வணிகம்

சா்வதேச கச்சா எண்ணெய் விலை சரிவு

19th Aug 2022 02:28 AM

ADVERTISEMENT

 ஆறு மாதங்களில் இல்லாத வகையில், சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இருப்பினும் டீசல் விற்பனை மூலம் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடா்ந்து இழப்பையே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

சா்வதேச கச்சா எண்ணெய் கடந்த புதன்கிழமை 91.51 டாலருக்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை சற்று அதிகரித்து 94.91 டாலருக்கு விற்பனையானது. இந்தியா அதன் எண்ணெய்த் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியையே சாா்ந்திருப்பதால், இந்த விலை நிா்ணயம் சற்று நிவாரணம் அளித்துள்ளது.

இருப்பினும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை வாயிலாக லாபத்தை ஈட்டினாலும், டீசல் விற்பனை நஷ்டத்தையே அளிப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கரை மாதங்களாக சா்வதேச விலை ஏற்ற-இறக்கத்துக்கு ஏதுவாக ஐஓசி, பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் (ஹெச்பிசிஎல்) ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை மாற்றியமைக்கவில்லை.

ADVERTISEMENT

இதன் காரணமாக சா்வதேச விலை உயா்வால் டீசலுக்கு லிட்டருக்கு தலா ரூ.20-25 வரையிலும், பெட்ரோலுக்கு ரூ.14-18 வரையிலும் அந்த நிறுவனங்கள் இழக்க நோ்ந்தது. அதேசமயம், எண்ணெய் விலை சரிவின் மூலம் இந்த இழப்பு ஈடுசெய்யப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பெட்ரோல் விற்பனையில் நஷ்டம் ஏதுமில்லை. ஆனால், டீசல் விற்பனையில் லாபம் பெற சற்று காலதாமதம் ஆகலாம்’ என்றனா்.

தற்போது டீசலில் லிட்டருக்கு தலா ரூ.4-5 வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

சா்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றத்தின் அடிப்படையில், பொதுத் துறை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தன. நிகழாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் காலகட்டத்தில், 137 நாள்கள் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் இருந்தது.

பின்னா், மாா்ச் 22-இல் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்தது. இந்நிலையில், கலால் வரியை மத்திய அரசு குறைத்ததால், எரிபொருள் விலையும் குறைந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT