காதலர் தினம்

'லவ் யூ' - காதலர்களுக்கானது மட்டுமல்ல!

14th Feb 2022 01:33 PM | எம். முத்துமாரி

ADVERTISEMENT

காதல்...அதுதான் எவ்வளவு அழகான வார்த்தை...எத்துணை எத்துணை பரவசம்.. ஒருவரின் மீதான ஆழமான தூய அன்பைச் சொல்லும் உணர்ச்சிமிக்க சொல்... 'காதல்' என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே நம்மிடம் ஒரு ஸ்பரிசம் ஏற்பட்டுவிட்டுத்தான் செல்கிறது. 

வாழ்வில் ஒவ்வொரு நபருக்கும் காதல் என்ற உணர்வு ஏதாவது ஒரு தருணத்தில் ஏற்பட்டிருக்கும், ஏற்பட்டிருக்க வேண்டும்.. காதலை நாம் உணருகிற தருணமும் மற்றவரால் உணரப்படும் தருணமும் மிக அற்புதமானது. அன்பின் மிகுதியால் இரு மனங்கள் இணையும் அழகான அலாதியான உணர்ச்சி. 

அன்பு, நட்புக்கு அடுத்த கட்டம் என்றுகூட காதலைச் சொல்லலாம். அன்பையும் நட்பையும் தாண்டிய ஒரு நிதானமற்ற பந்தம். மனதால் இணையும் அந்த பந்தம் வாழ்க்கை முழுவதும் நீடிக்கிறது. 

சிலரது காதல் இணைந்தே கடைசிவரை தொடர்கிறது; பலரது காதல் தனித்தனியே வெவ்வேறு வழிகளில் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஆனால், மனதில் ஏற்பட்ட உண்மையான காதல் வாழ்வின் இறுதிவரை தொடரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. 

ADVERTISEMENT

மனித உணர்ச்சிகளில் அலாதியான அந்த உணர்வினை ஒவ்வொருவரும் பெற வேண்டியது ஒரு பேறும்கூட. 

ஆனால், பலருக்கும் இந்த காதல் மனதுக்குள் புதைந்துவிடுகிறது, புதைத்துக்கொள்கின்றனர் என்றுதான் கூற வேண்டும். தான் விரும்புபவரை எதிர்கொள்ள முடியாத பயத்தினால் தயக்கத்தினால் அந்த காதல் செத்துவிடுகிறது. சொல்லப்போனால், அந்த காதலை நீங்களே கொலை செய்துவிடுகிறீர்கள். 

உங்கள் காதல் வெற்றி பெறுகிறது என்பது இரண்டாவது. முதலில் உங்கள் காதலை தைரியமாகத் தெரிவியுங்கள். காதலை சொல்லிவிட்ட பின்பு ஏற்படும் எதையோ சாதித்த ஒரு மகிழ்ச்சியை நீங்கள் உணர வேண்டுமெனில் உங்கள் காதலை தைரியமாக வெளிப்படுத்துங்கள். 

தங்களை யாரும் காதலிக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தில்தான் இன்று பலரும் இருக்கின்றனர். ஆம், இந்த உலகத்தில் அன்புக்கும் காதலுக்கும் பஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. 

காதலைப் பெறும் நபர், அதை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நீங்கள் அவர்களை காதலிப்பதை நினைத்து உள்ளுக்குள் அதீத ஆனந்தம் அடைவார்கள் என்பது சொல்லப்படாத உண்மை. நவீனத்தின் ஒரு விளைவாக, இந்த பரபரப்பான உலகத்தில் அன்பு செலுத்தவும் பகிரவும் குறைவான ஆள்களே இருக்கின்றனர். உங்கள் காதலின் மூலம் அந்த வெற்றிடத்தை நிரப்புங்கள். 

காதலைச் சொல்ல தயங்குபவர்கள் காதலிக்க தகுதியற்றவர்களே. நீங்கள் இறந்தபின்னும் உங்கள் காதல் இந்த உலகில் வாழ வேண்டுமெனில் உங்களுடைய காதல் பதியப்பட வேண்டும். 

இந்த உலகத்தில் ஒருவரால் தீவிரமாகக் காதலிக்கப்படுகிறோம் என்பதை நினைத்து மகிழும் ஒரு தருணத்தை நீங்கள் விரும்பும் நபருக்கு அளியுங்கள். 

நாளை நிச்சயமில்லாத இந்த ஒரு மனிதப் பிறவியில் ஒருவர் மீதுள்ள அன்பை ஏன் மறைத்து ஒளித்துவைக்க வேண்டும்? 

அடுத்ததாக, 'காதல்' என்பது ஒரு இளைஞன்- இளைஞிக்கு இடையேதான் வர வேண்டும் என்று இருக்கிறதா? யுவன்-யுவதிக்கு இடையே வருவது மட்டும்தான் காதலா? அப்படி வந்தால் அவர்கள் மட்டும்தான் இந்த தினத்தைக் கொண்டாட வேண்டுமா? என்றால் இல்லை.

இதையும் படிக்ககாதலர் தினத்தின் ரத்த சரித்திரம்: யார் இந்த வேலன்டைன்? 

இன்று 40, 50களில் வரும் காதலைக்கூட மிக அழகாக திரைப்படங்களில் காண்பிக்கிறார்கள். அதுவும் உண்மையே. கணவன்/மனைவியை இழந்தவர்களுக்கு வாழ்க்கையில் இறுதிவரை ஒரு துணை தேவைப்படும் நிலையில், தன் வயதொத்த எதிர்பாலினத்தவரிடம் காதல் ஏற்படுகிறது. ஆனால், வயதை ஒரு காரணம்காட்டி பலரும் இதை வெளிப்படுத்துவதில்லை. 

உண்மையில் காதல் என்பதும் அன்பின் மிகுதிதான். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இந்த நாளை தாராளமாகக் கொண்டாடலாம். 

இன்று டிவி, மொபைல்போன், கேமிங் என்று இளைஞர்களும், வேலை, குடும்பச் சுமை என்று பெரியவர்களும் எந்தக்காலத்திலும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் நகரங்களில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பேசக்கூட நேரமில்லை என்ற அளவுக்குத்தான் நடந்துகொள்கிறார்கள். 

உங்களது விருப்பு, வெறுப்புகளை தியாகம் செய்து உழைக்கக் காரணமான உங்கள் குடும்பத்தினருடன் இந்த நாளை கொண்டாடுங்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் நாளாக மாற்றலாம். அன்பை பரிமாறும் அந்த தருணம் மனம் மிகவும் அமைதியாக பசுமையாக இருக்கும். ஓராண்டு காலம் ஓடியாடி உழைத்த வலி எல்லாம் நொடியில் பறந்துபோகும். அன்பைப்  பரிமாறுவது உடலுக்கும் மனதுக்கும் ஒரு நல்ல தெரபி.  

அடுத்ததாக,  வாழ்க்கைத்துணை என்று இல்லாமல் ஒரு சில நண்பர்களை, ஒரு சில எதிர் பாலினத்தவர்களைக்கூட வயது வித்தியாசமின்றி பிடித்திருக்கலாம். காரணமே இன்றி சிலரைப் பிடிக்கலாம். (இங்கு எல்லோரும் மனிதர்கள்தான் என்பதை ஒருமுறை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்) அப்படி உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களிடம் இந்த நாளில் உங்கள் காதலை(அன்பை) தெரியப்படுத்துங்கள். 

'நான் உன்னை காதலிக்கிறேன்' , 'நான் உன்னை நேசிக்கிறேன்' என்று யாரும், யாரிடம் வேண்டுமானாலும் சொல்லலாம். அது தோழன் - தோழியாக இருக்கலாம், அக்கா - தம்பியாக இருக்கலாம், அண்ணன் - தங்கையாக இருக்கலாம், ஏன் 60 வயது கிழவனும் - கிழவியுமாகக் கூட இருக்கலாம்.

'லவ் யூ' என்ற வார்த்தையை எதிர்காலத்தில் திருமண வாழ்க்கையில் இணையப்போகும் ஒரு இளம் பெண்ணும் ஆணும்தான் சொல்லிக்கொள்ள வேண்டும் என்று கட்டமைக்கப்பட்ட நடைமுறை இப்போதுதான் கொஞ்சம்கொஞ்சமாக உடைபட்டுக்கொண்டிருக்கிறது. அந்த கட்டமைப்பு முழுவதுமாக உடைக்கப்பட வேண்டும். 'லவ் யூ' என்ற வார்த்தையை சாதாரணமாக அணுகவும், அடுத்த தலைமுறைகளில் அனைத்துத் தரப்பினரும் இந்த நாளை கொண்டாடவும் சாதி, மத, இன பேதமின்றி 'அன்பு என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது' என்ற அடிப்படையில் உங்களுக்குப் பிடித்த நபரிடம் காதலைத் தெரிவியுங்கள்.  'லவ் யூ' என்ற வார்த்தையை சொல்லமுடியாவிட்டால் பிடித்தவர்களிடம் 'காதலர் தின வாழ்த்துகளையாவது பகிருங்கள். 

"லவ் யூ ஆல்"

ADVERTISEMENT
ADVERTISEMENT