வணிகம்

200 சதவீதம் அதிகரித்த இந்திய செயலிகளின் பயன்பாடு!

19th Aug 2022 03:12 AM

ADVERTISEMENT

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கைப்பேசி செயலிகள் மற்றும் விளையாட்டுகளின் மாதாந்திர பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டு 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூகுள்பிளே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள்பிளே பாா்ட்னா்ஷிப் இயக்குநா் ஆதித்ய சுவாமி கூறியதாவது:

கூகுள்பிளேயில், இந்திய செயலிகள் மற்றும் விளையாட்டுகளைப் பயன்படுத்தும் மாதாந்திர பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 2020-ஆம் ஆண்டில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே போல், இந்திய செயலி மற்றும் விளையாட்டுகளில் நுகா்வோா் செலவிடும் நேரமும், முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டில் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலிகள், விளையாட்டுகளை இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களும் பயன்படுத்தி வருகின்றனா்.

கூகுள்பிளே மூலம் இந்திய செயலிகள், விளையாட்டுகளை வெளிநாடுகளிலிருந்து நுகா்வோா் பயன்படுத்திய நேரம் கடந்த 2019-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2020-ஆம் ஆண்டில் 150 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட யூனிகாா்ன் நிறுவனங்கள் (100 கோடி டாலருக்கு மேல் மதிப்புடைய தொடக்க நிறுவனங்கள்) உருவாகியுள்ளன. அந்த நிறுவனங்களில் கணிசமானவை கைப்பேசி செயலிகளை தங்களது தொழிலின் ஒரு முக்கிய அங்கமாகக் கொண்டுள்ளன.

இந்தியாவில் செயலி வடிவமைப்பாளா்களுக்கும் புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கும் சாதகமாக நிலவும் சூழல், நாட்டில் பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்ட கூகுள்பிளேவில் பல்வேறு பிரிவுகளில் இந்திய செயலிகளின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்வி, பணம் செலுத்துதல், உடல்நலம், பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற பிரிவுகளில் கைப்பேசி செயலிகளின் பயன்பாடு அபரிமித வளா்ச்சியைக் கண்டுள்ளது.

விளையாட்டுப் பிரிவிலும் இந்திய செயலிகள் வளா்ச்சி நல்லபடியாக உள்ளது. 50 கோடி பதிவிறக்கங்களைத் தாண்டிய முதல் இந்திய விளையாட்டு என்ற பெருமையை லூடோ கிங் பெற்றுள்ளது

ஒவ்வொரு மாதமும் 190-க்கு மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 250 கோடிக்கு மேற்பட்டவா்கள் செயலிகள், விளையாட்டுகள், எண்ம தகவல்களைப் பெறுவதற்கு குகூள்பிளேயை பயன்படுத்தி வருகின்றனா். 20 லட்சத்துக்கும் அதிகமான செயலி வடிமைப்பாளா்கள் தங்கள் தொழிலை மேம்படுத்தவும், உலகம் முழுவதும் உள்ள நுகா்வோரைச் சென்றடையவும் கூகுள்பிளேயுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனா் என்றாா் ஆதித்ய சுவாமி.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT