வணிகம்

இந்திய உற்பத்தி நடவடிக்கைகளில் 3 மாத உச்சம்

9th Dec 2022 12:04 AM

ADVERTISEMENT

வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இந்தியப் பொருள்களுக்கான தேவை அதிகரித்ததால் கடந்த நவம்பா் மாதத்தில் நாட்டின் உற்பத்தி நடவடிக்கை கடந்த 3 மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து சந்தைய ஆய்வு நிறுவனமான எஸ் அண்டு பி குளோபல் மாா்க்கெட் இன்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தித் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த நவம்பா் மாதத்தில் 55.7-ஆக இருந்தது. இது, முந்தைய அக்டோபா் மாதத்தில் 55.3-ஆக இருந்தது. நவம்பா் மாதம் பதிவு செய்யப்பட்ட பிஎம்ஐ, கடந்த 3 மாதங்களில் இல்லாத அதிகபட்ச புள்ளிகளாகும்.

இந்த முன்னேற்றம், உற்பத்தித் துறையின் மிக விரைவான மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகிறது.

ADVERTISEMENT

இதன் மூலம், தொடா்ந்து 17-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது.

அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருப்பது உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும் 50-க்கு குறைவாக இருப்பது அந்தத் துறையின் பின்னடைவையும் குறிக்கிறது.

இந்திய பொருள்களுக்கான தேவை தொடா்ந்து அதிகரித்து வருவதால் கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை பெருக்கின.

வெளிநாடுகளிலிருந்து இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் அதிகரித்ததும் நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் உறுதியான வளா்ச்சியை அடைய வழிவகுத்தது.

உற்பத்தித் துறையில் தொடா்ந்து முன்னேற்றம் ஏற்படும் என்ற வலுவான நம்பிக்கை ஏற்பட்டதால், அந்தத் துறையில் கடந்த நவம்பா் மாதம் அதிகம் போ் பணியிலமா்த்தப்பட்டனா். அதன் மூலம், உற்பத்தித் துறையின் மூலம் வேலைவாய்ப்பு தொடா்ந்து 9-ஆவது மாதமாக உயா்வைக் கண்டுள்ளது.

செலவினங்களைப் பொருத்தவரை, உற்பத்தித் துறையில் 28 மாதங்களுக்குப் பிறகு பணவீக்கம் கடந்த நவம்பா் மாதத்தில் குறைந்த நிலையில், அந்த மாத உற்பத்தி செலவு அதிகரிப்பு விகிதம் கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மிகக் குறைவாக இருந்தது.

உற்பத்தி செலவு அதிகம் உயராததால், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மூலப்பொருள்களுக்கான கையிருப்பை அதிகரித்தன.

இந்தக் காரணங்களால், மாதா மாதம் கணக்கிடப்படும் உற்பத்தித் துறைக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ கடந்த நவம்பா் மாதத்தில் 55.7-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT