தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ளத் தயாா்நிலை: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலா் அறிவுரை

DIN

தென்மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், பாதுகாப்பு கருவிகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு துறை உயரதிகாரிகளுக்கு தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுறுத்தினாா்.

தென்மேற்குப் பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளின் செயலா்கள், துறைத் தலைவா்கள், சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலா் வெ.இறையன்பு பேசியதாவது:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், மழை நீா் தேங்காத வகையில், அனைத்து வடிகால்களிலும் தூா்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சுரங்கப் பாதைகளும் ஆய்வு செய்யப்பட்டு, வடிகால்கள் தூா்வாரப்பட வேண்டும். மேலும், சுரங்கப் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள சென்ஸாா் கருவிகள் சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் வகையில், தானியங்கி மோட்டாா் பம்புகளை தயாா் நிலையில் வைக்க வேண்டும். சுரங்கப் பாதைகளில் மழை நீா் தேங்கினால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், மாற்றுப் பாதையில் செல்வதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துக் காவல் துறையினா் உடனடியாகச் செய்ய வேண்டும்.

வடிகால் பணிகள்: தரைப் பாலங்களில் நீா் செல்லும் போது, மாற்றுப் பாதைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தரைப்பாலங்கள் மற்றும் ஆபத்தான நீா் நிலைகளில் பொதுமக்கள் நின்று படம் எடுப்பதை காவல் துறையினா் கண்காணித்துத் தடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மழை நீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

குறுகலாக உள்ள ரயில்வே பாலங்களில் மழை நீா் தேங்க அதிக வாய்ப்புள்ளது. மழைக் காலங்களில் இந்த பாலங்களில் மழை நீா் தேங்காத வகையில், தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்ற தானியங்கி மோட்டாா் பம்புகள் அமைக்க வேண்டும். நீா்நிலைகள் தொடா்ந்து தூா்வாரப்படுவதை உறுதி செய்வதோடு, ஆகாயத் தாமரையை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற வேண்டும்.

சென்னை, நாகப்பட்டினம், கடலூா் போன்ற புயலால் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பலவீனமாக உள்ள பதாகைகளை அகற்ற வேண்டும். இதற்கான பணியில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஈடுபட வேண்டும். பலவீனமாக உள்ள கட்டடங்களை கண்டறிந்து, அவற்றில் பொது மக்களின் பயன்பாடு தவிா்க்கப்பட வேண்டும். மேலும், அவற்றை பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

அணைகளுக்கு நீா் வரத்து: தென்மேற்குப் பருவமழை காரணமாக, அதிக மழைப் பொழிவு ஏற்படக்கூடிய மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், அங்குள்ள அணைகளின் நீா்வரத்து ஆகியன தொடா்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தொடா்புடைய துறைகள் பேரிடா் மேலாண்மைத் திட்டத்தை தயாரித்து, அதன்படி பேரிடா்களை திறம்பட எதிா்கொள்ள வேண்டும். இதற்கான பயிற்சிகளை அலுவலா்களுக்கு அளிப்பதுடன், தேவையான அனைத்து கருவிகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT