காதலர் தினம்

30 ஆண்டுகளில் 5,000 காதல் திருமணங்கள்: கோவையில் ஒரு சாதனை

14th Feb 2021 06:40 AM | வெ.செல்வகுமார்

ADVERTISEMENT

கோவை சித்தா புதூர், பாரதியார் சாலையில் கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது கலப்புத் திருமணம் புரிந்தோர் நலச் சங்கம்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இச்சங்கத்தின் தலைவராகவும், சண்முகசுந்தரம் செயலாளராகவும் உள்ளனர். இந்தச் சங்கத்தின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளில் 5 ஆயிரம் காதல் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன்  கூறியது: 

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் கலப்புத் திருமணம்  புரிந்தோர் நலச்சங்கத்தின் சார்பில் கடந்த 1990 முதல் 30 ஆண்டுகளாக கலப்புத் திருமணங்களை நடத்தி வருகிறோம். பெற்றோர்கள் எதிர்ப்பால், வீடுகளை விட்டு வெளியேறும் காதலர்கள், விவாகரத்து பெற்றவர்கள், கணவனையிழந்தவர்கள், மனைவியை இழந்தவர்களுக்கு கலப்பு மணம் செய்து வைப்பதே நலச்சங்கத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். 

ADVERTISEMENT

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன்

21 வயது பூர்த்தியான ஆண்கள், 18 வயது பூர்த்தியான பெண்கள், தங்களின் வயதை உறுதி செய்யும் சான்றிதழ்கள் மற்றும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்களை சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்து, அவை சரிபார்க்கப்பட்ட பிறகே, சம்பந்தப்பட்ட இணையருக்கு கலப்புத் திருமணம் செய்து வைப்போம்.

திருமண வயது பூர்த்தியாகாதவர்களுக்கும், உரிய சான்றிதழ்கள் சமர்பிக்காதவர்களுக்கும் சங்கத்தின் சார்பாக திருமணம் நடத்தி வைப்பதில்லை. 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கம், 2000 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட சங்கமாக மாற்றப்பட்டு, கோவையில் அலுவலகமும் தொடங்கப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலப்புத் திருமணங்களை எங்கள் சங்கம் சார்பில் நடத்தி வைத்துள்ளோம். இதில், 3 ஆயிரம் காதல் ஜோடிகள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள்,  கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஜெர்மன், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களுடன் காதல் திருமணங்களை நடத்தி வைத்துள்ளோம்.

அதுமட்டுமின்றி, விவாகரத்து பெற்றவர்கள், கணவனை இழந்தோர்,  மனைவியை இழந்தோர் என 400க்கும் மேற்பட்டோருக்கு, கலப்புத் திருமணம் புரிந்தோர் நலச்சங்கத்தின் சார்பில் கலப்பு மணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இப்பணியில், எங்கள் சங்கத்தினர் தொய்வு கொள்ளாமல் ஆத்மார்த்தமாக ஈடுபட்டு வருகின்றனர். கரோனா காலத்திலும் 350 கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்ததே அதற்கு சாட்சி. திருமணம் செய்து வைப்பதோடு விட்டு விடாமல், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, தொடர்ந்து ஆதரவையும் அளித்து வருகிறோம். சமீபத்தில் காதல் திருமணம் புரிவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கலப்பு மணம் புரிபவர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்காலங்களில் இந்த நிதியானது காதல் திருமணம் புரிந்தோர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. அந்த நிதியுதவியை வழங்கிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், காதல் திருமணம் புரிவோருக்கு அரசு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அவர்களுக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். காதலர்களை, கலப்புத் திருமணம் புரிந்தோரைச் சிறப்பிக்கும் வகையில்,
ஒவ்வொரு ஆண்டும், எங்கள் சங்கத்தின் சார்பில் விழா நடத்தப்பட்டு நடப்பாண்டுகளில் காதல் திருமணம் புரிந்தோர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி வருகிறோம்.

இந்தாண்டுக்கான காதலர் தின விழா வருகின்ற 15 ஆம் தேதி மாலை கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணாமலை அரங்கத்தில் நடைபெறுகிறது. திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், கோவை மக்களைவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர். சமூகத்தில் உள்ள ஜாதி, மதங்கள் என்னும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து, மனிதநேயத்தை வளர்ப்பது காதல் திருமணங்கள் மட்டும் தான். ஆகவே. காதல் திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்றார்.

Tags : valentinesday
ADVERTISEMENT
ADVERTISEMENT