காதலர் தினம்

'உருவத்தைப் பார்த்து வருவதல்ல காதல்' - எடுத்துக்காட்டான காதல் தம்பதி!

14th Feb 2022 12:34 PM | எம்.மாரியப்பன்

ADVERTISEMENT

உருவத்தைப் பார்த்து வருவதல்ல காதல், உள்ளத்தைப் பார்த்து வருவதே காதல். அழகும், அழகும் சேர்வதல்ல காதல், அன்பும், அரவணைப்பும் சேர்ந்திருப்பதே காதல், இருவராக இல்லாமல் மனங்களால் ஒருவராகி, இன்பம், துன்பம் அனைத்திலும் யாதுமாகி இருக்கிறோம் என காதலுக்கான புதிய வரிகளை இளம் காதலர்களுக்கு சொல்லித் தருகின்றனர் காதல் தம்பதியான நாமக்கல்லைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான ஜெயலட்சுமி(40), அவரது கணவர் மணிகண்டனை(44) சந்தித்தோம்.

காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட நம்மிடம் ஜெயலட்சுமி பகிர்ந்து கொண்டது…

எனக்கு 5 வயதாக இருந்தபோது இளம்பிள்ளை(போலியோ) வாத நோயால் இரு கால்களும் பாதிக்கப்பட்டன. நாமக்கல் தான் எனது சொந்த ஊர். ஐந்தாம் வகுப்பு வரையில் இங்கு படித்த நிலையில் மேல்நிலைக் கல்விக்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12–ஆம் வகுப்பு வரை பயின்றேன்.

ADVERTISEMENT

பின்னர் கணினி பயிற்சி பெற்று நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிளக்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வந்தேன். அப்போது அங்கு பல்வேறு பணிகளுக்காக வந்த மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. ஓராண்டுகளாக காதலித்து வந்தோம். திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில் இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பின்னர் நாங்கள் இருவருமே தாய், தந்தையரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தோம். கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் பெண் குழந்தை பிறந்து இறந்துபோனது. அடுத்த ஓராண்டில் ஆண் குழந்தை பிறந்தது. ஜஸ்வந்த் என்ற எங்களது மகனுக்கு தற்போது 6 வயதாகிறது.

இதையும் படிக்ககாதலர் தினத்தின் ரத்த சரித்திரம்: யார் இந்த வேலன்டைன்?

நான் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சியும் என்னை தனித்துவமாக செயல்பட தூண்டியது. அதன்பின் தனியாக பிளக்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினோம். எனது கணவர் பிளஸ்க் தயாரிப்பு இயந்திரத்தை இயக்கும் பணியையும், பேனர்களை வெளியிடங்களுக்கு சென்று பொருத்தும் பணியையும் செய்து வருகிறார். எங்களுடைய காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே உள்ளது. குழந்தை பிறந்ததற்குப் பின் பிரிந்திருந்த, ஒதுங்கியிருந்த சொந்தங்களும் எங்களை நாடி வந்தன. தற்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இடம் வாங்கி வீடு கட்டி குடிபுகுந்துள்ளோம். தாயுக்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் எனது கணவர் என்னை கவனித்துக்கொள்கிறார். கால்கள் ஊனமாக இருக்கிறதே என்ற கவலை எப்போதும் எனக்கு ஏற்பட்டதில்லை. இறைவன் கொடுத்த வரமாகவே எனது கணவரை பார்க்கிறேன் என்றார் பூரிப்புடன். மணிகண்டனிடம் காதல் மனைவி ஜெயலட்சுமியை பற்றி கேட்டபோது;

எல்லாமே எனக்கு அவர் தான், கேலியாக பார்த்தோர் மத்தியில் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறோம் என்றார் உறுதியுடன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT