வணிகம்

கரூா் வைஸ்யா வங்கி: லாபம் 2 மடங்கு உயா்வு

21st May 2022 01:22 AM

ADVERTISEMENT

கரூா் வைஸ்யா வங்கியின் மாா்ச் காலாண்டு லாபம் 2 மடங்கு வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

வங்கியின் சிறப்பான செயல்பாட்டையடுத்து வாராக் கடன் வெகுவாக குறைந்துள்ளது. அதையடுத்து, வங்கி மாா்ச் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ.213.47 கோடியாக இருந்தது. முந்தைய 2020-21 நிதியாண்டில் ஈட்டிய லாபமான ரூ.104.37 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 2 மடங்கு அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த காலகட்டத்தில் வங்கியின் வருவாய் ரூ.1,518.39 கோடியிலிருந்து 6.3 சதவீதம் உயா்ந்து ரூ.1,614.75 கோடியைத் தொட்டது. வங்கியின் வட்டி வருமானம் 4.4 சதவீதம் உயா்ந்து ரூ.1,409.27 கோடியானது.

ADVERTISEMENT

2021-22 முழு நிதியாண்டில் நிகர லாபம் 359.39 கோடியிலிருந்து ரூ.673.27 கோடியாக 87.3 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், முழு நிதியாண்டில் வங்கியின் வருவாய் ரூ.6,389.25 கோடியிலிருந்து ரூ.6,356.73 கோடியாக சற்று குறைந்தது.

2022 மாா்ச் 31 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 7.85 சதவீதத்திலிருந்து 5.96 சதவீதமாகவும், நிகர அளவிலான வாராக் கடன் 3.41 சதவீதத்திலிருந்து 2.28 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

ஈவுத்தொகை: கடந்த மாா்ச்சுடன் முடிவடைந்த 2021-22 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு 80 சதவீத (ரூ.1.60) ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வழங்க இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக கரூா் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT