தமிழ்நாடு

தனியார் உணவகத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள்; மக்கள் அச்சம்!

31st May 2023 12:52 PM

ADVERTISEMENT



கோவை: மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியை கடந்து தனியார் உணவகத்திற்குள் இரு காட்டு யானைகள் நுழைந்ததை கண்டு மக்கள் அச்சம் அடைந்தனர். 

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களில் நுழைந்து வருகின்றன. 

அந்த வகையில் திங்கள்கிழமை மாலை பாகுபலி என்று மேட்டுப்பாளையம் பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் யானையுடன் மேலும் ஒரு யானையும் சேர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியேறி, எப்போதும் பரபரப்பாக காணப்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஊட்டி சாலையை கடந்து சாலையின் மறுபுறம் இருந்த தனியாருக்கு சொந்தமான உணவகத்தின் காம்பவுண்டிற்குள் நுழைந்தது. 

பின்னர் அப்பகுதி வழியாக மீண்டும் வனப்பகுதிக்கு செல்ல முயன்ற இரு காட்டு யானைகளும் தனியார் உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் தவித்தன. மேட்டுப்பாளையம் வனத்துறையினரின் முயற்சியால் சற்று நேரத்திற்கு பின்னர் அருகில் இருந்த மற்றொரு பாதை வழியாக மீண்டும் வனப்பகுதியை சென்றடைந்தது. இதனால் ஊட்டி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | சீருடையில் வரும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்: நடத்துனர்களுக்கு உத்தரவு!

எப்போதும் பரபரப்பாகவும், வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் ஊட்டி சாலையை கடந்த இரு காட்டு யானைகளைக் கண்டு அந்த சாலையின் வழியே வந்த வாகன ஓட்டிகளும், மக்களும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:  சமீப காலமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் காட்டு யானைகளின் வலசைப்பாதைகளை மறித்தும், மறைத்தும் கட்டடங்கள் அதிக அளவில் தனியாரால் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியே கான்கிரீட் காடுகளாக மாறி வருவதால் யானைகள் வேறு வழியின்றி ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதே வேளையில் மனித - வனவிலங்கு மோதல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, வனத்துறையினர் யானைகளின் வலசைப்பாதைகளை கண்டறிந்து அப்பகுதியில் இருக்கும் தனியார்களின் கட்டடங்களை இடித்து அகற்றி, அப்புறப்படுத்தினால் மட்டுமே காட்டு யானைகள் எளிதாக வனப்பகுதியின் ஒரு புறமிருந்து மற்றொரு புறம் கடந்து செல்ல இயலும். 

இப்படித்தான் நேற்று முன் தினம் மாலை ஊட்டி சாலையை கடந்த பாகுபலி உள்ளிட்ட இரு காட்டு யானைகள் தனியாருக்கு சொந்தமான உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் தவித்தன. வனத்துறையினரின் முயற்சிக்குப் பின்னரே மற்றொரு பாதை வழியாக மீண்டும் வனப்பகுதிக்கு சென்றன என கூறினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT