தமிழ்நாடு

அரிசிக்கொம்பன் யானை மீண்டும் கேரளத்திற்கு வந்தது!

26th May 2023 11:38 AM

ADVERTISEMENT

கம்பம்: தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் குமுளிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த அரிசிக்கொம்பன் யானையை தேக்கடி வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அரிசிக்கொம்பன் யானை பல ஆண்டுகளாக மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நடமாடியது. வீடு, கடைகள், வாகனங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் 10 பேர்களை தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து முல்லைப்பெரியாறு அணை வனப்பகுதியான பெரியாறு புலிகள் காப்பக பகுதிக்கு அனுப்பினர். அரிசிக்கொம்பனை பிடிக்கும்போது ரேடியோ காலர் எனப்படும் ஜிபிஎஸ் கருவி பொருத்தி அனுப்பினர். அதனடிப்படையில் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

பெரியாறு புலிகள் காப்பகத்திலிருந்து அருகே உள்ள தமிழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு அரிசிக்கொம்பன் இடம் பெயர்ந்ததாக ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டறியப்பட்டது. மேலும் சுற்றுலா தலமான ஹைவேவிஸ் பகுதியில் நடமாடியதால் சின்னமனூர் வனச்சரகத்தினர் சுற்றுலா பயணிகள் வர தடைவிதித்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரிசிக்கொம்பன் மீண்டும் பெரியாறு புலிகள் காப்பக நுழைவு வாயிலான குமுளிக்கு வந்தடைந்தது கண்டறியப்பட்டது. அதனால் தேக்கடி வனச்சரகத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டதில் மக்கள் வசிப்பிடமான குமுளி ரோசாப்பூ கண்டம் அருகே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

வனத்துறையினர் பட்டாசு மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி அரிசிக்கொம்பனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட்டதாக தெரிவித்தனர். இதில் குமுளி வனப்பகுதி அருகே வசிக்கும் மக்கள் தற்போது அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT