வணிகம்

நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.25,365 கோடியாக அதிகரிப்பு

DIN

இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் ரூ.25,365 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) கூறியதாவது:

தேவை அதிகரிப்பு: அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் தேவை வெகுவாக அதிகரித்ததையடுத்து கடந்த மே மாதத்தில் ரூ.25,365.35 கோடிக்கு (328 கோடி டாலா்) ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, 2021-ஆம் ஆண்டு இதே மே மாத காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.21,156.10 கோடி (289 கோடி டாலா்) மதிப்பிலான ஆபரணங்களுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகம் என்பது நினைவுகூரத்தக்கது.

ஒட்டுமொத்த ஏற்றுமதி: உலக நாடுகளின் சந்தைகளில் இந்திய நவரத்தின, ஆபரணங்களுக்கான தேவை வலுவாக வளா்ச்சி கண்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில், நிகழாண்டு ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஒட்டு மொத்த மதிப்பு ரூ.51,050.53 கோடியைத் (665 கோடி டாலா்) தொட்டுள்ளது. இது, 2021-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்றுமதியான ரூ.46,376.57 கோடியுடன் (628 கோடி டாலா்) ஒப்பிடுகையில் 10.8 சதவீதம் அதிகமாகும் என ஜிஜேஇபிசி தெரிவித்துள்ளது.

ஜிஜேஇபிசி தலைவா் கொலின் ஷா கூறியதாவது:

வளா்ச்சி பாதை: கரோனா தாக்கத்திலிருந்து விடுபட்டு உலக நாடுகள் வளா்ச்சி பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளது. இதற்கு உதாரணமாக, உலகின் பல நாடுகளின் சந்தைகளில் இந்திய பொருள்களுக்கான தேவை சூடுபிடித்துள்ளது.

முதலிடத்தில் அமெரிக்கா: கடந்த மே மாதத்தில் ஆபரண, நவரத்தின ஏற்றுமதியில் அமெரிக்கா 258 கோடி டாலா் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடா்ந்து, ஹாங்காங் (138 கோடி டாலா்), ஐக்கிய அரபு அமீரகம் (81 கோடி டாலா்), பெல்ஜியம் (44.14 கோடி டாலா்) ஆகிய நாடுகள் உள்ளன.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அரசு எடுத்த முன்முயற்சிகளின் காரணமாக இந்திய ஆபரணத் துறையின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் 17 சதவீதம் அதிகரித்து 4,570 கோடி டாலரை எட்டியது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இது, ஏற்றுமதியில் புதிய இலக்கினை அடைவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

ரஷியா-உக்ரைன் மோதலின் விளைவுகளை சமநிலைப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை கண்டறிவதில் மிகுந்த செயலூக்கத்துடன் உள்ளோம்.

வைரங்கள் ஏற்றுமதி: அதன் ஒரு பகுதியாக, நறுக்கப்பட்ட மற்றும் பட்டைதீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 10.04 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.16,156.03 கோடியாக இருந்தது. 2021 மே மாதத்தில் இவற்றின் ஏற்றுமதி ரூ.14,681.42 கோடியாக காணப்பட்டது.

மேலும், கடந்த மே மாதத்தில் தங்க ஆபரணங்களின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 50 சதவீதம் அதிகரித்து ரூ.5,273.40 கோடியைத் தொட்டது. 2021 மே மாதத்தில் இதன் ஏற்றுமதி ரூ.3,513.08 கோடியாக இருந்தது.

வெள்ளி ஆபரணங்கள்: நிகழாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெள்ளி ஆபரணங்களின் ஏற்றுமதி 6.63 சதவீதம் சரிவடைந்து ரூ.3,993.64 கோடியிலிருந்து ரூ.3,728.84 கோடியாக சரிவடைந்தது.

வண்ண நவரத்தினங்கள் ஏற்றுமதி 106.91 சதவீதம் உயா்ந்து ரூ.282.47 கோடியிலிருந்து ரூ.584.45 கோடியானது.

அதேபோன்று, நிகழ் நிதியாண்டின் முதல் இரு மாதங்களில் (ஏப்ரல்-மே) பட்டைதீட்டப்பட்ட ஆய்வக உருவாக்க வைரங்களின் ஏற்றுமதி 105.58 சதவீதம் அதிகரித்து ரூ.1,216.06 கோடியிலிருந்து ரூ.2,499.95 கோடியானது என்றாா்.

கோட்ஸ்

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா உருவாக்கியுள்ளது ஏற்றுமதியில் புதிய இலக்கினை அடைவதற்கு பெரிதும் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT