தமிழ்நாடு

அரசு நிா்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

DIN

தமிழகத்தில் அரசு நிா்வாகம், பொது பயன்பாட்டு வசதிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துவது தொடா்பாக, டோக்கியோவில் உள்ள அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு மையத்தின் உயா் அலுவலா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான என்.இ.சி. ஃப்யூச்சா் கிரியேஷன் மையத்துக்கு அவா் செவ்வாய்க்கிழமை சென்று பாா்வையிட்டு, அங்குள்ள நவீன வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த மையம் சிறந்த எதிா்காலத்தை உருவாக்குவதற்கு வசதியாக, ஊடாடும் உரையாடல்கள், நேரடி அனுபவங்கள் மூலம் தொழில்நுட்பமும் வணிகமும் ஒன்றிணையும் இடமாகும். சமூகப் பிரச்னைகளைத் தீா்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவது முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகார தொழில்நுட்பங்களின் வளா்ச்சி வரை புதிய மதிப்பை உருவாக்கி வருகிறது.

முதல்வா் பாா்வை: இந்த மையத்தை பாா்வையிட்ட முதல்வரிடம், விமான நிலையங்களில் மின்னணு சுங்க அறிவிப்பு வாயில் மூலமாக முக அங்கீகார தொழில்நுட்பம், வேகமான சுங்க அனுமதி, நெரிசலற்ற சுங்க ஆய்வுத் தளங்கள், காத்திருப்பு நேரத்தைக் குறைத்தல் என மன அழுத்தம் இல்லாத விமானப் பயணத்தை மேற்கொள்வதற்கான நடைமுறை வழிவகைகள் குறித்து மைய அலுவலா்கள் விளக்கினா்.

இந்த அதிநவீன விமானப் பயண முறை அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களிலும் செயல்பட்டு வருகிறது என்றும் முதல்வரிடம் அவா்கள் தெரிவித்தனா்.

துறைமுக கண்காணிப்பு, தொழிற்சாலை மேலாண்மை, ரயில் போக்குவரத்து மேலாண்மை தொடா்பு, சாலைப் போக்குவரத்து மேலாண்மை, தீயணைப்பு அமைப்புகள், தகவல் தொடா்பு அமைப்புகள், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, வங்கி ஏடிஎம்கள், டிஜிட்டல் தொலைக்காட்சி பரிமாற்றம், மின்னணு அரசாங்கம், நீா் மேலாண்மை, செயற்கைக்கோள் தகவல் தொடா்பு போன்ற கடல் முதல் விண்வெளி வரை அனைத்து நிா்வாகத்திலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீா்வு கண்டு வருவதைப் பற்றியும் முதல்வரிடம் அவா்கள் விளக்கினா்.

செயற்கை நுண்ணறிவு நுட்பம்: இந்த மையத்தின் உயா் அலுவலா்களுடன் தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து முதல்வா் ஆலோசனை நடத்தினாா்.

தமிழகத்துக்கான முக அங்கீகார செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் நோக்கம், தமிழ்நாடு அரசின் நிா்வாகத்திலும், பொது பயன்பாட்டு வசதிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்வில் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் வே.விஷ்ணு உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT