தமிழ்நாடு

கள்ளச்சாராய விற்பனை: 5 காவலர்கள் பணியிடைநீக்கம்

24th May 2023 05:54 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கண்ணமங்கலம் சிறப்பு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்நாதன், தானிப்பாடி காவலர்கள் நிர்மல் மற்றும் சிவா, செங்கம் காவலர் சோலை, சேத்துப்பட்டு காவலர் ஹரிஹர ராஜநாரயணன் ஆகிய 5 பேரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை மரக்காணம் காவல் துறையினர் விசாரித்து, சாராய வியாபாரிகளான மரக்காணத்தைச் சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் வழங்கிய புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி, சென்னையிலிருந்து  மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியைச் சேர்ந்த பிரபு ஆகிய 11 பேரைக் கைது செய்தனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அலுவலராக ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து  எக்கியார்குப்பம் கிராமத்தில் மீனவக் கிராமங்களைச்  சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் 3 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்தனர்.

இதையும் படிக்க: சாலை விபத்துகள்: 4 மாதங்களில் 4,900 பேர் பலி!

இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வழக்கில் கைதான 11 பேரையும் சிபிசிஐடி போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். யாரேனுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா, யாரேனும் மனநலன் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா என விசாரித்த, நீதிபதி எம்.புஷ்பராணி, 11 பேரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். வெள்ளிக்கிழமை (மே 26) மாலை 5 மணிக்கு அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT