என்னைப் பிரிந்து வாழ்கின்றார் என்று அவரைப் பழிக்கின்றனர்.

“உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.” (குறள்.1130)

எங்குப் பிரிந்து சென்றாலும் காதலர் என் உள்ளத்திலே இருக்கிறார். நான் அவர் மேல் கொண்ட அன்பிலிருந்து மாறவில்லை, அது போலவே அவரும் மாற மாட்டார். இதைப் புரியாத ஊரார் மட்டுமல்ல நீயும் தவறாகப் பேசுகிறாய் மாற்றிக் கொள் என்கிறாள் தலைவி. தம் காதலைப் பற்றித் தவறாகப் பேசிய தோழிக்கு மட்டுமல்லாது ஊருக்கும் தம் காதல் உறுதியைச் சொல்லும் தலைவியின் பண்பு போற்றத்தக்கது.

சிறப்பு மிக்கது காதல்...

தலைமக்களின் காதல் சிறப்பைக் கூற வந்த வள்ளுவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் அவர்களின் முத்தத்தைப் பாலும் தேனும் கலந்த கலவையோடு ஒப்புமைப்படுத்திச் சிறப்பிக்கிறார். இன்ப துன்பங்களை ஒன்றாய் அனுபவிக்கிற உடலும் உயிரும் போன்று வாழ்கின்ற காதலன் காதலியைக் காட்சிப்படுத்திக் காதலி வாழ்வதற்காகத் தன் கண்ணின் கருமணியையே போகச் சொல்லும்  காதல் சிறப்புமிக்கது என்கிறார்.

மேலும், காதலியோடு வாழ்தல் மகிழ்வையும் பிரிதல் இறப்புக்குச் சமமானத் துன்பத்தையும் தரும். எப்போதும் மகிழ்வைத் தருகிற தலைவியைக் காதலன் மறப்பதே இல்லை. மறந்தால்தானே நினைக்க முடியும். அத்தகைய தலைவியின் தலைவன் அவளின் கண்ணுக்குள் இருக்கிறான் என அக்காலக் காதலன்பைக் காட்சிப் படுத்துகிறார்.

தன் கண்ணுக்குள் இருந்துகொண்டு இமைத்தாலும் போகாத காதலனை மறக்கமுடியாத தலைவி அவன் மறைந்து விடுவான் என அஞ்சி  மை தீட்டுவதையும்  தவிர்க்கிறாள். கண் காட்டி அன்பு செய்த காதலன் நினைவினால் நெஞ்சுக்குள் செல்ல, நெஞ்சுக்குள் அவனைக் காக்கும் பொருட்டுச் சூடான உணவைத் தவிர்த்துக் காதலையும் காக்கிறாள் வள்ளுவரின் காதல் தலைவி.

தலைவன்பால் அன்பு கொண்ட தலைவி கண்ணைக் கூட இமைக்காமல் அவனைக் காக்க, ஊரார் காதலன் வராததால் இவள் தூங்கவில்லை எனப் பழி சொல்லுகின்றனர். அன்பிற் சிறந்த அவரோ என் உள்ளத்தினுள் இருக்கிறார் என ஊருக்கும் தோழிக்கும் சொல்லிக் காதலின் சிறப்பை உணர்த்துகிறாள் தலைவி.

ஒட்டுமொத்தத்தில் காதலின் நுட்பமான உணர்வுகளை, காதலர்களின் மனம் சார்ந்த நுண்ணுணர்வுகளை மிகத் தேர்ந்த சொற்களால் வெளிப்படுத்தியுள்ள வள்ளுவர் காதலின் சிறப்புகளைச் சிறப்பாகக் காட்டியுள்ளார் எனலாம்.

[கட்டுரையாளர் - தமிழியல் ஆய்வாளர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT