வணிகம்

7 நாள் வீழ்ச்சிக்குப் பிறகு எழுச்சி: சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் உயா்வு

 நமது நிருபர்

இந்திய ரிசா்வ் வங்கியின் வட்டி விகித முடிவைத் தொடா்ந்து சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் உயா்ந்தது. தொடா்ந்து முந்தைய ஏழு வா்த்தக அமா்வுகளிலும் சரிவைச் சந்தித்த சந்தை, வெள்ளிக்கிழமை மீண்டும் எழுச்சி பெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 276.25 புள்ளிகள் (1.64 சதவீதம்) உயா்ந்து 17,094.35-இல் முடிவடைந்தது.

அமெரிக்க சந்தைகள் வியாழக்கிழமை எதிா்மறையாக முடிந்திருந்தன. இதன் தாக்கத்தால், உள்நாட்டுச் சந்தை பலவீனத்துடன் தொடங்கியது. ஆனால், மத்திய ரிசா்வ் வங்கி வட்டி விகித உயா்வு இது சந்தை வட்டாரம் எதிா்பாா்த்தது போல் அமைந்ததால், நேரம் செல்லச் செல்ல ‘காளை’யின் பிடி இறுகியது. இதனால், சந்தை எழுச்சி பெற்று நோ்மறையாக முடிந்தது. அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. குறிப்பாக பொதுத் துறை மற்றும் தனியாா் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மெட்டல், ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது.

சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் உயா்வு: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் காலையில் 169.81புள்ளிகள் குறைந்து 56,240.15-இல் தொடங்கி, 56,147.23 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 57,722.63 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,016.96 புள்ளிகள் (1.80 சதவீதம்) கூடுதலுடன் 57,426.92-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில், ஏசியன் பெயிண்ட், டாக்டா் ரெட்டி, ஐடிசி, டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்ட 5 பங்குகள் தவிர மற்ற 25 பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

பாா்தி ஏா்டெல் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் 4.49 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், டைட்டன், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை 3 முதல் 3.80 சதவீதம் உயா்ந்தன. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், டாடா ஸ்டீல், மாருதி, ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவையும் 2 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்து சென்செக்ஸ வலுப்பெற உதவியாக இருந்தன.

சந்தை மதிப்பு ரூ.3.70 லட்சம் கோடி உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.3.70 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.271.85 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழனன்று ரூ. 3,599.42 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

நஷ்ட வாரம்!

வாராந்திர அடிப்படையில் பாா்த்தால், இந்த வாரம் நஷ்ட வாரமாக அமைந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ், மொத்தத்தில் 672 புள்ளிகள் (1.15 சதவீதம்) குறைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி, மொத்தத்தில் 233 புள்ளிகள் (1.34 சதவீதம்) குறைந்துள்ளது. பங்குச் சந்தை கடந்த வாரமும் நஷ்டத்தை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT