தமிழ்நாடு

விழுப்புரம் அருகே பழிக்குப்பழியாக இரு ரௌடிகள் வெட்டிக் கொலை!

10th Jun 2023 01:33 PM

ADVERTISEMENT


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ரௌடிகள் இருவர் சனிக்கிழமை காலை மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாநிலம், பிள்ளையார்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண் (32). இதுபோல புதுச்சேரி கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அன்பரசன்(28). ரெளடிகளான இருவரும் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம், வானூர் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமின் பெற்று கையெழுத்திட்டு வந்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை பைக்கில் வானூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக இருவரும் பிள்ளையார்குப்பத்திலிருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

லிங்கரெட்டிப்பாளையம் வழியாக தமிழகப் பகுதியான செங்கமேடு பகுதியில் இருவரும் சென்றுகொண்டிருந்த போது, 3 பைக்குகளில் வந்த 7 பேர் இருவரையும் வழிமறித்து அவர்களது பைக்குகள் மீது தங்களது பைக்குகளை மோதவிட்டனர். இதில் நிலைத்தடுமாறி சாலையோரத்தில் விழுந்த அன்பரசனை அந்த கும்பல் வெட்டி சாய்த்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருண் அங்கிருந்து தப்பியோடினர். சுமார் 2 கி.மீ. தொலைவு ஓடிய அருணை அந்த கும்பல் துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வானூர் காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார், சடலங்களைக் கைப்பற்றினர் உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி. சஷாங்க் சாய் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் புதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் அருண், அன்பரசன் தொடர்புடையவர்கள் என்பதும், அந்த கொலையில் பழிக்குப்பழிவாங்கவே தற்போது கொலை நிகழ்ந்துள்ளது என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT