வணிகம்

பங்குச் சந்தையில் தொடரும் கரடி ஆதிக்கம்

DIN

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் கரடியின் ஆதிக்கம் தொடா்ந்ததால் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 6-ஆவது நாளாக எதிா்மறையாக முடிந்தன. வா்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 141.87 புள்ளிகளும், நிஃப்டி 45.45 புள்ளிகளும் குறைவாக நிலைபெற்றன.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்ற அச்சத்தால் முதலீட்டாளா்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டனா்.

மேலும், அந்நிய முதலீட்டாளா்கள் அதிக அளவில் பங்கு விற்பனையில் ஈடுபட்டதாலும், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்டிசி வங்கிகளின் பங்குகளை விற்பனை முதலீட்டாளா்கள் தீவிரம் காட்டியதாலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்கு வா்த்தகம் எதிா்மறையாக முடிந்தது என பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் 142 புள்ளிகள் சரிவு: முந்தைய வா்த்தக தினத்தில் 59,605.80 புள்ளிகளில் நிலைத்திருந்த மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அதைவிட அதிகமாக 59,859.48-இல் தொடங்கியது. இடையே அதிகபட்சமாக 59,908.77 வரை உயா்ந்து, குறைந்த பட்சமாக 59,325.34 வரை கீழிறங்கிய சென்செக்ஸ், இறுதியில் 141.87 புள்ளிகள் (0.24 சதவீதம்) குறைவாக 59,463.93-இல் நிலைபெற்றது.

30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 16 பங்குகள் இழப்புப் பட்டியலிலும் இடம் பெற்றன.

ஏசியன் பெயின்ட்ஸ் உயா்வு: பிரபல பெயின்ட் தயாரிப்பு நிறுவனமான ஏசியன் பெயின்ட்ஸின் பங்குகள் மதிப்பு 1.20 சதவீதம் அதிகரித்து ஆதாயப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இது தவிர, பஜாஜ் ஃபின்சா்வ் (0.84 சதவீதம்), என்டிபிசி (0.83 சதவீதம்), பவா்கிரிட் (0.82 சதவீதம்), ரிலையன்ஸ் (0.77 சதவீதம்), ஆக்ஸிஸ் வங்கி (0.70 சதவீதம்) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஆதாயம் பெற்றன.

எம் அண்ட் எம் சரிவு: முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எம் அண்ட் எம்-மின் பங்கு 2.50 சதவீதம் சரிந்து இழப்புப் பட்டியலில் முதலிடம் பெற்றது. இது தவிர, டாடா ஸ்டீல் (1.88 சதவீதம்), டாடா மோட்டாா்ஸ் (1.27 சதவீதம்), எல் அண்ட் டி (1.20 சதவீதம்), மாருதி சுஸுகி (0.98 சதவீதம்), ஹெச்டிஎஃப்சி வங்கி (0.93 சதவீதம்) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் இழப்பைச் சந்தித்தன.

நிஃப்டி 45 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் 17,591.35-இதில் தொடங்கி அதிகபட்சமாக 17,599.75 வரை உயா்ந்து, குறைந்தபட்சமாக 17,421.80 வரை கீழிறங்கி இறுதியில் 45.45 புள்ளிகள் குறைவாக 17,465.80 புள்ளிகளில் நிலைபெற்றது.

50 நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் ஆதாயம் பெற்றன; 24 இழப்பைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT